Sunday, 28 April 2013

வாய்க்குள்ளேயே வாழ்க்கையா?


ஆண்பிள்ளை வீட்டார் கேட்கின்ற பெறுவனவால்
பெண்பிள்ளை வீட்டார் வெட்டென்று வீழ்கின்றனர்!
பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை கரைசேரவாம்
ஆணைப் பெற்றவர்கள் கிள்ள வருவாயாம்
"
எந்தப் பிள்ளை சாவதற்கு...?"

ஆண்டவனைக் கேட்கிறேன்


இந்தியாவும் ஈழமும்
இரண்டாகிப் போனதும்
அன்றைய கடற்கோளாலே...
உடல்களும் உறவுகளும்
துண்டாகிப் போனதும்
இன்றைய கடற்கோளாலே...
இரண்டாக்கித் துண்டாக்கி
அழிக்க எழும் கடற்கோளை
ஆண்டவா
உன்னால் அடக்க முடியாதா?
வான் வெளியில் இருந்து
வேடிக்கையா பார்க்கிறாய்?
இந்து மாகடலில்
கடற்கோள் உற்பத்தியா?
இந்தோனேசியாவில்
எம் உறவுகள் சாவு மழையிலா?
ஆண்டவா - நீ
உலகில் பிறந்த உயிர்கள்
அழிந்த பின்னாலே
எம்மைப் பெற்ற
தாய் மண்ணைக் கெடுக்கவா
இங்கு வர இருக்கின்றாய்...?

குறிப்பு:- 2010 இல் இந்தோனேசியாவில் இறுதியாக நிகழ்ந்த கடற்கோள் நினைவாக எழுதியது.

பள்ளிக்கூட நண்பர்கள்


என்னுடன் ஒன்றாய்ப் படித்த
பள்ளிக்கூட நண்பர்களே!
பள்ளிக்கூட வாழ்வை நினைத்தால்
உங்கள் முகம் தெரிகிறதே!
தொடர்பின்றிப் பிரிந்த நண்பர்களே!
என்னுடன்
தொடர்புகொள்ள மாட்டீரோ...?
உங்களோடு
ஓராயிரம் கதைகளுக்கு மேல்
ஒன்றுகூடிப் பேசலாமென
எண்ணியுள்ளேன்!
அந்தப் பள்ளிக்கூடக் காலத்து
சொந்தக் கூத்துகளை
எந்தக் காலத்திலும்
எப்படி மறப்போம்
பள்ளிக்கூட நண்பர்களே!

எல்லாம் இருக்கும் வரை...


கைகனக்கக் காசிருந்தால் கைகுலுக்கல் ஏராளம்
மனைமுட்டப் பொருளிருந்தால் உறவுகள் ஏராளம்
"
தேட்டத்தைத் தேடும் உறவுகள்..."

Friday, 12 April 2013

பாடல் பற்றி...


எதுகை, மோனை முட்டி மோதிய
பாடல்கள் இல்லையே
டம், டும், டாம் என மோதும்
பாடல்கள் இருக்கையில்
நான் எதைப் பாட?
பின்னிசை இருக்கச் சீர்காழி பாட
நான்
பா புனைய வேண்டும் என
நினைத்தாலும் கூட
பா வர மறுக்கிறதே!
முயன்றேன்...
வண்டிலால கல்லுப் பறிப்பது போல
இன்றைய இசை இருக்க
"முல்லா வீசிய கல்லா
நல்லா பேசிய பல்லா" என
எழுதினாலும் பாடலாக இல்லையே!
அன்பானவர்களே!
"இசைக்குப் பாடலா
பாடலுக்கு இசையா"
கொஞ்சம் சொல்லித் தாருங்களேன்!

நல்வழி


நடந்து வந்த வழிகள் யாவும்
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
சேறும் சறுக்கலும்
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் கடந்த பிறகு தான்
நல்வழி கிடைக்குமென்றால் - அது
சாவு தான்!
அட, முழு முட்டாளே!
கட்டையிலே போகேக்க
இப்படிச் சொல்லாமா?
நாளைய வழித் தோன்றல்களுக்கு
இன்றே நல்வழி காட்டாவிட்டால்
நாங்களும் செத்துப்போன வெற்றுடல்களே!

ஐயம்


முதலாம் நண்பர்கள்:-
பெண்: நான் உன்னை விரும்புகின்றேன்.
ஆண்: இப்படி எத்தனை ஆளிடம் கேட்டிருப்பாய்?

இரண்டாம் நண்பர்கள்:-
ஆண்: நான் உன்னை விரும்புகின்றேன்.
பெண்: இப்படி எத்தனை ஆளிடம் கேட்டிருப்பாய்?

ஒட்டுக் கேட்ட நண்பர்கள்:-
ஒருவர் : கேட்டால் வரும் காதல் நடிப்பு
மற்றவர் : சொல்லாமலே வரும் காதல் பிடிப்பு
மூன்றாமவர்: உதெல்லாம் வேண்டாமப்பா, கண்கள் பேசிய காதலால் பிச்சை எடுக்கிறேன் பாரப்பா!

கல்வி


தகப்பன் : படிப்பில பெரியாளாகு.

தாய் : படிச்சாத்தானே நாலு பணம் உழைக்கலாம்.

குரு : படிப்பில பிடிப்பில்லாட்டி நல்ல வருவாய் தரும் தொழிலையாவது பழகு.

பிள்ளை : நான் இன்றைக்குப் பெரிய பணக்காரன்...

கடவுள் : எப்படிப் பிள்ளாய்?

பிள்ளை : "களவெடு பிடிபடாதே" என்று படிச்சதாலே!

Thursday, 11 April 2013

இலக்கியக் களவு


முதலாமாள்: நாட்டு நடப்பு என்னவாம்?

இரண்டாமாள்: ஒருத்தி மாற்றாளின் பாக்களைப் பொறுக்கிச் செய்தித் தாளுக்குப் போட்டது பிடிபட்டுப் போச்சுது!

முதலாமாள்: பழைய இலக்கியப் பாக்களில் இருந்து பொறுக்கி எழுதுகிறேன். இன்னும் நான் பிடிபடேல்லையே!

இரண்டாமாள்: புதுப் பாக்கள் பக்கம் பார்வை இருக்கையில் உங்கட களவு பிறர் பார்வைக்கு எட்டவில்லைப் போலும்!

தமிழின் நிலை


எங்கட வீடுகளில நம்மாள் பேசுவது
உங்கட காதுகளில விழுந்தால் விளங்காது
"பேச்சில தமிழர் பேசுவது எம்மொழி!"

முழு நிலவு


சேலை உடுக்காத வானமென்ற கிழவியை
ஞாயிற்று ஒளிவாங்கிப் பார்க்கின்ற இளையவள்
"பாவலரின் நிலவு மகளே!"