Tuesday 31 December 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் 
இனிய 
புத்தாண்டு வாழ்த்துகள்

Saturday 28 December 2013

பிள்ளைக்கு அப்பன் யாரு...

பெண் மருத்துவர்: பிள்ளைக்கு அப்பன் யாரு? அவரை உம்மோட சேர்த்து வைக்கிறேன். கருக்கலைப்புச் செய்வது நல்லதல்ல.

பெண் நோயாளி: மாதவிலக்கு வந்து முழுகி ஓரிரு நாட்களில் கூடினால் பிள்ளை பிறக்காது என்று பலரோட கூடினேன். மாதவிலக்கு வராமையால் இஙகை வந்தேன். இங்க "பிள்ளைக்கு அப்பன் யாரு?" என்று கேட்டால் நான் எங்கே போவேன்!

பெண் மருத்துவர்: ஆண்கள் ஓடி ஒளிஞ்சால், பெண்கள் தானே சுமை தாங்கிகள்! இதை முதல்ல படிச்சிருக்கணும். நாளெண்ணிக் கூடி, தாலி கட்டிய கணவருக்குக் கேடு வைக்கலாமோ? கருக்கலைப்பு உடலுக்குக் கேடு என்று தெரியாதா?

பெண் நோயாளி: கெட்ட எண்ணம் தந்த பட்ட கேட்டை மறைக்கவாவது கருக்கலைப்புச் செய்து விடுங்க... யாரும் ஒரு இளிச்சவாயன் அகப்பட்டால், நான் தலையை நீட்டிப் போடுவேனே!

தெருக்கடை உணவு

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

ஞாயிற்றை நாடும் பூ

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

கள்ளுக் குடியை நிறுத்த...


மாலை நேரம் தெருவில நம்மாளுகள் கூடி நாட்டு நடப்புப் பேசுவாங்க... அப்படி ஒரு மாலைப் பொழுதில் இப்படி ஒரு உரையாடல்:

வெடியர் : நம்மாளுகள் கள்ளுக் குடிப்பதை நிறுத்த நல்ல வழியைக்
காட்டுவீர்களா?

குண்டர் : இதென்ன ஒரு சின்ன வேலை. குடிப்பவர்களைச்
சிறையில் அடைத்தால் போச்சே!

வெடியர் : இதெல்லாம் அரசுக்குப் பெரிய செலவைத் தருமே!
ஆகையால், செலவில்லாத வழியைக் கூறுங்களேன்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுப் பறிக்கும் சீவல்
தொழிலாளர்களுக்கு இலவசமாகக் கணினி படிப்பித்து, மாற்றுத்
தொழிலை வழங்கினால் போச்சு.

வெடியர் : அப்ப குடிகார ஆட்கள் என்ன செய்வினம்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுக் குடித்த பின்னர் "தொம்"
என்று விழுவினம்.....

கள்ளுக் குடியென்ன, அற்ககோல் கலந்த தண்ணீர்க் குடியென்ன சூழல் மாற்றத்தாலேயே கட்டுப்படுத்த முடியும்.

ஆட்சியால இறங்கியும்...

ஒருவர் : ஆட்சியால இறங்கியும் ஆட்கள் வெளிநாடு சுற்றுகினமாம்...

மற்றவர் : ஆட்சியால இறங்கினாலும் சுருட்டிய பணம் அவங்கட மடியிலிருந்து இறங்கி முடியலையே!

ஆட்சிகள் மாறியும்...

ஒருவர் : ஆட்சிகள் மாறியும் தெருவெளி ஏழைகளுக்கு முன்னேற்றம் இல்லையே!

மற்றவர் : இலவசங்களுக்காகவும் பணத்துக்காகவும் வாக்குப் போட்டால் இப்படித்தான்.....

கட்சித் தாவல் இல்லாமலே...

ஒருவர் : எல்லோரும் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மாறும் போது, நீங்க மட்டும் தொடர்ந்து எதிர்கட்சியில் இருப்பது சரியா?

மற்றவர் : சரிதான்! ஆளும் கட்சி எது வந்தாலும் எமக்குக் கையூட்டுத் தராவிடில்,  நாம் எதிர்ப்போமல்ல...

ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பாங்களோ?

முதலாமாள் : தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவது சரியா?

இரண்டாமாள் : பிழை தான்...

முதலாமாள் : அப்ப ஏன் அப்படிப் பேசிறியள்?

இரண்டாமாள் : அப்படிப் பேசாட்டிலும் மதிக்கமாட்டாங்களே!

முதலாமாள் : அது பிழையே...

இரண்டாமாள் : எப்படிச் சொல்லுவியள்?

முதலாமாள் : நீங்க மக்களுக்கு நல்லதைச் செய்யாட்டி மதிக்கமாட்டாங்களே! பிறகேன் ஐயா, பிழையான ஆங்கிலம்?

Friday 20 December 2013

காதல் நாடகம்


(நிறுவனமொன்றில் முதலாளியின் அறையினுள்...)
பெண்ணின் தந்தை : வணக்கம் ஐயா!
என்னுடைய மகள்
மணமுடிக்க மறுக்கிறாளையா!

ஆணின் தாய் : வணக்கம் ஐயா!
என்னுடைய மகனும்
மணமுடிக்கப் பின்னிற்கின்றான் ஐயா!

முதலாளி : உங்கட பிள்ளைகளுக்க
காதல் நோய் பிடிச்சிடுச்சோ?

ஆணின் தாய் : எத்தனையோ பெண்கள்
வரிசையிலே முண்டியடிக்க
உந்தாளின்ர மகளை
என்ர மகன் விரும்புவானே!

பெண்ணின் தந்தை : எந்தவொரு ஆணையும்
நிமிர்ந்தும் பார்க்காத என்ர மகள்
உந்தாளின்ர மகனை விரும்புவாளே!

முதலாளி : உங்கட பிள்ளை வளர்ப்பு
எனக்கு வேண்டாம்...
நிறுவனத்துக்குள்ளே
காதல் பண்ண இயலாது...
உங்கட வீடுகளில
நீங்கள் எதையாச்சும்
பண்ணியிருக்கலாமே!

பெண்ணின் தந்தை : வெளியில எவரையும்
விரும்பியிருக்கிறாளோ என்று
பணியாளர்களுக்குள்ளே கேட்டால்
தெரிய வருமெனத் தங்களை நாடினேன்!

ஆணின் தாய் : நானும்
அப்படித்தான் பாருங்கோ
உங்களை நாடினேன்!

முதலாளி
(பெண்ணைக் கூப்பிட்டு) : ஏன் காணும்
மணமுடிக்க மாட்டேனென்று
சினுங்கிறியாமே!

பெண் : மணமுடித்தால்
இளமையும் அழகும்
கெட்டிடுமேயென அஞ்சி
காலம் தள்ளுகிறேன் ஐயா!

ஆணின் தாய்
(தனக்குள்ளே) : என்னையும் என் வீட்டையும்
நன்றாகப் பேணக் கூடியவள் போல...

முதலாளி
(ஆணைக் கூப்பிட்டு) : என்னடாப்பா
மணமுடிக்க மாட்டேனென்று
காலம் கடத்துறியாமே!

ஆண் : நாலு காசு
சேமிச்சு வைச்சுப்போட்டு
இறங்கலாமென்றுதான் ஐயா!

பெண்ணின் தந்தை
(தனக்குள்ளே) : கண்ணை இமை காப்பது போல
என்ர மகளையும்
பார்க்கக் கூடியவன் போல...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) :தங்கமான
பிள்ளைகளைப் பெத்துப்போட்டு
என்னையும்
விசாரிக்க வைச்சுப்போட்டு
நாடகமாடுறியளே!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : ஐயா!
எங்களை மன்னிக்கவும்
இந்தக் காலப் பிள்ளைகள்
பணி செய்யுமிடங்களிலே
பலரோட பழகேக்க
யாரையேனும்
விரும்பியிருக்கலாமென
அஞ்சி வந்தோம்...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) : நடந்து முடிந்தது
உள்ளத்தை விட்டு அகலாதே...
அறியாமல் தெரியாமல்
பிள்ளைகளையும் விசாரிச்சாச்சு...
என் மீதும்
அவங்கள் ஐயப்படலாம்...
அதனால,
நானே
அவங்களோட பேசி
மணமுடிக்க வைக்கிறன்...

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : அவங்க விரும்பினால்
செய்து வையுங்கோ
ஐயா!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும்
(தமக்குள்ளே) : எப்படியோ
திருமணம்
ஒப்பேறினால் போதுமே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
நேரிலே கூப்பிட்டு) : 25 - 35 இற்குள்ளே
மணமுடித்தால் தான்
நலமான வாழ்வமையும்
28 இல கட்டினதால
இன்றைக்கு - எனக்கு
எட்டுப் பிள்ளைகளப்பா
பெற்றவர்கள் கிழடானால்
பயனில்லைப் பாரும்
மறுப்பின்றி
மணமுடிக்க "ஓம்" போடுங்கோ!

பெண் (தனக்குள்ளே) : ஊதுகுழல் ஊதியோ
கண்ணெதிரே கண்ணடித்தோ
குறுணிக் கல்லெறிந்தோ
தங்க நகை மின்ன
உந்துருளியை(motor bike) நிறுத்தியோ
உதையுருளியில்(bicycle) பின் தொடர்ந்தோ
திரைப்பட நடிகர்கள் போல
துரத்திப் பிடித்தோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
"என்னைக் காதலி" என்று
கேட்காத நண்பரே
ஒரே பணித்தளத்தில்
தூரத் தூரப் பணி செய்தும்
உணவுண்ணும் அரங்கில்
சந்திக்கின்ற போதும்
பழகிய அன்பும்
காட்டிய பண்பாடும்
"உன்னைக் காதலி" என்று
என்னைத் துாண்டுகிறதே!

ஆண் (தனக்குள்ளே) : அழகு நடை காட்டியோ
புதிய புதிய ஆடைகள் அணிந்து
அடிக்கடி ஆடியாடி வந்தோ
ஐயம்(doubt) கேட்பது போல
கதைத்துப் பேச நாடியோ
தாளில் ஏவுகணை(rocket) விட்டோ
ஈயும் மென் நாரால் (rubber band)
பூவரச இலைக் காம்பை
மடித்து எய்து விட்டோ
அடிக்கடி அருகே வந்து
மார்பில் கை வைத்துக் காட்டியோ
போகும் வழியில் போவது போல
சற்று இடுப்பாலே இடித்துப் போட்டு
"மன்னிக்கவும்" என்று சொல்லிப் போயோ
மதிய உணவை விட்டிட்டு
அப்படியே வந்துட்டேன் - அந்த
அன்னம் கடையில ஒரு பொதி
எடுத்துத் தாருமேனெனக் கெஞ்சியோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
என்னுள்ளத் தாழ்ப்பாளை
திறக்க முயற்சிக்காமல்
பண்பாகத் தூர நின்றே
இனிமையாகப் பேசுங்கிளியே
உன்னை ஏற்கத்தான்
உள்ளம் விரும்புகிறதே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : ஊமையாகத் தரையைப் பார்த்து
கால் விரல்களை எண்ணுறியளோ...
ஓமோ இல்லையோ
உங்கட விருப்பத்தைக் கூறுங்களேன்?

ஆண் (பெண்ணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

பெண் (ஆணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : பெற்றவர்களுக்கு விருப்பம் என்றால்
எங்களுக்கும் ஓம்!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : வருகிற மாதம் முதலாம் நாள்
என்னுடைய செலவிலே
உங்களுக்குத் திருமணம்!
ஆனால்,
காதலிக்காமல் திருமணமா?

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : திருமணமாகிய பின் மலரும்
காதலே
மகிழ்வைத் தருமென
பாவரசர் கண்ணதாசன்
சொல்லி வைச்சிருக்கிறாரே!

(முதலாளி எல்லோருக்கும் கற்கண்டு வழங்கி மகிழவும்
முதலாளியின் அறையிலிருந்து எல்லோரும் வெளியேறினர்...)

ஏட்டிக்குப் போட்டி - 02

குருட்டு முத்தம் குடுத்துக் காட்டுறாள்
கிட்ட நெருங்கினால் கையைக் குலுக்கிறாள்
விடுதிக்கு வாங்க என்று இழுக்கிறாள்
உண்டு முடிய ஓடியே மறையிறாள்
"காளையவன் கடையிலே உழுந்தாட்டுறான்..."

ஏளையவள் எப்பன் அவனை நம்பினாள்
காளையவன் அவளிடம் காதல் செய்தான்
வாழ்நாள் துணையென அவளுமொத்து உழைத்தாள்
நாட்களோட அவளுடலும் குழந்தையைச் சுமக்கிறதே
"தேடினால் ஐந்து பிள்ளைக்கு அப்பனவன்..."

ஏட்டிக்குப் போட்டி - 01

ஏழடி மன்னன் காலடி வைத்தானங்கே
மூக்குமுட்ட நல்லாய்க் குடித்தும் இருப்பான்
வெளியே வந்ததும் வழிநடுவே வீழ்ந்தான்
உடைநழுவிக் குடிமணமும் காற்றோடு பறந்தன
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

ஆறடி உயரம் சேற்று நிறமாள்
பூச்சுத் தண்ணீர் பூசியதால் நாறுமுடல்
அணிந்த ஆடையோ அரையும் குறையும்
கேட்டுப் பாரேன் தான் தமிழிச்சியாம்
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

அரசே கேள் – 04

மகாத்மா காந்தித் தாத்தா
உள்நாட்டு உற்பத்திக்கு உயிரூட்டவே
உள்ளூர் கைத்தறி (கதராடை) ஆடை
அணிந்ததைப் பார்த்தாவது
ஆட்சிக்கு வரும் நம்மாளுகள்
வெளிநாட்டு
இறக்குமதிகளைக் குறைத்தலாவது
நம் நாட்டு
உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கலாமென
ஆச்சி, அப்பு சொல்லுறது சரியே!
மனித வளங்களை
முறையாகப் பயன்படுத்தாமையால்
மூளைசாலிகள் வெளியேறவோ
பொருண்மிய வளங்களைப் பேண
நம்மாளுகளை விடாமையால்
வெளிநாட்டார் உறிஞ்சிக் கொள்ளவோ
இடமளிக்கின்ற
ஒழுங்காக நாட்டை
ஆளமுடியாத முட்டாள்களால்
நாடும் நாட்டு மக்களும்
பிச்சைக்காரர்களாக மாறுவதாக
ஆச்சி, அப்பு சொல்லுவதை
நினைவூட்ட முனைகிறேன்!
ஓ! அரசே!
அ, ஆ அதற்கு மேலும் படித்த
பழம் தின்று கொட்டை போட்ட
பட்டறிவிலும் பெரிய
ஆச்சி, அப்பு சொற்படி
மனித வளங்கள்
நாட்டைப் பேணவும்
பொருண்மிய வளங்கள்
நாட்டு மக்கள் பயனீட்டவும்
இடமளிக்காமல்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 03

படிச்ச தலைகள்
தெரு வழியே அலைவதேன்?
பெருந் தலைகள் சிலர்
சிலருக்கு வேலை வழங்குவதாலே!
குற்றவாளி தெரு வழியே அலைய
சுற்றவாளி சிறையில் வாடுவதேன்?
கையூட்டு வேண்டி
காவற்றுறையும் சட்டவாளர்களும்
உழைத்துப் பிழைப்பதனாலே!
எல்லோரும் குடும்பப் படமென
பொழுது போக்குக்காக
திரைப்படம் பார்க்கப் போனால்
படமாளிகைக்காரர்கள்
நீலப்படம் போட்டுக் காட்ட
தகாத உறவில் ஈடுபட்டதாக
இளசுகள்
காவற்றுறையில் பிடிபடுவதேன்?
படமாளிகைகளை
அரசு கண்காணிக்கத் தவறுவதாலே!
ஒரு கோடியில் விலைப் பெண்கள் அறை
மறு கோடியில் புகைத்தல், குடித்தல் அறை
எதிர் முன்னே கூத்தாடும் அறை
வெளியேறும் வழியில் தள்ளாடும்
நம்மாளுகளைப் பார்க்கக்கூடியதாக
குட்டித் தேனீர்க்கடை தொட்டு
5 நட்சத்திர விடுதிகள் வரை
அமைத்திருப்பதேன்?
வருவாயை நோக்காகக் கொண்டு
அரசு அனுமதி வழங்கியதாலே!
மதுக் கடைக்கும்
விலைப் பெண்கள் விடுதிக்கும்
சென்றவர்களுக்கு வாழ்வழிக்கவா
கன்னிப் பெண்கள் கருக் கலைக்கவா
போலி மருத்துவர்களும்
குட்டிக் குட்டி மருத்துவ நிலையங்களும்
தெரு வழியே மலிந்து கிடக்கிறது?
சாகத் துடிக்கும் மக்களைப் பாராமல்
வருவாயிலே குறியாயிருக்கும் அரசாலே!
ஓ! அரசே!
நாடு சீர்கெட்டு
நாட்டு மக்கள் சாக
உன் வருவாயைப் பார்த்து
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 02

அப்பா, அம்மா
இனிப்பு வேண்டித் தந்து
அழாமல் பள்ளிக்குப் போய்ப் படியென
முன்னர் முன்பள்ளிக்கு அனுப்பினர்!
வாய்க்குள் உமிந்த இனிப்பை
பக்கத்துத் தோழி பறித்து
தன் வாய்க்குள் போட்டு உமிய
எங்கள் படிப்பும் முன்னேறியது!
ஆளும் வளர அறிவும் வளர
முன்பள்ளியால
பெரிய பள்ளிகளுக்குப் போக
பல இடத்துப் பல நட்புகள்
ஒன்று சேர்ந்த போது தான்
ஒழுக்கச் சீர்கேடு என்றால்
என்னவென்று
கற்றுத்தேற முடிந்தது!
ஒருவன்
உடன் பறித்த ஆண் பனைக் கள்ளை
குளிர் நீர்க் குவளையில் கொண்டு வருவான்...
அடுத்தொருவன்
பொன்னிலைச் சுருட்டுகளுடன் வருவான்...
இன்னொருவன்
ஆடைகளைக் களைந்தவர்களின்(நிர்வாணிகளின்)
படங்களுடன் வருவான்...
வகுப்புக்கு ஆசிரியர் வராவிடில்
இவர்களின் நிகழ்வுகள் தொடரும்
இவர்களின் தொல்லை தாங்காமல்
சிலர்
பள்ளி மர நிழலின் கீழ்
படிக்கவோ காதலிக்கவோ முயல்வர்...
பள்ளிக்குப் போகேக்கையும்
வீட்டுக்குத் திரும்பேக்கையும்
இருபாலாரின் தொல்லைகள் ஏராளம்...
இவையெல்லாம்
பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கண்டிராத வகையில் நடந்தேறும்!
ஓ! அரசே!
புகைத்தல், குடிப் பொருள்,
ஆடைகளற்றவர் படங்கள் விற்பனைக்கும்
விலைப் பெண்கள் தெருவில் நடமாடவும்
அனுமதிப் பத்திரம் வழங்கினால்
மக்கள் சீர்கெட்டு உன்னை உதைக்க
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 01

அம்மாவின் வயிற்றை உதைத்து உதைத்து
ஒருவாறு
அம்மா பிறந்த மண்ணில் தவழ்ந்தேன்!
அன்பு எனும் தேன் கலந்து
அறிவு எனும் செந்நீர் கலந்து
பாலூட்டி வளர்த்த
அம்மாவின் கைகளை உதறித் தள்ளி
நடக்கத் தொடங்கியதும்
ஒழுக்கம் எனும் பாடம் புகட்டி
கைக்குள் அணைத்து அன்பு காட்டி
அப்பாவும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்!
அந்தப் பள்ளி, இந்தப் பள்ளி, எந்தப் பள்ளி
எதுவானாலும்
ஆசிரியர்கள் ஊட்டிய அறிவை
நாள்தோறும் மீட்டு மீட்டு
தேர்வு எழுதிச் சித்தியும் அடைந்தாச்சு!
சான்றிதழ்க் கட்டும் கையுமாக
நாடெங்கும் நடைபோட்டும்
வேலை எதுவும் கைக்கு எட்டவில்லையே!
ஓ! அரசே!
வேலையில்லாதோர் நாட்டில் மலிந்தால்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

இந்திய தமிழக மக்களிடமிருந்து...

இலங்கை அரசு
புலிகளை அழிக்கப் போர் செய்தது...
ஆனால்,
தமிழ் மக்கள் மீது பற்றுக் காட்டவில்லை!
தொண்டு நிறுவனங்களின் உதவிதான்
தமிழ் மக்கள்
ஒரு வேளையாவது உணவுண்ண
வழிகாட்டியது!
உணவு சமைக்கும் போது
கை தேடும் பொருள்
உள்ள உறையில்(பையில்)
"இந்திய தமிழக மக்களிடமிருந்து..." என்று
எழுதப்பட்டிருந்தது!
போரில் பாதிப்புற்ற
ஒவ்வொரு
இலங்கைத் தமிழர் உள்ளங்களிலும்
இந்திய தமிழக மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

இந்திய தமிழக சென்னையில்...

வானுயர
மாடிவீடுகள் எழும்புகிறது - அங்கு
வாழ்வோரின்
வாழ்க்கைத் தரமும் உயருகிறது - ஆனால்
தெருக்களில்
ஒன்றரையறைக் குடிசைகளும் இருக்கிறது - அங்கு
வாழ்வோரின் தரமுயர
உதவுவார் யாருமில்லையே!
கீழ்தட்டு மக்களுயர வழியே இல்லையா?

கத்திரியை விரட்ட

2011 சித்திரை உச்சந் தலை பிளக்கும் வெயில் காலத்தில நான் சென்னைக்குப் போயிருந்தேன். அப்பதான் ஈழத்தில 'காண்டாவனம்' என்று சொல்லப்படும் கடும் வெயிலை; இந்தியாவில, தமிழ்நாட்டில 'கத்திரி' வெயில் என்கிறாங்க என்று படித்தேன். உடனே இப்படி ஒரு காட்சி உரையாடலை எழுதினேன்.

வகுப்பறையில:
ஆசிரியர் : கத்திரியை விரட்ட என்ன செய்யலாம் பிள்ளைகளே?

மாணவன் : சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலை இருபக்கத்திலும் உள்ளது போல நிழல் தரும் மரங்களை நாட்டப் போராட வேண்டும்.

ஆசிரியர் : நாடெங்கிலுமா?

மாணவன் : உலகெங்கிலுமையா

தெருவெளியில:
மாணவி : 'கத்திரி' வெயில் என்கிறாங்க... தலையை பிளக்கும் வெயில் என்கிறாங்க... ஆனால், ஆண்கள் தான் அதிகம் தெருவில உலாவுறாங்களே...

மாணவன் : ஆண்களின் பார்வைக்கு மட்டும் பெண்களின் கண்களில் குளிர்மை தெரியுமாம். பெண்களைப் பார்த்தாலே 'கத்திரி' வெயில் சுடாதாம்.

மாணவி : 'கத்திரி' வெயில் சுடாதாமா? தெருவால போறதை மறந்து பெண்களைப் பார்த்து அடிபட்டுச் சாவது ஆண்களே!

உண்மையில, இப்படி நாடகம் போட்டுக் 'கத்திரி' வெயிலை விரட்ட முடியாதுங்க... முடிந்தால் மரநடுகை இயக்கம் தொடங்கலாமுங்க...

Sunday 1 December 2013

எல்லாம் பொழுதுபோக்கிற்காக...


முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?

இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...

(சில மாதங்களின் பின்)

முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?

இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...

முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?

ஐயோ! என்னை மன்னிக்கவும்!


இலக்குவன் தன் வீட்டு வாசலடியில் நாளேடு படிக்கையில் தரகர் ஒருவர் வந்தார். இலக்குவனுக்கென்ன நல்ல உழைப்பு, நல்ல வருவாய், பிழைப்புக்குக் குறைவில்லை.

தரகர் : என்ன காணும் உங்கள் (ஜாதகக்) குறிப்பைத் தாருங்கோவேன்... நல்ல வசதியான இடமொன்று வந்திருக்கு. விட்டால் பறந்து போய்விடும்.

இலக்குவன் : கண்ணகியோ சீதையோ இஞ்ச வாங்கோவேன்...

கண்ணகியும் சீதையும் : என்னங்க இப்படி வேகமாய் கூப்பிடுறியள்...

இலக்குவன் : நல்ல இடமாம்... விட்டால் பறந்திடுமாம் என்று என்ர குறிப்பையெல்லோ தரகர் கேட்கிறாருங்கோ...

கண்ணகியும் சீதையும் : பெரியவரே கொஞ்சம் எழும்பும் காணும்!

தரகர் : என்னங்க உடனேயே எழும்பச் சொல்லிப்போட்டீங்க...

கண்ணகியும் சீதையும் : முன்னைப் பின்னை ஊருக்குள்ளே இவரைப்பற்றி அறிஞ்சனீரே?

தரகர் : ஆளுக்கென்ன குறை... மாதம் அறுபது ஆயிரங்கள் உழைக்கிறாராம்... வெற்றிலைப் பாக்கு, புகையிலை, குடிவெறி, காதல், கள்ளப் பெண்டிர் ஏதுமில்லாத் தங்கக்கட்டி!

கண்ணகியும் சீதையும் : எங்களைப் பற்றி அறிஞ்சீரோ?

தரகர் : எனக்குத் தெரியாமல் போச்சே... நீங்க யாருங்க...

கண்ணகியும் சீதையும் : உங்கட தங்கக்கட்டியைக் கேட்டிருக்கலாமே...

தரகர் : அதைத் தான் பிள்ளையள், நானும் மறந்திட்டேன்!

கண்ணகியும் சீதையும் : இனியாவது நினவில வைச்சிருங்கோ... நாங்க தான் இந்தத் தங்கக்கட்டியின்ர இரண்டு பெண்டாட்டிகள்... இவருக்கு மூன்றாம் பெண்டாட்டி வேணாமுங்க...

தரகர் : ஐயோ! என்னை மன்னிக்கவும்! இனிமேல் இந்தப் பக்கம் தலை காட்ட மாட்டேனுங்க...

"உதுக்குத் தான் பாருங்கோ, ஆளமறிந்து காலை வைக்கவேணும்" என்று சொல்லியபடி குதிக்கால் பிடரியில் பட தரகர் ஓட்டம் பிடிக்கிறார்.

கல்வி


கல்வி என்பது
சான்றுத் தாள்களின்
எண்ணிக்கையில் அல்ல...
கல்வி என்பது
பெயருக்கு முன்னோ பின்னோ போடும்
தகுதிகளின் (அடைமொழி, பட்டம்)
எண்ணிக்கையில் அல்ல...
கல்வி என்பது
குறித்த கல்வியைப் பெற்று
பயனடைந்தவர்களின் எண்ணிக்கையிலேயே
தங்கியிருப்பதை மறவாதீர்கள்!

கோட்பாடுகள் (தத்துவங்கள்)


தேவை வரும் போது தான்
மனிதன் தன் மூளைக்கே
வேலை கொடுக்கின்றான்!
பிரிவு வந்த பின்னர் தான்
மனிதன்
பிரிந்தவர் செய்த நன்மைகளைக் கூறி
அழுது துன்பப்படுகிறான்!
வயிறு கடிக்கையில் தான்
மனிதன்
தொழிலின் அருமை பற்றி
அறிந்து கொள்கின்றான்!
தொழிலைத் தேடும் போது தான்
மனிதன்
தான் கற்க மறந்ததை
நினைவூட்டிக் கற்கின்றான்!
ஊரார்
ஒதுக்கி விட்ட போது தான்
மனிதன்
தன் ஒழுக்கத்தை
கொஞ்சம் சரிபார்க்கின்றான்!
நீங்கள்
எப்படிப் போய் எங்கு வந்தாலும்
தவறு செய்த பின்னரோ
பாதிப்பு அடைந்த பின்னரோ
தானே தெளிவடைகின்றீர்கள்!
நீங்கள்
எதிர்பார்க்கும் வண்ணங்களில்
உங்கள் எண்ணங்களை
இப்படி இருந்தால்
எப்படி இருக்குமெனச் சரிபாருங்களேன்!
கோட்பாடுகள்(தத்துவங்கள்)
ஒரு போதும் பொய்ப்பதில்லையே!

சம்பள நாளன்று...


அழகான அந்த ஊரில் அறிஞர் வாசிகசாலை அருகே நாற்சந்தி. அச்சந்தியில் இளசுகள் கூடிக் கூத்தடிப்பாங்க... அவங்கள் போட்ட நாடகமிது.

ஒருவர் : உந்த வீடென்ன செத்த வீடோ?
                     அங்கே ஆட்களாயிருக்கே...

மற்றவர் : அவங்கட வீட்டிலையா...
                        இன்றைக்குச் சம்பள நாளெல்லோ...
                        கடன் கொடுத்தவங்க
                        காசு பறிக்க வந்து நிக்கிறாங்கோ...


மூன்றாமாள் : சம்பளம் எடுக்கிறதும் கடன்காரரைச் சமாளிக்கிறதும் மாதமாதம் வந்துவிடுமே...

நான்காமாள் : கடன்காரரும் சம்பள நாளும் இப்படித்தான்

இப்படித்தான் சந்திக்குச் சந்தி கூத்தடிப்பவங்க... தங்கட எதிர்காலத்தையும் சிந்தித்தால் கோடி நன்மைகள் கிட்டுமே!