Monday 24 November 2014

தீர்வு ஒன்று தேவை

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!
பிள்ளைகளின் விருப்பறியாது
பிள்ளைகள் எப்படியாது வாழுமென
பிள்ளைகள் கரை சேர்த்தால் போதுமென
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள்
எப்பதான் பின்விளைவை உணருவார்களோ?
பிள்ளைகளுக்கு
மகிழ்வான வாழ்வமைத்துக் கொடுக்க
பெற்றோர்களுக்கு
கற்றுக்கொடுக்க முன்வாருங்களேன்!

Sunday 23 November 2014

காதலை விட நட்பே பெரிது...

நட்புக்குப் அகவை வேறுபாடில்லை.
காதலுக்கு ஒத்த அகவை வேண்டும்.
காதலை விட நட்பே எளிதில் மலரும்...

நட்புக்குப் பால் வேறுபாடில்லை.
காதலுக்கு எதிர்ப்பால் வேண்டும்.
காதலை விட நட்பே இலகுவானது...

நட்பு எல்லோருக்கும் பொதுவானது.
காதல் இருவருக்கு உரித்தானது.
காதலை விட நட்பே பெரிது...

Friday 21 November 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

Wednesday 19 November 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

வேறுபாடு

தோள் கொடுப்பவன் தான் தோழன்
தோள் கொடுப்பவள் தான் தோழி
"ள, ழ வேறுபாடு"
 
தோள் கொடுக்காதவன் தான் நடிகன்
தோள் கொடுக்காதவள் தான் நடிகை
"ள, ட வேறுபாடு"
 

Saturday 15 November 2014

மக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்


நம்ம காதலர்கள் சந்தித்தால் என்ன கதைப்பாங்க...

காதலி: சான்றிதழில் எழுதப்பட்டது பெற்றோர் இட்ட பெயர்!
       எங்கட நடத்தைகளை வைத்தே, மக்களாயம் (சமூகம்) கூப்பிடுதே!

காதலன்: எனக்குத் தெரியும்... நல்லதைச் சொல்வோரையும் நல்லதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) நல்லவரென்றே கூப்பிடுதே!

காதலி: அது போலத் தான்... கெட்டதைச் சொல்வோரையும் கெட்டதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) கெட்டவரென்றே கூப்பிடுதே!

காதலன்: உண்மை தான்! ஆனால், நண்பர்கள் பலர் இது பற்றி அறிந்திருக்கவில்லையே!

இவங்க இப்படி எல்லாம் நாடகம் ஆடுவாங்க என்று எனக்குத் தெரியாதே!

அழகும் பத்திரிகையும்


முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
 
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
 
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
 
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!

Friday 14 November 2014

நண்பர்களே! நண்பர்களே!

நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளலாமா?
தேர்வுகளிலும் போட்டிகளிலும்
படிப்பிலும் தொழிலும்
காதலிலும் வாழ்க்கையிலும்
வென்றவர்களுக்கு
கடவுள் வந்து உதவினாரா?
எம்மைப் படைத்த கடவுள் - ஒருபோதும்
எம்மை எட்டிப் பார்த்ததில்லையே!
எப்படி ஐயா
கண் முன்னே கண்ட எல்லோரும்
எதிலும் வெற்றி பெற முடிகிறது என்று
எண்ணிப் பார்ப்பதை விட
வெற்றி பெறத் தேவையானதை
எண்ணிப் பார்க்கலாமே!
விருப்பம் கொள்...
முயற்சி செய்...
பயற்சியைத் தொடரு...
"என்னால் முடியும்" என்று
தன்னம்பிக்கையுடன் இரு...
பிறரையோ பிறவற்றையோ
கணக்கில் எடுக்காது
உன் வழியை நீயே பார்...
கூப்பிடு தூரத்தில் தான் - உனக்காக
உன் வெற்றியே காத்திருக்கிறதே!
நம்பிக்கையைப் போர்க்கலனாக்கி
இவ்வுலகை வெல்லலாம்
இன்றே முன்னேறு...
வெற்றிகள் எல்லாம் - உன்
காலடியில் வந்து வீழுமே!
பிறரால் முடியுமென்றால்
என்னால் ஏன் முடியாதென
விடிய விடிய
உன்னையே நோவதை விட
உனக்குள்ளே
உறங்கிக்கொண்டிருக்கும்
புலமைகளைத் திறமைகளை
வெளியே கொண்டு வா - அவற்றை
வாங்கிக் கொள்ளத் தானே
இவ்வுலகமே காத்திருக்கின்றதே!
பறப்பதென்று - நீ
முடிவு செய்து விட்டால் - காற்றே
உனக்குச் சிறகாய் முளைக்க
உன் தன்னம்பிக்கையே
உனது வெற்றியின் இடத்துக்கே
உன்னைக் காவிச் செல்லுமே!
நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளாமல்
முன்னேறும் எண்ணங்களை
ஒழுங்குபடுத்துங்களேன்...
உங்களை வெல்லக் கடவுளும்
உங்களுக்குக் கிட்ட நெருங்காரே!

Tuesday 11 November 2014

கெட்ட, கேடு கெட்ட


வயிற்றுப் பசி போக்க
உழைக்கின்றோம்...
உழைப்பில்லாத வேளை
வயிற்றுப் பசி போக்க
முடியாது அழுகின்றோம்...
அழுதால் பசி போக்கலாமா?

உழைத்தால் தான்
பசி போக்கலாம் என்றால்
களவு எடுத்தலும் பிச்சை எடுத்தலும்
பிறர் விருப்பைப் போக்க
தன் உடலைக் கூலிக்கு விடுவதும்
(விலைப் பெண், விலை ஆண்)
உழைப்பு ஆகுமா?

பசி போக்கப் பணம் வேண்டுமெனில்
தமது
உள உழைப்பையோ
உடல் உழைப்பையோ
செய்ய முயற்சிக்கலாமே...
ஆனால்
மாற்றாருக்குத் தீங்கிழைக்காத
உழைப்பைத் தெரிவு செய்தீர்களா?

நடுத் தெருவில்
நான் கூடப் பிச்சை எடுக்கையில்
"அடே எருமைக்கடா - அந்த
எருமை கூட சூடு தணிக்க
சேற்றுக் குளியலை நாடுதே - நீ
உன் வயிற்றுப் பசி போக்க
ஒழுங்கான தொழிலைப் பாரடா!" என்று
தெரு வழியே சென்ற நல்லவர்
ஒரு வேளை உணவும் தந்து
தொழில் ஒன்றை ஒழுங்கு செய்தும்
இனிப் பிச்சை எடுத்தால்
சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று
எச்சரித்து வழிகாட்டியுமிருந்தாரே!

வழிகாட்டிகள் சொல்லியும் கூட
எந்தப் பக்கம் பார்த்தாலும்
கெட்ட, கேடு கெட்ட
தொழில் செய்வோர் தான்
கண்ணுக்கு எட்டுகிறார்களே...
"என்னடாப்பா
தொழிலில் கூட...
கெட்ட, கேடு கெட்ட தொழில் என்று
ஒன்றுமில்லையே" என்று
என் மூக்குடைக்க வாராதீர்கள்...
நற்பெயரைத் தரும்
சூழல் எம்மைப் போற்றும்
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்
தொழிலே
கெட்ட, கேடு கெட்ட
தொழில் இல்லையென்று சொல்ல வந்தேன்!

உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

நம்ம காளைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற வாலைகளுக்கு வலை விரித்தால் எவளாவது சிக்குவாளா? (குறிப்பு: பெண்களே, ஆண்களுக்குக் கழுத்தை நீட்டும் முன் சிந்தியுங்கள்.) காளைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான பெண்
  2. அழகான பெண்
  3. கிராமத்து பெண்
  4. நகரத்து பெண்
  5. பணக்கார பெண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய பெண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள பெண்
  8. எந்த ஆணிடமும் தகாத உறவு வைக்காத பெண்.
  9. அவள் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான ஆண்
  2. அழகான ஆண்
  3. கிராமத்து ஆண்
  4. நகரத்து ஆண்
  5. பணக்கார ஆண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய ஆண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள ஆண்
  8. எந்தப் பெண்ணிடமும் தகாத உறவு வைக்காத ஆண்.
  9. அவன் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.

Sunday 9 November 2014

கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!



நேற்று - நீ
என் அழகுத் தோழி!
முதலில்
ஓரடி உண்மையென
அடுத்து
மூன்றடியில் துளிப்பாவென (ஹைக்கூவென)
அதற்கடுத்து
ஐந்தடியில் குறும்பாவென (லிமரிக் என)
அடுத்தடுத்தும் பார்த்தேன்
அடி, அடியாக அடுக்கி
புதுப்பாவெனப் பல புனைந்து - உன்
பாப்புனையும் ஆற்றலை
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!
ஈற்றில்
உன் பாக்களின் வாசகனானேன் - அதனால்
உன் பெயரைக் கேட்க - நீயோ
கவிதா (பாதா) என்கிறாய் - நானோ
உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ
ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவரே!
இன்று - நீ
என் அறிவுத் தோழி!
"பெயரைக் கேட்கையிலே - அவள்
கவிதா (பாதா) என்றாள் - நானோ
கவிதையோ பாவோ எழுத
முடியாமையை உணர்ந்தே - அவளை
மறந்து போய்விட்டேனே!" என்று
பாப்புனைய வைத்துவிட்டாயே!

Friday 7 November 2014

எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?

படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
பொத்தகக் கடைகளிலே
செய்தித்தாள்கள்
நுழைவாயிலில் தூக்கில் தொங்கின...
அவ்வழியே
ஒரு கடையில் நுழைந்தேன்...
உள்ளே பல பொத்தகங்கள்
தூக்கில் தொங்கின...
"ஏன்
இவையெல்லாம்
தூக்கில் தொங்குகின்றன..." என்று
கடை உரிமையாளரிடம் கேட்டேன்...
"எவராவது
இவற்றை வேண்டுவார்களே
என்று தான்" என்றார்...
"வருவாய் நிறையக் கிட்டுதா?" என்றேன்...
"வாசிப்போர் எவருமின்மையால்
சோர்வு தான் நிறையக் கிட்டுகிறதே!" என்று
பதிலளித்த உரிமையாளர் முன்னே
"படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
எவருக்குமே வாசிக்கவே தெரியாதா?" என்று
நானோ
தலைச் சுற்றி விழுந்துவிட்டேன்!
வாசிப்பு
மனித அறிவைப் பெருக்கும் செயலே...
வாசிப்புப் பசிக்கு
பொத்தகங்களும் செய்தித்தாள்களுமே...
பள்ளிகளில் - இதெல்லாம்
ஒழுங்காகச் சொல்லிக் கொடுத்தால் தானே
பொத்தகக் கடைகளிலே வணிகம் நடக்கும்!
பொத்தகங்களையும் செய்தித்தாள்களையும்
வேண்டிச் சேர்த்தால்
நாலு பணம் வைப்பிலிட(சேமிக்க)
வாய்ப்பில்லையென
பெற்றதுகள் வேண்டிக் கொடுக்கவில்லையோ?
இந்தக் காலப் பிள்ளைகள்
இணையத்தில் படம் பார்க்கையிலே
வாசிப்பை மறந்து போயிட்டுதுகளோ?
யானை விலை ஒட்டக விலையென
அரசு
படிப்புப் பொருட்களுக்கு விலை ஏற்றியதாலோ?
இன்னும் நிறைய
எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதால்
என்னால்
"எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?" என்ற
பாவை(கவிதையை) புனைய இயலாமல்
இப்படியே நிறுத்திக் கொள்கின்றேன்!

Tuesday 4 November 2014

ஆண்டவன் கணக்கில்...

வரவும் செலவும்
வருவாய்க் கணக்கில்
நட்பும் பிரிவும்
உறவுக் கணக்கில்
நல்லதும் கெட்டதும்
அறிவுக் கணக்கில்
தன்நலமும் பிறர்நலமும்
உணர்வுக் கணக்கில்
காதலும் தோல்வியும்
இளமைக் கணக்கில்
மகிழ்வும் துயரும்
வாழ்க்கைக் கணக்கில்
ஆயினும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கணக்கில்...
எத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!

Sunday 2 November 2014

உலகமே அறிந்து கொள்...

அலைவரிசை(சனல்)-4 வெளியிட்டது
பொய் என்று
இலங்கை அரசு சொன்னாலும்
வன்னிப் போருக்குள் சிக்கித் தப்பிய
நான் சொல்வதில் பொய் இல்லையென
உலகமே அறிந்து கொள்!
புலிகளையும் பிரபாகரனையும்
கடலுக்குள் மூழ்கடிப்பதாகக் கூறி
பாதுகாப்புப் பகுதியென
அறிவிக்கப்பட்ட இடமென ஓடோடி ஒதுங்கிய
முள்ளிவாய்க்காலில் சாவடைந்த
மூன்றரை இலட்சம் ஈழத் தமிழரை
நினைவூட்டச் சொல்கிறேன்...
உலகமே அறிந்து கொள்!
முதலாம், இரண்டாம்
உலகப் போரில் கூட
இப்படி நிகழ்ந்திருக்காது...
"பதுங்குழிக்குள் வாங்கப்பா" என
"செத்தால் இருவரும் சாவோமப்பா" என
என் துணைவி அழைக்க
"ஐயோ என்ர கடவுளே" என
சாவின் பிடியிலிருந்து தப்பிக்க
ஓடி ஒளியப் போய்
சாவடைந்த ஈழத் தமிழரை
உலகமே நினைத்துப் பார்த்தாயா?
வானிலிருந்து, கடலிருந்து, தரையிலிருந்து
குண்டு மழை பொழிந்த
இலங்கைப் படைகளை
ஐ.நா. சபை
போர்க் குற்றவாளிகளாக்க முடியாமைக்கு
அலைவரிசை(சனல்)-4 ஒளிஒலிப் படங்கள்
சான்றாகக் காட்ட வலுவற்றதா?
பொக்கணை தொடங்கி
இரட்டை வாய்க்கால், முள்ளி வாய்க்கால் உட்பட
வட்டுவாகல் வரை
இலங்கை அரசால்
தடை செய்யப்பட்டது ஏன்?
குண்டு மழைக்குள் தப்பிய
நான் கண்டேன்...
கொத்து(கிளஸ்ரர்)க் குண்டு வீழ்ந்ததும்
(கிளஸ்ரர் குண்டு-ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது)
வீழ்ந்த இடத்திலிருந்து
100 மீற்றர் சுற்றுவட்டத்து மக்களை
சாவடையச் செய்தும்
உடல்களைத் துண்டாடச் செய்தும்
தன் வேலையைக் காட்டியதே!
மக்களைச் சிதறி ஓடாமல் செய்ய
மூச்சுத் திணற வைக்கும்
புகைக்குண்டு வீ்ழ்ந்த பின்னே
எரி(பொஸ்பரஸ்) குண்டு வந்து வீழ
குண்டுகள் வீழ்ந்த இடத்து மக்கள்
சாவடையாமல்
தப்பிக்க இயலாமல் இருந்ததே!
இறந்தவர்களையா
நம்மாளுகள் விட்டுவிட்டு வந்தனர்...
தம்மைப் பெற்ற பெற்றோர்களை
தாம் பெத்த பிள்ளைகளை
(கைக்குழந்தைகள் உட்படத்தான்)
தம் துணைகளை, உறவுகளை
தமது சொத்துகளை எல்லாம்
இழந்து வட்டுவாகலில் ஏறியும்
(மெனிக் பாம்) அரச சிறைக் கூட்டில்
(கூரைத் தகடுகளால் அடைத்த அறை)
நினைத்து நினைத்து அழுதவர்கள்
இன்றும் அழுவதை
உலகமே சற்று எண்ணிப் பார்!
மே-18-2009 ஆம் நாள்
இத்தனையின் உச்சக்கட்டம்
அதனால், உலகத் தமிழினம்
இந்நாளில் - இவற்றை
ஒன்றிணைத்து மீட்டுப் பார்க்கையில்
உலகமே
உன் பதிலைச் சொல்வாயா...
இல்லையேல்
கண் மூடித் தூங்குவாயா...
எப்படியோ
நம்மாளுகள் நாள்தோறும்
இவற்றை நினைக்காமல் வாழ
முடியவில்லையே
உலகமே அறிந்து கொள்...!