Wednesday, 31 July 2013

நம்மூரைப் போல வருமா?

ஒரு நாளும் காணாத
தெருமுகம் தான்
அவன்!
அண்ணே! அண்ணே!
நாலு காசு
கொடுங்க அண்ணே...
போக்குவரவுக்குப் பணம்
இல்லாமல்
செய்திட்டாங்கண்ணே!
அடிக்கடி
படிக்கத் தோன்றும்
அவன் வரிகள்!
உறவுக்காரங்க
விறகுக்கட்டை போல
இருந்துட்டாங்கண்ணே!
ஊரில என்றால்
பச்சைத் தண்ணியோட
காலம் போயிருக்கும்...
வேற்றூரில
மாற்றினத்தின் முன்னே
என்னை நம்ப எவருமில்லாத
இவ்விடத்தில
இருக்க வழியில்லாமல்
ஊருக்குப் போக உதவுங்கண்ணே!
அடுத்துத் தொடுத்துச் சொன்ன
அவ்வளவும் - என்
உள்ளத்தைத் தைத்தது!
நானோ பிச்சைக்காரன்...
கட்டைக் கால்
சட்டைப் பைக்குள்ளே
கையை விட்டு
கைப்பிடி குற்றிக் காசுகளை
அள்ளிக் கொடுத்தேன்!
"எந்த ஊரானாலும்
நம்மூரைப் போல வருமா?
எந்நாடானாலும்
நம்நாட்டுக்கு ஈடாகுமா?"
என்றாடிப் பாடி
ஊருக்குப் போற பேருந்தில
துள்ளிப் பாய்ந்தேறினான்
அந்தத் தெருமுகம்!

இளமையில் படிக்காட்டி...

படிக்க, வேண்டிய
அகவையில் இருந்தவர்
பெற்றோர் ஏழ்மையால்
படிப்பை விட்டதால்
துடிக்கும் துயர வாழ்வில்
நம்மவர் தேடும்
வருவாயும் வேலையும் கிட்டாமல்
தெருவழி அலையும்
இன்றைய
நிலைப்பாட்டைப் பாரும்!

ஏழை வீடு

ஓட்டைகள் நிரம்பிய
ஓலைக் குடிசையைப் பார்
வீட்டாரை எழுப்புற மாரிமழை தேடிவர
யாரிடம் சொல்லியழலாமென
ஏழைகள் வீட்டின் உண்மையை
சாலைகள் வந்தேறிக் காணுவீர் நீங்களே!

Sunday, 14 July 2013

பெறுமதியைப் பார்த்துக் காதலிப்பேனுங்க...

ஆண்: காதலர் நாளில் நீங்கள் என்னைக் காதலியுங்களேன்!

பெண்: உங்களிடம் இருக்கின்ற பணத்தின் பெறுமதியைப் பார்த்துத் தான் சொல்லுவேனுங்க!

-------------வேறு--------------

பெண்: காதலர் நாளில் நீங்கள் என்னைக் காதலியுங்களேன்!

ஆண்: உங்களைப் பெத்தவங்க கொடுக்கிற சீர்வரிசையின் பெறுமதியைப் பார்த்துத் தான் சொல்லுவேனுங்க!

நீ என்னைக் கட்டுவியா?

ஆண்: நீ என்னைக் கட்டுவியா?

பெண்: நானோ மகளுக்குத் துணை தேடுகிறேன்!
நீ என்னைக் கட்டுறியோ?

-----------வேறு------------------

பெண்: நீ என்னைக் கட்டுவியா?

ஆண்: ஒன்றுக்கு இரண்டைக் கட்டிப்போட்டு
முளிசுகிறேன். நீயோ மூன்றாவதாக வரலாமா?

படிப்பில்லாத தொழில்

ஆசிரியர் : படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?

மாணவர் : அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!

நான் சாவடைந்தால் நால்வர் வேண்டும்!

நல்ல உறவுக்கு எள்ளையும் பங்கிட்டு உண்
வெல்ல முயன்றால் பயின்று பழகிக் கொள்
நாலு நட்புக்கு நல்ல அன்பு வேண்டும்
சுடலைக்கு நடைபோட நாலு நட்பு வேண்டும்
"உன்னை நீ அறி"

தண்டின புக்கை

சின்னவர் : என்னங்க பெரியவர் பொங்கிப் படைச்சாச்சோ?

பெரியவர் : வாங்கோ சின்னவர் பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை நிரம்பக் கிடக்கு!

சின்னவர் : எப்படி ஐயா?

பெரியவர் : இன்று பிச்சை எடுப்பதிற்குப் பதிலாகப் புக்கை எடுத்தேன்!

சாகாமல் வாழப் பாருங்கோ

முகத்தார்: வலன்ரைன் நாளில என்ன பண்ணுவீங்கள்

சிவத்தார்: காதலில தோல்வியுற்றவர் செய்யிறதைத் தான்

முகத்தார்: அப்ப சாவீட்டுக்கு ஏற்பாடோ...?

கைக்கெட்டியதே போதும்

ஒருவர் : பணம், பொன், பொருள் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு ஓடுறியே! தேட்டம் இல்லையென்று அறிவாயா?

ஒடியவர் : கைக்கெட்டியதே எனக்குப் போதும்! எஞ்சியது; களவு எடுத்த என்னைப் பிடிக்க வரும் காவற்றுறைக்குக் கையூட்டு!

Saturday, 6 July 2013

தெளிவு

ஒருவரும் வேண்டாம்
ஒன்றும் வேண்டாம்
கைக்கெட்டியதைக் கையாள
கற்றுக்கொண்டால் போதும்
எவரைத் தெரிந்து நம்பி
மண்ணில் பிறந்தோம்
எதனைக் கொண்டு வந்து
தலையை நிமிர்த்துகிறோம்
கைக்கெட்டாதது புளிக்குமென
கைக்குக் கிட்டியதை அணைத்து
கையாள முயன்றால் வெற்றியே!

காதலிக்கலாமே!

ஒருத்தி : என்னைக் காதலிக்கலாமே!

ஒருவன் : தாலி கட்ட வேண்டி வந்தால் என்ன செய்வது?

ஒருத்தி : என்னையே கட்டுங்கோ!

ஒருவன் : காதலித்தால் மண் (வீடு, வயல்), பொன் (தங்க நகை, பல லட்சம்) வேண்டேலாதே!

ஒருத்தி : எங்கேனும் முடமானவளைப் பாருங்கோ!
காதல் வந்ததாலே

ஆண்: காதல் வந்ததாலே உன்னை நாடினேன்.

பெண்: எனக்குத் தானே காதல் என்றாலே வெறுப்பு.

ஆண்: என்னங்க இப்படிச் சொல்லிப் போட்டீங்க!

பெண்: ஆண்களெல்லாம் காதலிப்பாங்கள். கடைசியில ஐந்து நட்சத்திர விடுதியறைக்கு இழுத்துப் போட்டு, வயிற்றை நிரப்பிய பின் ஓடி மறைஞ்சிடுவாங்களே!

ஆண்: மன்னிக்கவும்!

பெண்: எங்கே ஓடுறீங்க...

காதல் எங்கே ஊற்றெடுக்கும்?

காதலித்துப் பார் - நீயும்
காதலைப் படிப்பாய் என்கிறார்கள்!
காதலித்துத் தோற்றுப் பார் - நீயும்
காதலால் துன்புறுவாய் என்கிறார்கள்!
எனக்குக் காதல் வரவில்லை என்றால்
என்னைச் சாவடைந்த உடல் என்கிறார்கள்!
காதல் எங்கே ஊற்றெடுக்கும் என்றால்
"ஒருவர் துன்பத்தைப் போக்க
ஆற்றுப்படுத்த வருபவரின் செயல்" என்கிறாள்
என்னைக் காதலித்தவள்!

எப்படி எழுத்தாளராகலாம்?

ஆசிரியர்: எப்படி எழுத்தாளராகலாம்?

முதலாம் மாணவன்: பிறர் எழுதி வெளியிட்டதைப் படித்து...

இரண்டாம் மாணவன்: எங்கட அக்கா பத்திரிகையில் படித்து இணையத்தளத்தில பரப்புறா

ஆசிரியர்: படியெடுத்துப் பரப்பினால் எழுத்தாளராக முடியாது பிள்ளைகளே!

எது உண்மையான காதல்?

தமிழ் திரைப்படம் பார்த்தால் காதல் வருமாம். அது பொய்க் காதலாம். ஆபத்துக்கு உதவியவர்களிடையே காதல் வருமாம். நீண்ட கால நண்பர்களிடையேயும் காதல் வருமாம். உண்மையா?

  •   பள்ளிக் காதல்
  •   தெரு வழியே அலைந்து தேடிய காதல்
  •   உயர் நிலைக் கல்லூரிக் காதல்
  •   தமிழ் திரைப்படம் பார்த்து வந்த காதல்
  •   ஆபத்துக்கு உதவியதால் வந்த காதல்
  •   நீண்ட கால நட்பால் வந்த காதல்
  •   இயல்பாய் இயற்கையாய் அமைந்த காதல்


அழகு

சிறந்த அழகிருந்தும் பாருங்கோ
பறந்துவர மணமகன் இல்லையே
"அழகை விடப் பணம் பெரிதாம்..."