Thursday, 26 September 2013

ஒளி காட்டும் வழி

விடிகாலை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து
அரப்பு, எலுமிச்சை அவித்துத் தோய்ந்து
மஞ்சள் அப்பிக் கோடி(புத்தாடை) உடுத்துத் தொடங்கிய
தீபாவளியைப் பற்றி எவருக்கு என்ன தெரியும்?
தீபம் + ஆவளி(வரிசை) = தீபாவளி என்றால்
வரிசையாகத் தீபம்(ஒளி) ஏற்றல் என்றாலும்
நம்முள்ளத்து இருள் அகலவே
இறையருள் கிடைக்கக் கொண்டாடும் நாளே!
அடடே! கொஞ்சம் எண்ணிப்பாரு...
தீபத் திருநாளில் இறையருள் கிடைக்குமா?
கிடைக்குமடா கிடைக்கும் நம்பு - நீ
உனது கெட்ட செயலில் ஒன்றையாவது
தீபாவளியன்று உன்னிலிருந்து அகற்றினாலே!
எண்ணைக் குளியலோட சனியன் போயிற்றா?
இல்லையென்றே வெடி கொழுத்துகிறாய்...
வெடி வெடித்துச் சிதறுவது போல
உள்ளத்தில் வேரூன்றிய கெட்ட எண்ணங்களை
எட்ட விரட்டினால் சனியன் ஓடிடுமே!
இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் சமய வழக்காகவும்
ஏனையோர் பண்பாட்டு வழக்காகவும் தானாம்
நன்நாளெனத் தீபாவளியைக் கொண்டாடுகிறாங்களே!
தீபாவளியில் தீபம்(ஒளி) ஏற்றிப் பயனில்லை
ஒளி காட்டும் வழியென எண்ணி - அன்று
என்றும் நல்லவராக வாழ்வோமென உறுதியெடு!

Saturday, 21 September 2013

ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு

வெட்டை வெளி வழியின் இரண்டு ஓரங்களிலும் கறுப்பும் சிவப்புமாக கண்ணைப் பறிக்கும் ஈச்சம் பழமும் காயும் நிறைந்த பற்றை. வாலையொருத்தி அவ்வழியே நடைபோட காற்றோடு மழை வந்து
அவளை மோதியது. குடையை விரித்த வாலை கூப்பிடு தூரம் போயிருப்பாள். நனையாமல் வீடு போக வழியின்றி, ஆங்கொருகாளை தலை நனையாமல் பனை வடலியோலையை வளைத்துப் பிடித்த வண்ணம் நின்றான். நேர்கோட்டில் காற்பெருவிரலை வைத்தவண்ணம் நடைபோட்ட வாலையோ அவனைக் காணவில்லை.

சுறுக்காய் என்னைக் கொஞ்சம் பாருங்களேன்!
நறுக்காய் பகைக்காமல் எனக்கு உதவுங்களேன்!
உன் குடை விரிப்பின் விளிம்புக்குள்ளே
என் தலையைக் கொஞ்சம் நுழைக்கட்டுமா?

காளையின் குரலொன்று காதைக் கிழித்துக்கொண்டு வரும் பக்கம் வாலையும் திரும்பினாள். அவளும் அப்பாவி என்ன தான் செய்வாள். தன் தம்பியோ அண்ணனோ இப்படி நனைந்தால் எப்படியிருக்கும் என
நினைத்தாள்.

எப்படி என்னை எடைபோட்டியோ நானறியேன்
இப்படி நீ பனை வடலிக்குள்ளே ஒதுங்கலாமோ?
எப்ப தான் இந்த மழை ஓயுமோ தெரியேல்லை
இப்படி வாவேன் நீயும் என் குடைக்குள்ளே!

ஏதுமறியாக் காளையின் உள்ளத்திலும் எப்பன் பயம் பொத்திக்கொண்டு வந்தது. வாலையின் அப்பனோ அண்ணனோ தம்பியோ கண்டால், "வாலைக்குத் தொல்லை கொடுத்ததாய்" அடிப்பாங்களென அஞ்சினாலும் மழைக்காகக் குடைக்குள் நுழைந்தேனென்று சொல்லலாமென எப்பன் துணிந்தான்.

உன் முகம் காண மழை வந்து மோதியதோ
என் நிலை கண்டு நீயும் கடவுளாய் வந்தாயோ
உன் உரிமை கிடைத்த பின்னும் ஒதுங்கலாமோ
என் தலைக்குக் குடைபிடிக்கும் உனக்கு நன்றி!

இருவேறு எண்ணங்களைச் சுமந்து கொண்டு தெருவழியே நடைபோட்ட இருவரும் சாட்டுக்கு மழை வந்ததால் தான் ஒரே குடையில் செல்ல
வேண்டியதாயிற்று. பயந்து பயந்து நடைபோட இருவரும் சிறிது தூரம் சென்றாயிற்று.

நரம்பு இல்லாத நாக்கால நன்றியா
நெருங்கி வந்த பின்னால நானார்
வெட்டிப் பேச்சு வேண்டாம் - என்னையே
கூட்டிப் கொண்டு போவேன் உன்னோடு!

அட கடவுளே! இப்படியும் கேட்பாளென நான் நம்பவில்லையே! வீட்டுக்குக் கிட்ட நெருங்க இப்படிக் காதுக்குள்ளே குண்டு வைக்கிறாளே எனக் காளையும் சிந்தித்தான்.

காட்டில கண்டதால குடைக்குள்ளே வந்ததால
மாட்டும் எண்ணத்தில இப்படியும் கேட்கலாமோ
ஏட்டில எழுதினபடி வருவாள் ஒருத்தி
விட்டிட்டுது மழை என்னையும் விட்டுவிடு!

தன்னோடு முட்டாமல், உரசாமல், தடிமன் வராமல் தலையை மட்டும் குடைக்குள் ஓட்டிக் கொண்டு வந்தவனின் ஒழுக்கம் நன்றென்றுணர்ந்த வாலையும் அவனை விட்டபாடில்லை.

கண்ணாடி நிற மழை நீரும்
கால் பட்ட செம்மண்ணும்
சாணுயரத் துள்ளிப் பாயுது செந்நீராய்...
எண்ணிப் பார்த்தும் எட்டிப் போகலாமோ?

வீட்டில கிழங்கள் எனக்குப் பெண் பார்க்கிறது இவளுக்கு எங்கே தெரியப்போகிறது. கண்ட இடத்தில கண்டவளைக் கைப்பிடிப்பது நல்லதும் இல்லை. எல்லாவற்றையும் நினைத்துக் காளையும் குழம்பிப் போகிறான்.

வழியிலே வந்தோம் விழிகளில் நுழைந்தோம்
மழைநீரும் வந்தே செம்மண்ணில் கலந்தாச்சு
உண்மையில் நானும் என்முன்னே நீயும்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு!

குழம்பிய காளையைப் பார்த்து, இதற்கு மேலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் ஏட்டில எழுதினவள் நானென்றால் எப்போ ஒரு நாள் இணைவோம். "எல்லாவற்றுக்கும் முன் எங்கள் உள்ளங்கள் கலந்தாச்சே!" என்று காளையிடம் வாலை விடைபெற்றாள். காளையின் உள்ளத்திலும் வாலை நுழைந்ததான உணர்விருக்க "குடையும் மழைநீரும்
செம்மண்ணும் செந்நீரும்" என்றும் உங்களை நினைவூட்டுமென காளையும் விடைபெற்றான்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)
--------------------------------------------------------------------------------------------
குறிப்பு:தமிழ் நண்பர்களே! இக்கதையின் சுருக்கம் ஓர் சங்க இலக்கியப் பாடலில் இருக்கு. அப்பாடலைக் கீழே தருகின்றேன்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

நம்ம வீட்டுப் பாட்டுக் கேட்குதா?


'கா' 'கா' எனக் கரையும் காகமே
'கூ' 'கூ' எனக் கூவிடும் குயிலே
நம்ம வீடு என்னவாய்க் கிடக்கு!
                     ('கா' 'கா')

கூரைக்குக் கூரை பறக்கும் காகமே
வேலிக்கு வேலி தாவிடும் குயிலே
நம்ம வீடு என்னவாய்க் கிடக்கு!
                     (கூரைக்குக் கூரை)

நான் படும் பாட்டைப் பாரும்
நாலு காசு வீட்டுக்கு அனுப்பவே
அரசார் சுரண்டும் வரிகளைப் பாரும்
நாடறிய நம்மவர் வயிற்றை எரிக்கவே
                       ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

உண்டு வளர்ந்தேன் படித்து நிமிர்ந்தேன்
அகவைக்கு வர அவளையும் கட்டினேன்
ஆண்டுக்கு ஒன்றாய் ஆறைப் பெற்றேன்
எட்டும் வாழ முட்டுப் படுறேன்
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

நம்ம வீட்டில இல்லாளும் நலமா
நம்ம பிள்ளை குட்டியும் நலமா
நேற்றைய காற்றுக்குக் கூரையும் பறந்திச்சா
நேற்றைய மழைக்கு வீட்டில வெள்ளமா
                         ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

காற்றும் மழையும் இன்றும் வாட்டுதாம்
இல்லாளும் கேட்டால் சொல்ல மாட்டாளாம்
நம்ம பிள்ளைகளும் பசியாலே அழுவாங்களாம்
நம்ம ஆண்டவரும் நம்மவருக்கு உதவாராம்
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

வானத்தைப் பார்த்தால் ஓய்ந்த பாடில்லை
வீட்டை நினைத்தால் உள்ளத்தில் ஓய்வில்லை
வேலைக்குச் சென்றால் அமைதி எனக்கில்லை
வீட்டிற்குப் போனாலே மகிழ்வுக்குக் குறைவில்லை
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

பணித்தளத்தில் இருந்து பணியாள் ஒருவர் பாடியதாக எழுதியது.

வள்ளுவரின் அறிவு

ஒன்றே முக்கால் அடி வெண்பாவில்
இன்றே படிக்க வேண்டிய எல்லாம்
சொல்லி வைச்ச வள்ளுவரின் அறிவை
சொல்லிச் சொல்லிப் படித்தால் பாரும்
"பேரறிஞராவது நம்மாளே!"

 நம்மாளுகளே நாளுக்கு நாள் நாடுவது
நம்மட வாழ்வுக்கு வேண்டிய அறிவையா
அம்மா, அப்பாவை மதிக்காம விளையாடிட்டு
சும்மா வேலை இல்லாமல் இருக்கையிலே
"படிப்பது வள்ளுவரின் குறளே!"

 குறளே அமைந்தது ஈரடிகளால் தான்
நாற்சீரும் முச்சீருமாய் நறுக்கெனத் தான்
நாம படிக்கப்பழக வாழவெனத் தான்
நமக்கெனப் பாடிய 1330 குறளில் தான்
"பல்துறை அறிவு மின்னுமே!"

 மின்னல் வேகத்தில் புரியாது போனாலும்
கற்றதும் முச்சுவையைக் கண்டு கொள்வாய்
 எழுதுவோர் எல்லோரும் எடுத்துக் காட்டுக்காய்
எடுத்துக் காட்டுவது வள்ளுவரின் குறளையே
"திருக்குறள் என்றும் வழிகாட்டுமே!"

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...

ஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு, கைகள் நிரம்ப அடுக்கி இருப்பினம்.

 அவ்வீட்டு அழகு மயில் தெருவழியே ஆடிவர, ஆங்கொருவன் "என்னைக் காதலிப்பாயா?" என விருப்பம் கேட்டான். அதையறிந்த எதிர் வீட்டான்,'விருப்பம் கேட்டவன்' கெட்டவன் என்றும் தன்னை விரும்பென்றும் அவள் வீட்டை நாடிக் கேட்டான். ஊரெங்கும் இந்தக் கதை பரவ, "எங்கட பிள்ளைக்கு உங்கட மகளைச் செய்து வையுங்கோ" எனச் சில பழசுகள் அவ்வீட்டாரைக் கேட்டனர்.

 அடுத்தடுத்து இரண்டு மூன்று நாள் தொடரந்து நள்ளிரவில் கள்ளர் அவ்வீட்டுப் பக்கம் படையெடுத்தனர். ஒரு நாள் கள்ளர் வீடுடைத்துத் திருடியும் அவ்வீட்டார் சோர்வின்றி இருந்தனர். ஒரு நாள் அவ்வீட்டு அழகு மயிலைக் கடத்தவும் சிலர் முயன்றனர். ஊர் ஒன்று கூடியதால் அம்முயற்சியும் தோல்வியுற்றது.

 உண்மையான வீட்டு உரிமையாளர் ஊருக்கு வந்து சேர்ந்ததும், புதிதாய் வந்திருந்த குடும்பத்தை வெளியேற்றினார். புதுக் குடும்பமோ ஊரின் ஒரு கோடியில் ஓலைக் குடில் ஒன்றில் ஒதுங்கினர்.

 இவர்களுக்கும் இந்நிலை வந்து சேருமோ என ஊரார் ஆய்வு செய்த வேளை அவர்களது உண்மை கசிந்தது. வேற்றூருகளுக்குச் சென்று பிச்சை எடுத்துக்கொண்டு வந்து குடும்பம் நடத்தியவர்கள் என்றும் போட்டிருந்தது எல்லாம் போலித் தங்கம் என்றும் ஊரறிந்தது.

 காதல், திருமண விருப்பம் கேட்டோருக்கும் பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருந்தோருக்கும் உண்மை தெரிய வரத் 'தலைக்குனிவு' தான் கைக்கெட்டியது.

சும்மா... சும்மா... சும்மா...

விடிகாலை எழுந்து எல்லா வீட்டுப் பணிகளையும் முடித்துக் கொண்டு வெள்ளை தன் செயலகத்துக்குச் சென்றான். செல்லும் வழியில் அவனுடன் பணியாற்றும் அழகியும் இணைய இருவருமாகச் சென்றனர். வழி நடுவே சந்தித்த சிவப்பியும் கறுவலும் மோதிக்கொள்ள அவர்களைச் சுற்றி மக்கள் குழுமினர்.

சிவப்பி : எத்தனை நாளாக உன் பதிலைக் கேட்கக் காத்திருப்பது. இன்றாவது சொல்லேன்... என்னை நீ விரும்புகிறாயா?

கறுவல் : எவர் மீதும் நான் வெறுப்புக் கொண்டதில்லையே!

சிவப்பி : வெளிப்படையாகத் தான் கேட்கிறேன்... என்னை நீ மணமுடிக்க மாட்டாயா?

கறுவல் : மணமுடித்து மனைவியை இழந்தவனிடம் கேட்கின்ற கேள்வியா? அதுவும் என் கரிமூஞ்சியைப் பார்த்துக் கேட்பதா? சும்மா எத்தனையோ அழகான சிவலைகள் இருக்கிறாங்கள்... அவங்களில நல்ல ஆளைப் பார்த்து மணமுடிக்கலாமே!

சிவப்பி : சும்மா கோடிக் கணக்கில ஆட்கள் இருக்கலாம்... சும்மா எவனையும் மணமுடிக்கலாமே! சும்மா நீங்களும் தனியாளாக எத்தனை நாளாக இருக்கப் போறியள்?

கறுவல் : சும்மா இருக்கிற ஆள் நானில்லைப் பாரும்!

சிவப்பி : அப்ப என்ன தான் பண்ணிக் கிழிக்கிறியள்?

கறுவல் : எண்பதில அம்மா, நூறில அப்பா இருவரையும் பார்த்துப் பேணுகிறேன். போதாக்குறைக்கு ஆறு மாதக் கைக்குழந்தை, அதையும் நான் தான் பார்த்துப் பேணுகிறேன்.

சிவப்பி : உதுக்கெல்லாம் உங்களிடம் இருக்கிற பொறுப்புணர்வைப் பார்த்துக் கேட்டுத் தெரிந்த பிறகு தான் கெஞ்சுகிறேன். உங்கட பணிகளை நானும் சேர்ந்து செய்வேன். அப்ப நாமிருவரும் மகிழ்வாய் இருக்கலாம். என்னை மணமுடிக்க விரும்புங்களேன்.

சிவப்பி அழுதழுது கெஞ்சியதைப் பார்த்த மணமாகாத மங்கை ஒருத்தி, கண் கலங்கியபடி ஆண்களைப் பெண்கள் இவ்வாறு கெஞ்சக் கூடாதென சிவப்பியின் முகத்தைத் தனது கைக்குட்டையால் துடைத்தவாறு அவளது உள்ளத்தைத் தேற்றினாள்.

"இஞ்ச வா தம்பி, உன்ர அடி, நுனி தெரிந்த பிள்ளையால தான் உங்கட குடும்பத்தை நல்லாய்ப் பேணமுடியும். நீ தேடினால் உவளைப் போல ஒருத்தி கூடக் கிட்ட வராள். கெஞ்சிற பெண்ணை விஞ்சி, கட்டையிலே போகும் வரை தனிக்கட்டையாய் தானிருப்பாய்." என்று எதிரே நின்ற கடுக்கன் போட்ட பழுத்த கிழவன் செய்த மூளைச் சலவையால கறுவலின் உள்ளம் சற்று இளகியது. தானும் தன் கைக்குட்டையால் சிவப்பியின் முகத்தைத் துடைத்த பின் கைப்பிடியாய் கூட்டிச் சென்றான்.

வாழ்க்கையிலே இப்படியான இணையர்கள் சேருவது அருமையென அவரவர் கலைந்து சென்றனர். செயலகத்திற்கு நடைபோடத் தொடங்கிய வெள்ளை, அழகியைத் தேடினான். மார்புச் சட்டை நனைய அழகி ஒரு கோடியில் அழுதவண்ணம் ஒதுங்கி நின்றாள். "வழி வழியே சும்மா சும்மா ஆளுக்காள் மோதுவாங்கள். உதுக்கெல்லாம் கண்ணீர் வடித்தால் நாங்கள் எப்படி முன்னேறுகிறது." என்று அருகிலிருந்த பத்மினி புடவை மாளிகையில் மேற்சட்டை ஒன்றை வெள்ளை வாங்கிக் கொடுத்தான். அதனை வேண்டிய அழகியும் எதிர் வீட்டில் சென்று மாற்றி உடுத்தி வந்தாள்.

வெள்ளையும் அழகியும் கதைத்துக் கொண்டு பணி செய்யுமிடத்தை நெருங்கிவிட்டனர். கதையோடு கதையாக " தன் கணவர் முதலிரவை முடித்துக் கொண்டு பணிக்குச் சென்ற முதல் நாளே கனவூர்திச் சில்லுக்குள் சிக்கிச் சாவடைந்ததையும் தான் நான்கு மாதம் நீண்ட வயிற்றைச் சுமப்பதையும்" கண் கலங்கியபடி அழகியும் சொல்லி முடித்தாள்.

"சும்மா சும்மா புழுகாதையும்" என வெள்ளை வயிற்றிலே கையை வைத்துப் பார்த்தான். முகத்தோடு முகம் பார்த்துக் கதைத்து வந்த வெள்ளைக்கு, அந்நேரம் தான் அழகியின் வயிற்று வீக்கம் தெரிந்தது. "சும்மா சும்மா அழுது புழுங்கி உள்ளத்தைப் புண்ணாக்காதையும் நீங்கள் விரும்பினால் வயிற்றிலே வளரும் குழந்தைக்கு நானே அப்பாவாகிறேன்" என்று வெள்ளை அழகியை அணைத்துக் கொண்டான்.

"என்னை ஆற்றுப்படுத்தச் சும்மா வெடிக்காதையும்" என்றாள் அழகி. "சும்மா இல்லை, உண்மையாகத் தான்" என்று வெள்ளை அவளைக் கொஞ்சினான். அப்ப தான் அழகியின் நெஞ்சு குளிர்ந்தது. "செயலகம் வந்து விட்டது" என அழகி அவனது கைகளை விலக்கினாள். செயலகப் படலையைத் திறந்து இருவரும் மகிழ்வோடு அன்றைய நாள் பணியைத் தொடங்கினர்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)

நல்லாப் படிச்சவர்!

ஓர் ஊரில
ஓராள்
"நான் எவ்வளவோ படிச்சனான்" என்று
அடிக்கடி சொல்வாராம்!
ஒரு நாள்
ஊரின் ஒதுக்குப் புறத்தே வாழ்ந்த
ஓராளுக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்பளிப்புக் கிடைச்சதாம்!
அங்குமிங்கும் எங்கும்
ஒரே கொந்தளிப்பு
பணம், படிப்பு என்று
மின்னியோர் இருக்க
மூலைக்குள்ளே முடங்கியவருக்கு
மதிப்பளிப்பா என்றாம்!
"எவ்வளவோ படிச்சனான்" என்றவருக்கு
மதிப்பளிக்காமல்
ஓர் ஓரமாய் இருந்தவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்று
மதிப்பளிப்பது பிழையென்று
ஊருக்குள்ளே ஓரு குழப்பமாம்!
எவ்வளவோ படிச்சதுக்கு
கட்டுக் கட்டாய்ச் சான்றிதழ்கள்
இருந்தும் கூட
நாலஞ்சைப் படிச்சவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற தகுதியாம்!
குழம்பிப் போன ஊருக்குள்ளே
எரியிற நெருப்பில
நெய் ஊற்றினால் போல
கல்வி என்பது
பணத்தாள்களின் எண்ணிக்கையில்
சான்றிதழ்களின் எண்ணிக்கையில்
இல்லையாம் என
ஆங்கொருவர் வாயைப் பிளந்தாரம்!
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்றால்
"பிழையின்றிக் கற்று,
பின்
கல்வி தந்த அறிவின் வழி
செல்லல் வேண்டும்." என்று
வள்ளுவரும் சொன்னாராம்!
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சொன்னாராம்!
அடி தடிக்கு ஏற்பாடாக முன்னே
மதிப்பளித்தோர் வந்தனராங்கே...
கல்வி என்பது கற்றவரிடமிருந்து
பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் என்ற
நோக்கில் என்றனராம்!
எல்லோரும்
தலையைச் சொறிந்து கொண்டு
ஊரோரமாய் அந்தப் பக்கம்
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்புப் பெற்றவர் செய்ததைக் கேட்க
பணக்காரர், படித்தவர் பலரை ஆக்கிய
வழிகாட்டியும் ஆசிரியரும் அவரே என
மதிப்பளித்தோர் பதிலளித்தனராம்!

Saturday, 7 September 2013

பாதணி (செருப்பு)


(மேலுள்ள படத்தைப் பார்த்ததும் எழுதியது)

”பாதணி” என்று
தலைப்பிட்ட போது தான்
சடையப்ப வள்ளல் வளர்த்த
வான்மீகியின் இராமாயணத்தை
கற்பனை அலை வீசும் கடலாக
இராமனின் பாதணியை வைத்து
பரதன் அண்ணன்
அயோத்தியை ஆண்ட கதையை
சுந்தரத் தமிழில்
காவியமாய்ப் பாடி முடித்த
கம்பரை மீட்டுப் பார்த்தே
கா(பனை)வோலைக் கால்களை
வெட்டிப் பாதணி போட்டவர்களும்
குளிர்பானக் குடுவையை (போத்தலை)
தட்டையாக்கிப் பாதணி போட்டவர்களும்
நினைவில் வர - அவை
நம்ம ஈழ மண்ணில் நிகழ்ந்த
போரினால் ஏற்பட்ட வடுவாக
மறக்க முடியவில்லைக் காணும்
எனது அருமை உறவுகளே!
புதுப் பாதணி கடிக்கும் என்பது
நாம் படித்த பழமொழி
கடிக்கும் பாதணி உடனே
கல்லும் முள்ளும் குத்தும்
கால்களுடன் நடைபோட்ட
ஈழத்து உறவுகளை
எம்மொழியில் படித்தேனும்
உலகம் கண்டும் உதவவில்லையே!