Monday, 30 June 2014

சாவின் பின்னும் சாகமாட்டாய்


மரம் இருந்தால்
நிழல் தரும் பயனுண்டு
மனிதனாக இருக்கும்
நம்மாளுகளால் - ஏதும்
உலகுக்குப் பயனுண்டோ?
மரம் தரும் நிழல் போல
மனிதரும்
சூழ உள்ளோருக்கு நல்லது செய்ய
முன் வந்திருந்தால்
"வள்ளுவர், பாரதி போன்றோர்
தமிழுக்கு ஆற்றிய பணி போல..." என்று
உங்கள் பெயரையும் நினைவூட்ட
நாளைய தலைமுறை காத்திருக்கிறதே!
பிறந்தோம்
வாழ்ந்தோம் என்பதை விட
சாவின் பின்னும் வாழும்
வள்ளுவர், பாரதி போன்றோரைப் போல
சாவதற்கு முன்
நம்மைச் சூழவுள்ளோருக்கு
நல்லது செய்து கொண்டே சா...
சாவின் பின்னும் சாகமாட்டாய்
வாழ்ந்து கொண்டே இருப்பாய்!

Saturday, 28 June 2014

மிருகச் சாதி என்போமே!

சாதி உண்டென்று கூறு - அதை
உயிரெனப் போற்றிப் பாடு!
முதலில் என்னோடு பாயாமல்
வீட்டைக் கொஞ்சம் பாரு - அங்கே
ஆண் சாதி, பெண் சாதி ஆக
அப்பாவும் அம்மாவும் இருக்கிறாங்க!
நாம் எல்லோரும்
எல்லாத் தொழிலும் செய்வோம் என்றால்
நாங்களும் மனிதச் சாதியே!
மனிதச் சாதி, ஆண் சாதி, பெண் சாதி ஆக மூன்றும்
எந்நாளும் இருக்கத் தானே செய்யும்!
மூன்று சாதியை விடக் கூட இருப்பதாய்
சான்று கூறிக் காட்டிக்கொண்டு
நம்மாளுகளுக்குள்ளே
நம்மாளுகளை ஒதுக்கிவைப்போரை
மிருகச் சாதி என்போமே!

Wednesday, 25 June 2014

எப்ப மாறும் இந்த நிலைபிச்சைக்காரர்கள் திரட்டும் பணத்தை
வங்கியில் இடுவதும்
தானியங்கி (ATM) இயந்திரத்தில் எடுப்பதும்
வழக்கம் ஆயிட்டுது என்கிறீங்க...
ஒரு பிள்ளை மருத்துவர்
மறு பிள்ளை பொறியியலாளர்
மொத்தமாக எட்டுப் பிள்ளைகளும்
கல்வியிற் பெரியவர்களாயினும்
பெற்றவர்கள்
பிச்சையெடுப்பதை நிறுத்தாயினமாம்...
அட! கடவுளே!
பிள்ளைகள் மாறினாலும்
பெற்றவர்கள் மாறுவதாயில்லையே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!
பிச்சை எடுத்துக் குடித்து வெறித்து
அலைபவர்களை விட
பிச்சை எடுத்துப் பிள்ளைகளைப் படிப்பித்து
ஆளாக்குபவர்களை
நாம் போற்ற வேண்டுமே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!

வாழும் வழி

வாழ்க்கை
காலத்தோடு அள்ளுண்டு போய்விடும்
கைக்கெட்டிய வேளையிலேயே
வாழும் வழியறி!
காலம் கரைந்த பின்னர்
வாழும் வழி பறிபோய்விடுமே!

வெயில் வேளை

உச்சந் தலை வெடிக்கிறதே...
வியர்வையால் குளிக்கிறேனே...
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?"

நாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்

மண்ணிற்காய் மடிந்தவர்கள்
சாவடைந்ததாக வரலாறு இல்லை...
மண்ணில் வாழும் - ஒவ்வொரு
உயிரின் நினைவுகளில் வாழ்பவர்களே!

Tuesday, 24 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

அறிஞர் சொக்கன் சுப்பிரமணியன் பிடியில் சிக்கிய அறிஞர் கில்லர்ஜி "பத்து கேள்விகள் கேட்டுப் பத்துக்கும் பதிலளிக்க" என்று என்னையும் தன் பிடிக்குள் சிக்க வைத்துவிட்டார். கில்லர்ஜி அவர்களிடம் உச்ச முடியுமா? முத்துக்கு முத்தாகப் பத்துக்குப் பத்தாகக் கேள்வி - பதில் போட்டிட்டு "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்று கேட்கலாமோ? கேட்டிட்டாங்களே! ஆகையால் என் பதிலையும் கிழே பதிவு செய்கிறேன். 

1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறு அகவை வரை வாழ்வேனா என்பது ஐயம் தான்...
நூறாம் அகவைப் பிறந்த நாள் வரை வாழ முடிந்தால் நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு எழுதுகோல் வழங்கிப் பாபுனையக் கற்றுக்கொடுப்பேன். நம்மவூரு சித்தி விநாயகர் கோவில் முன் நூற்றுக் கணக்கானோருக்கு மதிய உணவு வழங்குவேன். வசதிகளைப் பொறுத்து மேலும் நல்லன செய்வேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

காலத்துக்குக் காலம் விருப்பங்கள் வேறுபடலாம். ஆயினும், விருப்பம் / நாட்டம் உள்ள எல்லாம் கற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் / விரும்புவேன். அப்படி இருப்பினும் முதன்மையாகத் தமிழ், அடுத்துக் கணினி நுட்பம். 

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

கடைசியாகச் சிரித்த நாள், திகதி நினைவில் இல்லை. ஆனால், சிரித்தேன். நம்ம ஜோக்காளி தளத்துத் தமிழ்மணம் நிலை (Rank) இரண்டாக இருந்தும் "என்னை நிலை (Rank) நான்கிற்கு உயர்த்திய வலை உறவுகளுக்கு நன்றி" என்றிருந்ததைப் பார்த்துத் தான்...

4. 24மணி நேரம் மின்தடை (பவர்கட்) ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகலாயின் அம்மன் கோவில் தெற்கு வாசலில் இருந்து காற்று வாங்கப் போவேன். பால்நிலாவாயின் வீட்டு முற்றத்தில் பொழுது போகும். முன்னிரவாயின் அந்தி சாயுமுன் உண்டு உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லையாயின் 
"வேளாவேளைக்குப் பணம் செலுத்தியும்
நாள் முழுக்க மின்னொளி இல்லையே!" என்று கவிதை எழுதக் கற்பனை பண்ணுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

கணவன்-மனைவி ஒற்றுமை வேண்டும். ஒட்டி உறவாடப் பண வருவாய் வேண்டும். கட்டிப்புட்டால் பிறக்கும் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும். இதற்கு மேலே சொல்லலாம். ஆனால், அவங்க காது கொடுத்துக் கேட்கமாட்டாங்களே!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகெங்கும் நம்பிக்கை இல்லாமையே அடிப்படைச் சிக்கல் (பிரச்சனை). உறவுகளிடையே நம்பிக்கை இல்லாமையே மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம். எனவே, நம்பிக்கையை ஏற்படுத்த உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவேன். நம்பிக்கை இல்லாமையைப் போக்கினால் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டலாம்.

7. நீங்கள் யாரிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பீர்கள்?

நன்கு அறிந்தவர்களிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பேன். ஆனால், தனியொருவரிடம் கேட்கமாட்டேன். நான்கைந்து ஆள்களிடம் கேட்பேன். பின் எல்லோரும் சொன்னதில் பொதுவானதைப் பின்பற்றுவேன்.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

என்னை ஆய்வு செய்ய வருவோருக்குக் குறித்த தகவல் பொய்யானது என விளக்குவேன் அல்லது உண்மை நிலையை விளக்குவேன். ஆனால், தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராகப் போராட மாட்டேன். ஏனெனில், அவர்கள் தானே என்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள் (பிரபலமாக்குகிறார்கள்).

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அவர் சொல்வதைக் கேட்டு, அவரது துயரத்தை ஏற்று 
"இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை
ஆயினும்,
இழப்புகளுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும்!" என ஆற்றுப்படுத்த முயற்சிப்பேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

மூலை முடுக்குகளில் கிடக்கும் முழு நூல்களையும் புரட்டிப் படிப்பேன். எழுதுகோலையும் எழுதுதாளையும் எடுத்து ஏதாவது எழுதுவேன். கணினியை இயக்கி வலைப்பூக்களில் நண்பர்களின் பதிவுகளைப் படிப்பேன். 

கீழ்வரும் வலைப்பூக்களின் அறிஞர்கள் போட்ட பிடியில் நீங்கள் சிக்கவில்லையாயின் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கின்றேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன். பொதுவான இந்த அழைப்பைப் பணிவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

உள்ளம் திறந்து தத்தம் உணர்வுகளைப் பகிர்ந்து வலைப்பூ உறவுகளுக்குள் என்னையும் உள்வாங்கி; நெருங்கிய உறவாக்க "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்ற பகிர்வோடு கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது நன்றிகள். 

பாடமடி/பாடமடா


முன்மாதிரிகளைப் பார்த்து
நாம் வாழத்தானே
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!
முன்னே போய்
வீழ்ந்தவனைப் பார்த்துத்தானே
முன்னேற முடியும்!
எவரெவரோ
எதையெதைச் சொன்னாலும்
நல்லதைக் காதில் போட்டால் தானே
குறிக்கோளை அடைய முடியும்!
குறிக்கோளை அடையும் போதே
உள்ளம் நிறைய
மகிழ்ச்சி பொங்குகிறதே!
சுட்ட பின்னே அறிகிறோம்
சுட்டது நெருப்பென்று
பட்ட பின்னே அறிகிறோம்
கெட்டது நாமென்று
எப்படிப்பட்டாலும்
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!

Sunday, 22 June 2014

பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

உருளும் உலகில்
நகரும் நகர மணித்துளிகளில்
நம்மூரின் நினைவோடு
வாழும் நண்பர்களின் கருத்துக்கள்
ஊர்க்காரங்களுக்குப் பாடமாயிட்டுதே!
நம்ம ஊருப் பொடி, பெட்டைகளே!
நகருக்குப் படிக்கப் போனாலும் கூட
சுறுக்கா ஊருக்கு வந்திடணும்...
ஊரரிசிப் பழஞ்சோறும்
நம்மூரு எள்ளில ஊற்றிய
நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து
தொட்டுத் தின்ன சிவப்புச் சம்பல்
கடிச்சு நொறுக்க மோர்மிளகாய்ப் பொரியல்
எல்லாம் தயாரென்று
அப்பு, ஆச்சி அழுகிறது கேட்கிறதா?!
என்னத்தைப் படிச்சுக் கிழித்தாலும்
பிள்ளைகளே
ஊருக்க பணி செய்யாட்டி
ஊர்க்காரங்க திட்டுவாங்க...
கடவுளுக்கும்
பொறுக்காது பாருங்கோ...
உங்களைப் பெத்த கடமைக்காவது
ஊருக்க பணி செய்ய
உடனே வந்திடு என்கிறாள்
உங்களைப் பெத்த தாய்மார்!
உலகம் உருள உருள
நகர மணித்துளிகள் நகர நகர
பெத்த தாய்மாருக்கு
தங்கட பொடி, பெட்டைகள்
தங்கப் பவுணாக
ஊருக்குத் திரும்பும் வரை
நிம்மதியில்லை என்பதை
நகரத்தில் சுற்றும்
பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

Thursday, 19 June 2014

நீரு

வெங்காயத்தை உரிச்சாக் கண்ணீரு
காதலிக்கக் குதிச்சால் கானல்நீரு
"பட்டறிவின் விளைச்சல்..."


Wednesday, 18 June 2014

எட்டிப் பிடிக்கலாம்

நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வெண்மை தான்
ஆனால், மனிதன்
சோர்வு(நட்டம்) அடைந்தாலும்
தேட்டம்(இலாபம்) அடைந்தாலும்
தன்னை நிலையாகப் பேணுவதில்லையே!
கருமுகில்
மூடிமறைத்தாலும் ஓடிவிலகினாலும்
வானம் எப்பவும் நீலமே
ஆனால், மனிதன்
குறுக்கீடுகள் வந்தாலும் போனாலும்
துயர் அடைவது ஏன்?
இயற்கையில்
எத்தனை மாற்றங்கள் வரினும்
தன் இயல்பை இழப்பதில்லையே
ஆனால், மனிதன்
வாழ்க்கையில்
தன்னைக் குறைத்து மதிப்பிடுவது
நல்லதிற்கு இல்லைப் பாரும்!
வீசும் காற்றைக் கூட
மரங்கள்
எதிர்த்து நின்று நிமிர்ந்து நிற்கிறதே
ஆனால், மனிதன்
வாழ்க்கையில்
எது வந்தாலும் முகம் கொடுத்து
எதிர்த்து நின்று வாழ அஞ்சுவதேன்!
தன்னம்பிக்கை இருந்தால்
எந்த
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாம் வாருங்கள்...
எதிர்த்து நின்றால்
எதிர்க்க வந்தவை - உங்களுக்கு
அஞ்சி ஓடுவதைப் பாருங்கள்...
மனிதா - நீ
துணிந்துவிட்டால்
உலகமே
உனக்கு ஒரு தூசு...
மனிதா - நீ
எதற்கும் பணிந்துவிடாமல்
முயன்று பார்
எட்டிப் பிடிக்கலாம்
உனக்கு முன்னாலே போய்க் கொண்டிருக்கும்
வெற்றிகளைக் கூட...
மனிதா - நீ
வெற்றிகளுக்குக் கிட்ட நெருங்கிவிட்டால்
தோல்விகள்
ஒரு போதும் உன்னை நாடாதே!

Monday, 16 June 2014

நாங்களும் இருக்கிறோம் எல்லோ...

தெருவழியே நாங்களும் இருக்கிறோம்
வயிற்றுப் பிழைப்புக்கு
உழைக்க முடியாத ஊனங்களாக...
இளகிய நெஞ்சுக்காரர்
பழகிய முகமே இல்லாமல்
"நீங்கள் உண்டு, களித்தால் தான்
நாங்கள் மகிழ்வோம்" என்று
உதவுபவர்கள் இருக்கிறதால தான்
தெருவழியே நாங்களும் பிழைக்கிறோம்...
"தைப்பொங்கல்,
சித்திரைப் புத்தாண்டு,
தீபாவளித் திருநாள் போன்ற
நன்னாளிலாவது
எஞ்சியோர் உதவக்கூடாதா?" என்று
நாங்களும் தெருவழியே
இருக்கிறோம் எல்லோ என்று
உழைக்க முடியாத ஊனங்கள் கேட்பது
எவர் காதிலாவது விழுகிறதா?

Saturday, 14 June 2014

சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?

பால் பருக்கிச் சோறு ஊட்டிவிடத்தான்
பெற்றவர்களால் முடியுமென்பதால்
வேளாவேளைக்கு
பள்ளிக்கூடம் அனுப்புவது
அகரம் தொட்டு
கருவி(ஆயுதம்) வரை படிக்கத்தானே!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடம் போனோம் வந்தோம்
படித்தோமோ என்றால் இல்லைப் பாரும்
நீங்கள் அல்ல நான் தான்!
பள்ளிக்கூடக் காலம் முடிஞ்ச பிறகு தான்
வயிற்றுப் பிழைப்புக்கு உழைப்பைத் தேடினால்
வழி நெடுகப் பிச்சை எடுப்பதே
தொழிலானதால்
கண்டதெல்லாம் கண்ணை மூடியே
கற்றுத் தேறியதாலே
நாற்காலித் தொழில் எல்லோ
எனக்குக் கிடைத்தது என்பேன்!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடப் படிப்பை
ஒழுங்காகப் படித்து முடித்திருந்தால்
இன்றைக்கு நானோ உலகத்தில் பெரியன்!
கொஞ்சம் நினைத்துத் தான் பாருங்கோ...
பிச்சை எடுக்கையிலே படிக்க முடிந்ததால்
இன்றைக்கு நானோ ஊருக்குள்ளே சிறியன்!
'கல்வி' என்பது
தொடக்க காலத்தில் புளிக்கத்தான் செய்யும்
முற்றிய காலத்தில் இனிக்கத்தான் செய்யும்
பட்டுத் தெளிந்த
என்னைப் போன்றோருக்கு
நன்றாகத் தெரிந்த உண்மை இது!
என் இனிய இளைய நெஞ்சங்களே...
பிஞ்சில படிக்கப் புளிக்குமென
கல்வியை
முளையிலேயே கிள்ள நினைக்காதீர்கள்!
எனது அருமை மாணவிகளே... மாணவர்களே...
என் போன்ற பழுத்த கிழங்கள்
உமக்கு உரைப்பது
தாங்கள் செத்தாலும்
நீங்கள் நல்லாயிருக்கத் தான் பாருங்கோ!
பள்ளிக்கூடம்
படிக்கப் போகும் பிள்ளைகளே...
எட்டாப் பழம் புளிக்குமென
கல்வியை விட்டு எட்ட விலகாதீர்கள்...
என்னைப் போல
நாய்படாப் பாடுபட்டோர்
கதைகள் கேட்டுமா படிப்புக்குப் பின்னடிப்பு!
என்னகாணும் வருங்காலச் செல்வங்களே...
சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?
சின்னஞ்சிறு அகவையிலே
முடிவு செய்யுங்கள் - அம்முடிவே
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதை
உங்களுக்கு நினைவூட்டக் காத்திருக்கிறதே!

Thursday, 12 June 2014

சிறுவர்களும் பாலியல் படங்களும்

பதினெட்டு அகவைக்கு மேற்பட்டோர் பார்க்கவேண்டிய படத்தில பதினெட்டு அகவைக்குக் கீழ்ப்பட்டோர் நடிக்கிறார்களே!

பார்க்கிற இளசுகள் சிறுவராக இருக்கையில் செய்த சின்னச் செயல்களை மீட்டுப் பார்க்கவா? அல்லது பாலியல் படங்களைச் சிறுவர்கள் களவாகச் சென்று பார்த்துவிடத் துடிக்கும் நிலையைத் தோற்றுவிக்கவா?

எந்தப் பக்கத்தால எண்ணிப் பார்த்தாலும் கெட்ட செயலாகவே எனக்குப் படுகிறது. எந்த அரசும் இது பற்றிக் கவலைப்பட்டதாகத் தகவல் இல்லை. இதனைத் தடுத்தால் அரசுக்கு வருவாயில்லைப் போலும்.

முயன்றவர் வெல்வார்

அச்சம் இருக்கும் வரை
முன்னேற்றத்திற்கு இடமில்லை...
முயற்சி இருக்கும் வரை
பின்னடைவுக்கு இடமில்லை...
தன்னம்பிக்கை இருக்கும் வரை
தோல்விக்கு இடமில்லை...
முயற்சியும் கையுமாக
தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்கள்
வெற்றியை நெருங்கிச் செல்ல
தடைகள் தாமாகவே விலகி
வழிவிடுவதைப் பாருங்களேன்!

Monday, 9 June 2014

ஒரு வரியில எடுப்பு

சிலருக்கு அழகான எடுப்பு (ஆடம்பரம்) முக்கிய தேவையாயிற்று.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். ஆனால், தோல்வியுற்றால் தற்கொலை செய்யக்கூடாது.

கூழுக்கும் விருப்பம்(ஆசை) மீசைக்கும் விருப்பம்(ஆசை)

சவப்பெட்டிக் கடைக்காரர் : கடவுளே! கொஞ்ச நாளாக வணிகம் இடம்பெற மாட்டேங்குது. எங்கட ஆட்களிடையே போரை மூட்டி விடப்பா...

கடவுள் : போரை மூட்டினால் என்னைக் கொல்லுவாங்களே! எனக்கு வேண்டாமப்பா இந்த வேலை...

Friday, 6 June 2014

பொழுதுபோக்குப் பற்றி...


நம்மாளுகள் பயன்மிக்கதாகப் பொழுதுபோக்குவதில்லை. பின் பல தொல்லைகளுக்கு முகம் கொடுப்பர். அப்படி ஒரு நிகழ்வைப் படியுங்க...

கந்தர் : எப்படிப் பொழுது போகுது?

முருகர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...

கந்தர் : நேரம் வசதியாக அமையுதோ?

முருகர் : ஆளுக்கேற்றால் போல நேரம் ஒதுக்கிறேன்.

கந்தர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?
முருகர் : எல்லாம் சும்மா என்பேன்...

அந்த வழியால பத்துக் குமரிகள் வந்தார்கள். ஒருத்தி முருகரைக் காட்டி கந்தரிடம் "திருமணமானவரா?" என்று கேட்டாள்.

கந்தர் : அவர் திருமணமாகி ஆண்டுக்கு ஒன்றாக ஆறு பிள்ளைகளைப் பெற்றவராச்சே...

குமரிகள் (முருகரைப் பார்த்து) : "உங்கட மூஞ்சிக்கு எங்களில ஆளுக்கொருவராக ஆறாளைக் காதலிக்க வருகுதோ?" என்று ஆளாளாக தலைதெறிக்கக் கல்லெறிந்தார்கள்.

கந்தர் : அந்த ஆள் பொழுதுபோக்காகக் கதைத்திருப்பார். உதெல்லாம் பெரிதாக எடுக்காதைங்கோ...

குமரிகள் : பொழுதுபோக்கிற்கு நம்மட இளமையே கிடைச்சதெனக் கேட்ட பின் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

கந்தர் (முருகரைப் பார்த்து) : பொழுதுபோக்குப் பற்றி உன்னட்டையெல்லோ படிக்க வேணும்...

முருகர் : தலை வெடித்து ஆறாக ஓடும் செந்நீரை (குருதியை) நிறுத்த வழி பாரடா...

கந்தர் : எல்லாம் சும்மா என்பேன் என்றாய்... இப்ப எப்படித் தோழா?

ஈற்றில் கந்தரும் முருகரும் கணபதி மருந்தகத்திற்கு மருந்து கட்டச் சென்றனர்.

நேற்று, இன்று, நாளை


நேற்று என்பது
முடிந்த கதையல்ல...
வழிகாட்டும் பட்டறிவு
தந்த நாள்!
இன்று என்பது
கரையப் போகும் நாளல்ல...
மகிழ்ந்து வாழக் கிடைத்த நாளே!
நாளை என்பது
வந்த பிறகு
காணவேண்டிய நாளல்ல...
நாளையை நிறைவாக நகர்த்த
நேற்றைய பட்டறிவோடு
இன்றே திட்டமிட்டால் தான்
பொன் நாள்!

Thursday, 5 June 2014

காதலாகும் நேரம்

அவளிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவளுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை ஆண்கள் உலாவுகின்றனர்!
அவனிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவனுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை பெண்கள் உலாவுகின்றனர்!
சொல்ல வரமாட்டேங்குதே என்ற
ஆண்களே... பெண்களே...
உங்கள் உள்ளத்திலே
காதலிக்கத் தோன்றுதே தவிர
காதல் அமையவில்லையே!
நெற்றி முட்ட நேரே
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
ஆணிடமோ பெண்ணிடமோ
சொல்லத் துணிவு வந்த நேரம் தான்
காதல் அமைந்தது (காதலாகியது) என்பேன்!
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சும்மா கேட்டுப் பார்ப்போமென
முன் பின்
அறிமுகம் இல்லாதவரிடம் கேட்டால்
விசர்/பைத்தியம் என்ற பட்டமளிப்புத் தான்
உங்களுக்குக் கிடைக்குமென்பதை
மறந்துவிடாதீர்கள்!

உன் நிலைமை என்ன ஆகும்!

நாளும் நகர
நேரமும் கரைய
நடுவழியில் நம்மாளுகள்...
நிலை தடுமாறினால்
கொஞ்சம் நில்லுங்கோவேன்...
நெஞ்சில் துணிவு வந்தால்
நடையைக் கட்டுங்கோவேன்...
பிழையெனப் பட்டால்
பின்வாங்கலாம் தானே...
சரியெனப் பட்டால்
முன்னேறலாம் தானே...
முடிவே இன்றி
இடைவழியில் நின்றால்
உன் நிலைமை என்ன ஆகும்!

Wednesday, 4 June 2014

பணமிருந்தும்...

ஒருவர் : நீங்கள் எப்படி?

மற்றவர் : பில்கேட்ஸ் போல பணக்காரன்!

முதலாமவர் : பில்கேட்ஸ் போல பொதுமக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது செய்கிறீர்களா?

இரண்டாமவர் : இல்லையே...

படிச்சும்...

ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?

மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...

முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?

இரண்டாமவர் : இல்லையே...

கறுப்புத் தலை

ஒருவர் : என்னண்ணே! மீசை, தாடி நரைச்சும் தலை கறுப்பாய் இருக்கே...

மற்றவர் : முகத்துக்கு மை பூச மறந்திட்டேன்... அதைக்கூடக் காட்டிக் கொடுக்கிறியே...

Tuesday, 3 June 2014

உண்மை

காற்றை எதிர்க்கும்
வலிமை உண்மைக்கே...
ஏனென்றால்
காற்றோடு பறப்பது
பொய்யல்லவா!
கேட்போர் காதருகே
போய்ச் சேரும்
பொய்கள் பெறுமதி இழக்க...
உலகத்தையே
தன் பக்கம் இழுப்பது
உண்மையே!
பொய்கள்
கேட்போரை நாடும்
கேட்போரையே நாட வைப்பது
உண்மையே!
ஈழ மக்கள்
கேட்ட, பரப்பிய பொய்கள்
உலகின் காதுக்கெட்டாமலே
ஈழ மக்களின்
சாவுகள், துயரங்கள் மட்டுமே
உலகின் கண்ணுக்கு
புலப்பட வைத்தது எதுவென்றால்
உண்மையே!
உரக்கச் சொல்லி, உறைக்க எழுதி
பரப்பிய பொய்கள் யாவும்
சாவடைந்து மறைந்து போக
ஊமையாய் உறங்கிக் கிடக்கும்
உண்மை மட்டும்
சாவை அடையாமலே
வாழ்ந்து காட்டும்!

உலகை ஆள

தேர்வு எழுதிய பின்
படித்தது பட்டறிவு!
பட்டறிவு என்பது
வாழ்வுக்கு வழிகாட்டும்
ஆசிரியன்!
படித்துத் தேர்வெழுதித் தேறுவது
படித்தறிவு!
உலகில் முன்னுக்கு வர
பின்னுக்கு நின்று துணைபுரிவது
படித்தறிவே!
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா-  நாம்
உலகை ஆள உதவும்!

Monday, 2 June 2014

பேரூந்து நடத்துனருடன் மோதல்

சிறுவன்:
அண்ணே! அண்ணே!
குண்டுகல்யாணம் இருந்தால்
(இரண்டாள் இருக்கையை
இடம் பிடிக்கும் ஒரு நடிகர்)
ஓர் ஆள் கூலி...
என் அக்காள் இருந்தால்
இரண்டாள் கூலியா...
நடத்துனரே - இது
உமக்கே நல்லாயிருக்கா?

நடத்துனர்:
அட! பிஞ்சுக் குஞ்சு...
உன் அக்காள்
வயிற்றுக்குள்ளேயும்
ஓர் ஆள் இருக்காரடா!

சிறுவன்:
என் அக்காள் வயிற்றில
ஏழு ஆள் நடத்துனரே...
என் அப்பா
ஒளி அலைச் (Scanning) சோதனை
செய்து பார்த்த வேளை
கண்டுபிடிச்சிட்டோமே!

நடத்துனர்:
ஏன் பிஞ்சு!
உன் அப்பா
பெண் பிள்ளை என்றால்
பெத்தவுடனே அழிச்சிடவா?

சிறுவன்:
பெண்ணின் வயிற்றில் இருக்கும்
பிறக்க இருக்கிற குழந்தைக்குக் கூட
உங்களைப் போல நடத்துனர்கள்
கூலி வேண்டாமல் இருக்கவே!

நடத்துனர்:
நீ பிஞ்சு இல்லையடா
பிஞ்சில வெம்பி பழுத்த
பழமடா!

பேரூந்தில் நின்ற பெரியவர்:
நிறுத்தடா...
நடத்தை கெட்ட நடத்துனரே!
தாயாகப் போற பெண்ணுக்கு
நீங்கள் கொடுக்கிற மதிப்பு
இவ்வளவு தானா?
குழந்தைகள் இல்லாமல்
துயரப்படுகிறவங்களுக்குத் தான்
தெரியுமடா
தாயாகப் போறவளுக்கு
கொடுக்க வேண்டிய மதிப்பு!
(யாவும் கற்பனை)

Sunday, 1 June 2014

போட்டியோ போட்டி!

கொதித்துப் பொங்கியெழும்பும்
நெருப்புக் குழம்பான
ஞாயிற்றுக் கதிரை விட
ஞாயிற்றுக் கதிரையே
தான் பெற்றுத் தரும் ஒளி பெரிதென
ஞாயிறு - நிலவு மோதுவதும்
போட்டியோ போட்டி!

இயற்கையின் இயல்பழகு
செயற்கையின் தனியழகு
இரண்டையூம் - பாவலன்
எண்ணிய எண்ணப்படி பாபுனைய
இயற்கையால் அமைந்த
நம்மவூருப் பெண்ணழகுக்கும்    
செயற்கையால் அமைக்கும்
நம்மவூருப் பெண்ணழகுக்கும்
போட்டியோ போட்டி!

இயற்கை உணவோடு
இயற்கை நடைமுறையோடு
வாழும் நம்முறவூகளுக்கும்
செயற்கை உணவோடு
செயற்கை நடைமுறையோடு
வாழும் நம்முறவூகளுக்கும்
நெடுநாள் வாழ்வோர் எவரென
போட்டியோ போட்டி!

படித்துப் பட்டமும் பெற்றோர்
ஒப்புக்குச் சாட்டும் சுட்டி
தம் கருத்தை மெய்ப்பிக்க
பட்டறிவே பெரிதெனப் பெற்றோர்
பட்டதையே சொல்லி வைத்து
தம் கருத்தை மெய்ப்பிக்க
எடுக்கும் முயற்சிகள் எல்லாமே
போட்டியோ போட்டி!

பணப் படைத்தோர் பிள்ளை
முன்னணிப் பள்ளியில் படிக்க
ஏழை வீட்டுப் பிள்ளை
பின்னணிப் பள்ளியில் படிக்க
கையூட்டு வேண்டும் ஆசிரியரிருக்க
ஏழைக்கு எழுத்தறிவித்தவர் இறைவனாவாரென
பாரதி சொன்னபடியுள்ள ஆசிரியரிருக்க
நம்ம நாட்டுப் பிள்ளைகள் படிப்பதும்
போட்டியோ போட்டி!

போட்டிகள் வேண்டும் உறவுகளே...
போட்டியால் வெளிப்படும் பெறுதிகள்
நம்முறவுகளுக்கும் நம்நாட்டுக்கும்
நன்மை அளிக்க வேண்டியே
நாடு, இன, மத, மொழி, இட வேறுபாடின்றி
பங்காளிகள் பங்கேற்கையிலே
நன்மைகள் விதைக்கப்படும் வேளை
போட்டியோ போட்டி!

மறக்கமுடியவில்லை!

பள்ளிக் காலத்தை
மறக்கமுடியவில்லை
பள்ளி ஆசிரியையிடம் அடி வேண்டியதை
மறக்கமுடியவில்லை
பள்ளிக்குப் போகாமல் ஒளித்ததை
மறக்கமுடியவில்லை
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை
மறக்கமுடியவில்லை
அன்பு வைத்த நண்பர்களை
மறக்கமுடியவில்லை
உன்ர மூஞ்சிக்கு ஒரு காதலாவென
நெற்றிக்கு நேரே மறுத்த தோழிகளை
மறக்கமுடியவில்லை
விரும்பிய பொருள்கள் கைநழுவிப் போனதை
மறக்கமுடியவில்லை
விரும்பிய செயல்களை நடாத்த முடியாமையை
மறக்கமுடியவில்லை
விரும்பிய ஆள்கள் பிரிந்தமையை
மறக்கமுடியவில்லை
இல்லாளுடன் சண்டை போட்டதை
மறக்கமுடியவில்லை
கடன் வேண்டிச் சிக்கி அழுததை
மறக்கமுடியவில்லை
தொழில் இன்றி வீட்டில் கிடந்ததை
மறக்கமுடியவில்லை
படிக்காதவனென
பலர் என்னை ஒதுக்கியதை
மறக்கமுடியவில்லை
காசில்லாதவனெனப் பிரிந்த உறவுகளை
மறக்கமுடியவில்லை
இணைந்தால் தொல்லையென
இணையாது இருக்கும் உறவுகளை
மறக்கமுடியவில்லை
இப்படித்தான்
எத்தனையோ நினைவலைகளை
மறக்கமுடியவில்லை
எப்படியிருப்பினும்
எதிர்பார்த்த எல்லாம் கிட்டாது போனால்
எப்போதும் மறக்க முடிவதில்லையே!