Friday 20 March 2015

இப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்?

பேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே!" என்று கேட்டாள்.

அதற்கு அறிஞர் பேர்னாட்ஷா என்ன கூறியிருப்பார்?

அந்த அழகிய நடிகையைப் பார்த்து "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?" என்று அறிஞர் பேர்னாட்ஷா கேட்டதும் அந்த நடிகை அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டாளாம்.

இந்தத் தகவலை நாளேடு ஒன்றில் படித்தேன். படித்ததும் "இப்படி நானும் எழுதினால் என்ன?" என்று எழுதியதைக் கீழே தருகின்றேன். எனது கைவண்ணத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

இல்லாள் வள்ளி இல்லாத வேளை அயலாள் பொன்னி அறிஞர் பேர்னாட்ஷா பற்றி நாளேடு ஒன்றில் படித்ததாகக் கூறிப் பொன்னனிடம் கேள்வி கேட்கின்றாள்.

பொன்னி: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற கதை/பாட்டுப் புனையும் ஆற்றலுடன் உங்களைப் போன்ற அழகும் இணைந்த பிள்ளை பிறக்குமே!

பொன்னன்: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற வேளாண்மை செய்யும் ஆற்றலுடன் உங்களது நிறைவேறாத விருப்பமும் (ஆசையும்) இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?"

பொன்னி: நீங்கள் அழகு இல்லாதவரா? எனக்கு நிறைவேறாத விருப்பம் (ஆசை) இருப்பதை எப்படி அறிவீர்?

பொன்னன்: எனக்கு வேளாண்மை செய்தமையால் உடற்கட்டு இருக்கலாம். அது அழகில்லையே! நானும் நீரும் கூடிப் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என்கிறியே - அது உன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

பொன்னி: உடற்கட்டு மன்னவரே! நானும் நீரும் கூடினால் பிள்ளை பிறக்காதா? பிறகேன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) என்பீர்?

பொன்னன்: பிள்ளாய்! என் இல்லாள் வள்ளிக்கு இந்தக் கதை தெரிந்தால். நீ உயிரோடு இருக்கவே உனக்குக் கொள்ளி வைப்பாளே! அப்படி என்றால் உன் எண்ணம் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

அந்த நேரம் வள்ளி வீட்டிற்குள் நுழையப் பொன்னி வாயடைத்துப் போட்டாள். பொன்னனும் மூச்சு விடவில்லை. ஏதோ வள்ளியும் பொன்னியும் பறைய, பொன்னன் வீட்டு முற்றத்தில் இறங்கினான்.

Saturday 14 March 2015

எனக்குக் காதல் வரவில்லை!

1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!

2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!

Wednesday 11 March 2015

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்துவது சரியா? தவறா?

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!

சிறுபான்மை இனங்களை நசுக்கும் பேரினவாதிகளின் செயலால்; சிறுபான்மை இனங்களைக் காப்பாற்ற அவர்களுக்கெனத் தனிநாடு அமைத்துக் கொடுத்தால் நல்ல தீர்வாக அமையுமெனச் சிலர் கருதுகின்றனர். சிறுபான்மை இனங்கள் அதிகம் தமிழைப் பேசுவதால் அத்தனிநாட்டைத் தமிழீழம் என்கின்றனர்.

சிங்களப் போராளிக் குழுக்களான சேகுவாரா, ஜேவிபி மற்றும் தமிழ் போராளிக் குழுவான புலிகள் போன்றவற்றை ஒடுக்கிவிட்டதால், இனிப் போர் மூளாது என்ற முடிவுக்கு வர இயலாது. முதலாளித்துவ அரசை மாற்றி சோசலிச அரசை உருவாக்க முனையும் சிங்களப் போராளிக் குழுக்கள் மீளவும் உருவெடுக்கலாம். அதே போல தமிழ் போராளிக் குழுக்களும் உருவெடுக்கலாம்.

எனவே, அமைதியான இலங்கையைப் பேண; இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்கு நல்ல தீர்வு தேவைப்படுகிறது.

1. சரி, சிறுபான்மை இனங்கள் மகிழ்வாக வாழத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்தலாம்.

2. தவறு, ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கக்கூடிய தீர்வு அமைந்தால் போதுமே!

எந்தவொரு தீர்வானாலும் ஐக்கிய நாடுகள் சபை தான் முன்வைக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் அமைதி தோன்ற வாய்ப்பில்லையே! இப்படி நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னால் என்னத்தைப் பண்ண இயலும்? எப்போதும் சிக்கலை(பிரச்சனையை) அலசுவதை விட தீர்வுகளை அலசுவது மேல். உங்கள் எண்ணத்தில் தோன்றும் தீர்வுகளை முன்வைத்தால், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம்.

எனது தீர்வு ஒன்று மற்றைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/