Friday, 21 June 2013

பொய்யான காதலர் நாள்

இளையவர்களைப் படையில் சேர்ப்பதைத் தடுக்கவே, 'வலன்ரைன்' என்னும் கத்தோலிக்க மதகுரு இளம் இணையர்களுக்கு மணமுடித்து வைத்துள்ளார். இதனாலேயே அவரைச் சிறையில் அடைத்தனர். சாகும் வரை அவருக்குச் சிறை வாழ்க்கை தான்...

அவர் சிறையில் சாவடைந்த நாளே FEB 14. இந்நாள் உலகிற்கு நல்லதைச் செய்தவரை நினைவூட்டும் துக்க நாளே! இந்நாளைக் "காதலர் நாள்" என்று ஏற்க முடியாதே! அப்படியானால், இந்நாள் பொய்யான காதலர் நாளே!

மதகுரு எப்படிக் காதலித்திருப்பார்? சிறைக்குப் போய் மதகுருவுக்கு உணவு கொடுத்த பெண் மதகுருவைக் காதலித்திருப்பாரா? இந்தக் காதலை எப்படி நம்புவது? காதலுக்கு எந்த வித தொடர்பும் இல்லாத FEB 14 ஐ திருமண நாளென்று கூறலாமே!

இது வரலாறு சுட்டும் உண்மையாதலால், காதலர்களே என் மீது சீறிப் பாய வேண்டாம். மாற்றுக் கருத்து இருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சலில் பணம் பறிப்பு

இணையப் பயனாளர்களே மின்னஞ்சலில் பணம் பறிப்போரிடம் ஏமாறாதீர்கள். Microsoft Email Lottery, அமெரிக்க Green Card Lottery எனத் தலைப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி, அதனைப் பெறுவதற்கு எம்மை அணுகவும் என்றெழுதியிருப்பார்கள். அதற்கான செலவாக 1000-2000 $அனுப்புமாறு கேட்டிருப்பார்கள்.

இது போலியென்று கண்டுபிடிக்க முடியாதவாறு இருக்கும். இதனை நம்பிப் பணம் செலுத்தியோர் ஏமாறினர். என் மனைவி பணம் தராததால் நான் செலுத்தவில்லை. அதனால் நட்டமின்றித் தப்பிவிட்டேன்.

இது பற்றிய உண்மையறிய Microsoft, Green Card Lottery Department ஐ அணுகியபோது "போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்" என்கிறார்கள். இவ்வாறான அல்லது இது போன்ற மின்னஞ்சல்களை நம்பி ஏமாறாதீர்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் வேலை தொடரத்தான் செய்யும்.


தமிழ்நண்பர்கள் தளத்தில் இப்பதிவு இடம் பெற்ற போது...

நண்பர் வினோத் தெரிவித்த கருத்து:
மிகப்பெரிய கூட்டமே இதன் பின்னால் இருப்பதாக செய்தி வந்துள்ளது. ஆசைப்பட்டவர்கள் நிறைய பேர் பணத்தை இழந்துள்ளார்கள்

நண்பர் குமரன் தெரிவித்த கருத்து:
உண்மைதான்....எச்சரிக்கையாக இருக்கவும்.

எனது பதில்: வாசகர்கள் ஏமாறாமல் இருந்தால் எமக்குப் போதும்.

கால் நாள் படுத்தும் பாடு

மாசி 29 இல் பிறந்தவர்களுக்கு
நான்காண்டுக்கு ஒரு முறை தான்
பிறந்த நாள் வருவதால்
வாழ்த்துத் தெரிவிக்கும் போது
முட்டாளாவது நாங்களே!
மாசி 28 இல் வாழ்த்துத் தெரிவிக்க
நாளைக்கு என்றாள்...
பங்குனி 1 இல் வாழ்த்துத் தெரிவிக்க
நேற்றே முடிஞ்சு போச்சு என்றாள்...
எப்படி என்றேன்?
காலமாகும் கால் நாளை
நாட்காட்டியில் பார்க்கலாமா
பெரியப்பா என்கிறாள் - என்
பெறாமகள்...!

உன்னை நீ அறி

நானே எனக்குக் கடவுள்
நானே எனக்குப் படைப்போன் (பிரம்மா)
நானே எனக்கு நீதிபதி
என்னுடையது என்பதெல்லாம்
என்னாலே என்னில் தான்
என்று
இனி மெல்ல முன்னேறி
வாழ்ந்து காட்டு - அது
சூழ உள்ளவர்களையும்
வெற்றி நடை போட்டு
வாழ வழி காட்டுமே!

Friday, 7 June 2013

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள் என்று சொல்லிப் பண்டிகைக் காலங்களில் வாருவார்கள், உண்பார்கள், குடிப்பார்கள், போவார்கள். துன்பம் வந்த வேளை தேடினால் ஆட்களைக் காணக் கிடையாது.

எல்லாம் யாராலே?

ஆடிக் கடைசியில, முன் ஆவணியில நெல்லு விதைச்சோம்! ஐப்பசி வர முன்னரே களை பிடுங்கினோம். கார்த்திகை வந்ததும் நெல்லுக் கதிர் வந்திடுச்சு. மார்கழிக் கடைசியில அருவி வெட்டிப் புது நெல்லு வீட்டுக்கு வந்து சேரும்! அதைக் குத்தி அரிசியாக்கிக் கதிரவனுக்குப் பொங்கிப் படைப்பதே நம்ம விவசாயிகளின் கடமையாச்சு!

விவசாயிகள் துன்பப்பட்டு நெல்லு விதைச்சு, அருவி வெட்ட வானத்தில தொங்கிற கதிரவனுக்கு ஏன் அவங்க பொங்க வேணும்? இது நல்ல கேள்வி தான்!

மாசிப் பனி முசி்ப் பெய்யுமென நடுங்கிற கையோட கோடை தொடங்கிவிடும்! சித்திரையில வெயிலைப் பற்றி்ச் சொல்லவும் வேணுமா? வெட்கை தாங்க முடியாமல் உடுப்புகளைக் கழட்டிப் போட்டு இருக்க முனைவோம். நம்ம ஆடைக்குறைப்பில திரைப்பட நடிகைகள் கூடத் தோற்றுப் போயிடுவாங்கள்!

வெயிலால எங்களைச் சுட்டெரித்த கதிரவனுக்கு விவசாயிகள் பொங்க வேணுமா? அங்க தான் ஓர் உண்மை இருக்கிறது!
சுட்டெரிக்கும் வெயிலால கடல் நீர் ஆவியாகி வானத்தில சேமிக்கப்படுகிறது. வானத்தில சேமிக்கப்பட்ட அந்தக் கடல் நீர் தான் மாரியில மழையாகப் பொழிகிறது. அந்த மழையால தான் நெல்லு விளைகிறது.

அந்த மழை யாரால பொழிகிறது. வானத்துக் கதிரவனாலே தான். அப்ப நம்ம விவசாயிகள் கதிரவனுக்குப் பொங்கலாம் தானே!

அது சரி, மற்றவங்க ஏன் பொங்கிறாங்க?

உலக மக்கள் அனைவருக்கும் ஒளியும் இருளும் கதிரவனாலே தான் கிடைக்கிறது. அதனால், கதிரவனைக் கடவுளென வணங்குபவர்கள் எல்லோருமே பொங்குகின்றனர்.
என்ன, தைப்பொங்கலுக்குத் தயாரா?

பொங்கல் எப்படி?

ஓருவர் : நம்ம 2011 தைப்பொங்கல் எப்படி?

மற்றவர் : செய்கூலி ஏறாமல் பொருட்கள் விலையேறுவதால் பொங்கலரிசி வேண்டப் பணமில்லையப்பா?

மூன்றாமாள் : நம்ம பிள்ளையார் கோவிலில பொங்குவாங்கள், அந்தக் கதிரவனை நினைத்து விழுங்கவாவது வாவேன்!

பாட்டு

கெட்டு நொந்தவர்கள்
பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
"பாட்டு..."

மருந்தாகும் சிரிப்பு

முதலாமாள் :-
பெண் பிள்ளை சிரித்தால் போச்சு
புகையிலை விரித்தால் போச்சு

இரண்டாமாள் :-
நல்லதுக்கு இல்லை...

முதலாமாள் :- அதெப்படி?

இரண்டாமாள் :-
முதலாவதில் குணம் (மானம்) கெட்டுப் போயிடும்.
இரண்டாவதில் மணம் கெட்டுப் போயிடும்.

முதலாமாள் :-
நகைச்சுவையாகச் சொன்னாலே சிரிப்பு வருகிறதே!

இரண்டாமாள் :-
எண்ணி எண்ணிச் சிரித்தால்
நல்ல மருந்தாகுமே!

மூன்றாமாள் :-
அட போங்கடா...
வாய் விட்டுச் சிரித்தால்

நோய் விட்டுப் போகுமடா!

Thursday, 6 June 2013

வாழ்த்துக்கள்


கிறிஸ்மஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

பணிவாகத் தெரிவிப்பதில்
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்!