Friday 29 May 2015

கண்கள் பேசும் மொழி கூட...



கண்களால் காண்க
கண்டதில் நல்லது எதுவென்றே
கண்களால் கண்ணுற்ற
கண்டதெல்லாம் வழி காட்டுமே
கண்களால் வழிந்தோடும்
கண்ணீரும் கூட மருந்தாகுமே
கண்களால் இணையர்கள் தேடுவதும்
கண்கள் தான் தாம் களிப்புறவே
கண்கள் வழியே தான்
கண்ணுற்ற காதலர்களும் - அவரவர்
உள்ளத்தில் நுழைகின்றனரே
உள்ளதைச் சொன்னால் - உண்மையில்
கண்களின் பெறுமதியை எவரறிவார்?
அறிவார் தம் நலன் மட்டுமே
அறியார் கண்ணற்றவர் நிலையையே
பாட்டெழுதும் பாவலரின்
பாட்டின் பாடுபொருளும் கண்ணாகுமே
ஒன்பது வாசல் எம்முடலில்
ஒன்றாம் வாசல் கண்ணாகுமே
கண்கள் பேசும் மொழி கூட
கண்கள் தான் அறியுமாமே
கண்கள் வழியே நுழைந்தவை தான்
எண்ணங்கள் தோன்றத் துணையாமே
எண்ணிப் பார்த்தீர்களா
கண்ணில்லாதவன் எண்ணத்தில்
எண்ணற்ற துயரப் புண்களையே?
கண்ணொன்றைக் கொடுங்கள்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை
கண்ணின்றித் தானடைந்த துயரை
எண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே!
நல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்
மெல்லச் சாவடைந்தால் - உங்கள்
கண்களை உரித்தே - பிறர்
கண்ணில் ஒட்டிக்கொள்ள உதவுங்களேன்
கண்ணின்றித் துயருற்றவர்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே!

குறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே! கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.

Monday 25 May 2015

காதலும் ஒரு மருந்து தான்

காதல் - அது
ஒரு உணர்வு தான்
தூய்மையான (புனிதமான) ஒன்று தான்
அதனை மதிப்பவர்களுக்கு...
காதல் - அது
பிற‌ உயிர்களையும்
விரும்ப(நேசிக்க‌)க் கற்றுத் தரும்
அதனைப் புரிந்தவர்களுக்கு...
காதல் - அது
வெட்டி வேலை தான்
அதனைப் பொழுது போக்காக
எண்ணுபவர்களுக்கு...
காதல் - அது
சாவை(மரணத்தை)த் தேடும் வழி தான்
அது தான் பாருங்கோ
விருப்புகளை அடையும் வரை
விரும்புபவர்களாக
நடிப்பவர்களை நம்பியோருக்கு...
காதல் - அது
அருமையான மருந்து தான்
அதாவது
ஒருவரை ஒருவர்
விரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பி
காதலிப்போருக்கு மட்டுமே!

Thursday 21 May 2015

தீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்


புத்தர் வரலாறு + படம் : http://ta.wikipedia.org/s/58x

உலகுக்கு சிக்கல் சீனப் பௌத்தர்கள்
தமிழருக்குச் சிக்கல் இலங்கைப் பௌத்தர்கள்
புத்தர் வழிகாட்டலைப் பார்க்கும் முன்
புத்தரின் வாழ்வைப் பாரும்...
நாடு வேண்டாமென்றார்
அரச வாழ்வு வேண்டாமென்றார்
இல்லாள் (மனைவி) வேண்டாமென்றார்
அழகான ஆண்மகனை வேண்டாமென்றார்
அப்படியே
எத்தனையோ வேண்டாமென்ற
சித்தார்த்தன் தான் - தானே
புத்தராகித் தானுரைத்த 
பௌத்த வழிகாட்டலிலே
"விருப்புகளைத் (ஆசைகளைத்) தூக்கியெறிந்தால்
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த
வாழ்க்கையை வாழலாம்!" என்று
வழிகாட்டியும் இருந்தார்! - அந்த
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றும்
சீன, இலங்கைப் பௌத்தர்களுக்கு
விருப்பங்கள் (ஆசைகள்) அதிகமாம்! - அதுவும்
பெண், பொன் விருப்பம் (ஆசை) இருப்பினும்
சீன - அயல் நாட்டு எல்லைச் சிக்கல்
சுட்டிக் காட்டுவதோ சீனப் பௌத்தர்களுக்கு
மண் விருப்பம் (ஆசை) இருப்பதையும்
இலங்கைப் போர்ச்சூழல் சுட்டிக் காட்டுவதோ
தமிழ்ப் பெண்கள் கற்புப் பறித்தல் 
(பெண் விருப்பம் (ஆசை))
தமிழர் பொன்கள் பொறுக்கி எடுத்தல்
(பொன் விருப்பம் (ஆசை))
தமிழர் மண்ணைத் தமதாக்க எத்தனித்தல்
(மண் விருப்பம் (ஆசை))
எல்லாம் இலங்கைப் பௌத்தர்களுக்கு இருப்பதையும்
உலகெங்கும் ஏற்றுக்கொண்ட உண்மையே!
விருப்புகளை (ஆசைகளை) விலக்கிவிட்டு வழிகாட்டிய
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சிங்களவரால்
இலங்கையில் தீர்வின்றி அமைதியின்மை தொடர
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சீனர்களால்
சீன - அயல்நாட்டு எல்லைச் சிக்கல் தொடர
உலகப் போர் ஏற்பட வாய்ப்புண்டோ?

அறிஞர் பகவான்ஜி எழுதிய பாவினிலே
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை என்கிறார்
நான் அதைப் படித்த வேகத்திலே 
நான் இப்படி எழுத முயன்றேன்!
என்னை இப்படி எழுதத் தூண்டிய
அறிஞர் பகவான்ஜி எழுதிய 'சிரி'கவிதை!
கீழ்வரும் இணைப்புகளில் இருந்தாலும் கூட
நானும் கீழே பதிகிறேன்; படியுங்கள்!

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை!

Wednesday 20 May 2015

அழும் முகங்களும் துயர் முகங்களுமாக



எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
தண்ணீர் தண்ணீராகக் கொட்டும்
கண்ணீர் கண்ணீராக வடிக்கும்
பெண்ணென்ன ஆணென்ன
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே
வாழும் போது காண்கிறேன் - நாளும்
எத்தனையோ துயரைப் பாரும் உறவுகளே!
யாரும் வாழ்வில் மகிழ்வடைந்தால்
வெளிப்பட்டு வராது - ஆனால்
வழி நெடுக நான் காணும்
எவர் முகத்திலும் துயரே தெரிகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நம்மாளுகள் உள்ளத்திலே
மகிழ்வு வந்து போகிறதே தவிர
துயரம் தான் குந்தி விடுகிறதே!
இன்றைய மகிழ்வைக் கூட
நாளைக்கு வைத்துச் சுவைக்க இடமின்றி
நேற்றைய, முந்திய துயரல்லவா
என்றும் வந்து தடுத்து விடுகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தால்
நம்மாளுகள் தங்கள் உள்ளத்திலே
துயரைச் சுமக்கத் தெரிந்தது போல
மகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே
அழும் முகங்களும் துயர் முகங்களுமாக
நம்முன்னே உலாவுகின்றனரே!



Monday 18 May 2015

ஆடைக்குறைப்பு அழகல்ல...


ஆள் வளர ஆடை குறைவதா?
ஆளும் வளர
அறிவு வளருமென்று பார்த்தால்
ஆடையைக் குறைக்கப் போய்
அறிவு மங்கியது தான் மிச்சமா?
இளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு
பெரிசுகள் உங்களை வெறுக்கிறாங்களே!

ஆண்களே! - உங்கள்
கீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா?
பெண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
வழுகிக் கீழிறங்கும்
கீழ் சட்டையைப் பார்த்து...
பெண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

பெண்களே! - உங்கள்
மேல்-கீழ் சட்டைகள் குட்டையாகலாமா?
ஆண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
குட்டையான சட்டைக்கு
மேலும் கீழும் தெரிவதைக் கண்டு
ஆண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

அழகு என்பது இதுவல்ல
அழகாக மூடி வைக்கப்பட்ட
ஒன்றின் மீது தான்
விருப்பம் மேலோங்குகிறது...
அது பற்றிச் சிந்திக்காமல்
இது தான் அழகென்று
இப்படிக் காட்டுவதால் என்ன பயன்?
இளசுகளே - எல்லோரும்
உங்களை வெறுக்கிறார்களே!

முடிவாக ஒன்று...
ஒரு வேளை கூட
ஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட
முழு ஆடை அணிந்து மின்ன
பணத்துக்கு மேல் படுக்கின்ற
சில முகங்களே
மேல் நாட்டு விருப்பில்
நம்ம பண்பாட்டை அழிக்கிறார்களே!

Saturday 16 May 2015

இப்படியும் எண்ணத் தோன்றுகிறதே!


கால ஓட்டத்தைக் கண்காணித்தால்
கடவுள் கூடப் பணமென்றால்
நம்ம வீட்டுப் பக்கம்
வருவார் போல எண்ணத் தோன்றுகிறதே!
அங்காடியில் பாரும்
"உறவுக்குப் பகை கடன்" என்று
எழுதித் தொங்க விட்டிருப்பதை...
என் அறிவுக்கு எட்டிய வரை
"பணம் உறவை முறிக்கும் மருந்து" என்று
நாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே!
படிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்
பணம் தான் குறுக்கே வருகிறது என்றால்
காதல், மணவாழ்வு என
எதற்கெடுத்தாலும்
பணம் இருந்தால் சுகமென
விடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே!
நட்பு, உறவு என எதுவானாலும்
பணம் உள்ள வரை தான்
பின் தொடர்வோரைப் புரிந்தால்
பணம் இல்லை என்றால்
எல்லாமே இல்லை என்றாகிவிடுமென
தனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே!
ஊருக்கூர் வீட்டுக்கு வீடு
நம்மாளுகள் வாழ்வதைப் பார்த்தே
நானும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
தலையைப் போட்டு உடைத்தே
உளவியல் அறிஞரானது தான்
எனக்குக் கிடைத்த பரிசு என
இரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், வருவாய் - நீ
தருவாய், தருவாய் என
எத்தனையோ எண்ணித் தானே
காத்திருந்து காத்திருந்து பழகினால்
கடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே
கண் முன்னே காதுக்கு எட்டியதும்
பணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், தருவாய் - நீ
உளதாய், தருவதாய் - நீ
அன்பைத் தருவதாய்க் கொடுப்பதாய்
பழகும் உறவல்லவா - நீயென
நாளும் பழகும் உறவுகளில்
நாலு பணம் குறுக்கே வராது
வாழ்வில் 'பிரிவு' என்றும் வராது
அன்பைக் கொடுத்து வாழ்வோரை
காணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!


தெருவெளிக் குழந்தைகள்

காதல் எனும் தேர்வெழுதப் போய்
அழகு(காமம்) எனும் பெறுபேறு கிடைக்க
அழகில்(காமத்தில்) விருப்பம் மேலோங்க
காதல் நெருக்கம் துணைநிற்க முடிந்தது
"தெருவெளியில் வீசப்படும் குழந்தைகள்!"

Saturday 9 May 2015

யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்

வழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் "தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து) 

"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.

உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.

பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர். 

அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?

இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.



Sunday 3 May 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02


"2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது." என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி சென்ற பதிவைப் படிக்கவும்.
http://eluththugal.blogspot.com/2015/02/2015-01.html

இலங்கையில் கொழும்பிலிருந்து மிகின்லங்கா வானூர்தியில் புறப்பட்டு மதுரைக்குக் கிட்ட நெருங்கியதும் வானூர்தி தள்ளாடியது. அடடே! மதுரை வந்தாச்சோ எனத் தரையைப் பார்த்த வேளை மலை ஒன்று தென்பட்டது. மதுரையிலும் எத்தனை மலை இருக்கோ... மதுரைவாழ் உறவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என எண்ணியவேளை வானூர்தி தரையைத் தட்டியது.


நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களுடன் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் இருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேரூந்தைப் பிடித்தோம். அங்கிருந்து தைப்பூசப் பெருநாள், வள்ளலார் சிறப்பு நாள் என வடலூருக்குச் சென்றுவிடலாம் என்றுதான்... பேரூந்தில் ஏறியதும் தள்ளாடிய வானூர்தியில் இருந்து பார்த்த மலை தான் நினைவுக்கு வந்தது.




பேரூந்து நகர நகர நினைத்த மலை நேரில் பார்க்கக் கூடிய சூழலும் தென்பட்டது. "அந்த மலையைத்தான் வானிலிருந்து பார்த்தேன்" என்றது நண்பர் சுஷ்ரூவா பல ஒளிப்படங்களை எடுத்தார். நகர நகர அந்த மலையைத்தான் சுற்றிப் பேரூந்து நகர்ந்தது போல இருந்தது. அத்தனை ஒளிப்படங்களையும் இயங்குநிலைப் (Animation) படமாக மாற்றினேன். அதனைக் கீழே பார்க்கலாம்.


இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்.

மாட்டுத்தாவணியில் இறங்கி வடலூருக்குச் செல்லவும் வேறு பேருந்திலே ஏறியாச்சு! ஒருவாறு ஆறு ஏழு மணி நேரத்தில் வடலூருக்குச் சென்றாச்சு. அடுத்த நாள் வள்ளலார் நினைவு இடத்தில் தைப்பூசப் பெருநாள். அவ்விடத்தருகே தான் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீடும். அவரது வீட்டில் தான் ஓர் ஏழல் (வாரம்) தங்கியிருந்தேன்.

பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

Friday 1 May 2015

இனிய சிங்கள எதிரியே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என்னை முடக்கிவிட்டதைக் கண்டு
என்கை கடிக்க வைத்ததைக் கண்டு
என்வயிறு கடிக்க வைத்ததைக் கண்டு
நடுவழியே ஒதுக்கி வைத்ததைக் கண்டு
சூடு வாங்கிக் கட்டிய உடலும்
கேடு எண்ணிப் புண்ணாகிய உள்ளமும்
பட்டதைக் கெட்டதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என் உண்மைகளை அழித்ததை
என் வருவாயை உடைத்ததை
என் நம்பிக்கைகளை முறித்ததை
என் விரும்பிகளைப் பிரித்ததை
என் வாழ்க்கையைக் கெடுத்ததை
எண்ணி எண்ணி நொந்ததை
உள்ளத்தில் வலிப்பதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
சுட்டுச் சென்ற சொல் கணைகள்
விட்டுச் சென்ற உடல் புண்கள்
பட்டுச் சென்ற உள்ளக் கீறல்கள்
தொட்டுச் செல்லும் காற்று உரச
முட்டி மோதும் எண்ணங்கள் - உன்னை
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
வெட்டி விட்டாச்செனப் பாடச் சொல்லுதே!