Saturday, 28 February 2015

வரலாற்று உண்மை!


ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு சான்றை அழித்து
இன்னோர் சான்றை ஆக்கினால்
ஆக்கிய சான்று என்ன சொல்லும்?
முன்னைய சான்றை முதன்மைப்படுத்தவா
என்னை ஆக்கினாய் என்று கேட்காதா?

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒர் எடுத்துக்காட்டாக
குபேரன் இராவணனுக்கு வழங்கி
இராவணன் ஆண்ட இலங்கையில்
சிங்களம், பௌத்தம் அடையாளமிட்டாலும்
இலங்கை; தமிழரின் நாடென்பதை
உலகம் ஏற்றுக்கொள்ளுகிறதே!

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?
வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!

Tuesday, 24 February 2015

கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு

படம்: கூகிள் தேடல்
கள்ளுக் கடை
நாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடிக்கையிலே
பாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடித்த பின்
ஆடத் தான் முடிகிறது...
குடித்த கள்ளு வயிற்றில் புளிக்கையிலே
ஆங்காங்கே அவிழ்ந்த உடுப்புகளை
போடத் தான் முடிகிறது...
புளித்த கள்ளு தலைக்கேறுகையில்
நடுவழியிலே
படுத்துக் கிடக்கத் தான் முடிகிறது...
வயிற்றுக்குள்ளே போன
கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு
இத்தனையும் செய்விக்குமா?
"அப்பன் குடிச்சுப் போட்டு
உடுப்புகளை களைந்து போட்டு
கிடக்கின்ற நிலையை
கண்ட பெண்கள் காறித் துப்ப
கட்டியதிற்கு ஒறுப்பாக
அம்மா தோளிற் சுமந்து
வீட்டிற்கு இழுத்து வருவதைப் பார்" என்று
பிள்ளைகள்
நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பதை
நம்மூர் நடுச் சந்தியில்
நீங்களும் கண்டு களித்தீர்களா?

Saturday, 21 February 2015

சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு?


'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப் பார்த்தேன். அந்நிகழ்விற்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இதனைக் கருதுகிறேன். இவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

விரும்பிகள் (இரசிகர்கள்) தெரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றியாளர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். சிறப்புப் பாடகர் (Super Singer) பாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெசிக்கா‬, வென்ற ‪தங்கத்தின்‬ ஒரு பகுதியைத் தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் மீதியை ஈழத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாக அதே மேடையில் அவரும் அவரது தந்தையும் உறுதி அளித்திருந்தனர். அச்செயலால் உலகத் தமிழ் இனம் பெருமை கொள்ள முடிகிறது. 

இந்த முன்மாதிரியை எல்லோரும் பின்பற்றினால் நன்று.
ஜெசிக்கா குடும்பத்தாரை வாழ்த்துகிறேன். ஆயினும் மிகப் பெரிய இப்பொது நிகழ்வில் இவ்வரங்கில் 'அநாதை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஆதரவற்றவர்' என்ற சொல்லைப் பாவித்திருக்கலாம் என்பது எனது பணிவான வேண்டுல். அது பற்றி அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

Wednesday, 18 February 2015

சீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.

உலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்திருந்த வேளை நிகழ்த்தப்பட்ட அந்த ஒன்பது நாணயங்கள் பற்றிய தெளிவை ஒளிஒலிப் பதிவாக (Video) உங்களுடன் பகிருகிறேன். இதனை நீங்களும் பலருக்குப் பகிருங்கள்.


இலங்கை-யாழ்ப்பாண நகரில் திருமதி.யோகாம்பிகை (விமலா) சங்கரன் அவர்களால் பேணப்படும் யாழ்ப்பாணம் சீரடி ஸ்ரீ சாய் சங்கரா ஆலயத்தின் இணையத்தளப் பணிகளை நானே மேற்கொள்வதால் இவ் ஒளிஒலிப் பதிவைத் (Video) தங்களுடன் பகிர முடிந்திருக்கிறது. கீழே அவ்விணையத்தள முகவரி தந்துள்ளேன். அதனை விரித்துப் பயன்பெறலாம்.

ஓம் சாயிராம்
ஜெய் சாயிராம்

Friday, 13 February 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 01

எனக்கும் தமிழக அறிஞர்களுக்கும் இடையே முதலில் உறவை ஏற்படுத்தித் தந்தது தமிழ்நண்பர்கள்.கொம் தளமே! 2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது. மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் நண்பர் சுஷ்ரூவா உடன் நான் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் கிழே தந்துள்ளேன்.

மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் அறிஞர் பகவான்ஜி உம் அறிஞர் வலிப்போக்கன் அவர்களும் என்னை வரவேற்க வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போனதையிட்டும் நண்பர் கில்லர்ஜி தெரிவித்ததும் எனக்குத் துயரம் தான். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது சந்திக்கலாம் என எம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியதாயிற்று.

எனது தமிழகப் பயணச் செய்தி படித்து வாழ்த்தும் வழிகாட்டலும் தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. அறிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் நண்பர் சுஷ்ரூவாவுடன் கதைத்திருந்தார். அவரும் புலவர் இராமானுஜம் அவர்களும் மேலும் பலரும் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். பல பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற எண்ணியுள்ளேன்.

எல்லோருடனும் இலகுவாகத் தொடர்புகொள்ளலாமென எண்ணி நடைபேசி இணைப்பைப் (Sim ஐப்) பெற்றிருந்தும் செயலுருப் (Activation) பெறமையால் பலருடன் தொடர்புகொண்டு சந்திப்புகளையும் உறவுகளையும் மேம்படுத்த முடியாமை தான் எனது துயரம்!

உண்மையில் இலங்கையிலே நடைபேசி இணைப்பு (Sim) இலவசமாகவும் செயலாக்கல் (Activation) ஓரிரு மணி நேரத்திலும் வழங்குகிறார்கள்.
அப்படியிருக்கையில் இந்தியாவில் மட்டும் பத்து நாட்கள் இழுபறி ஏன்?
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திறன் போதாதா?
முகவர் நிறுவனங்களின் அக்கறையின்மையா?
என்னமோ... இந்தியாவில் தொலைத்தொடர்புச் செலவு (Call Charge) அதிகம் என்பதை நானறிவேன்.
பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)