Saturday 20 June 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

Saturday 13 June 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03

சென்ற பதிவில் (http://eluththugal.blogspot.com/2015/05/2015-02.html)
"இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்." என்றெழுதியதற்கு ஒத்தக்கடைக்கு அப்பால் "ஒற்றைக் கல்லாலான ஆ(யா)னை மலைதான் அது" என்றும் ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் (http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html) என்றும் அறிஞர்கள் பகிர்ந்தனர்.

நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் செல்லப்பிள்ளைகளைப் பாருங்கள்...

விடிந்தால் தைப்பூசப் பெருநாள்! விடியுமுன்னரே (நடு இரவில்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீட்டிற்குச் சென்றாச்சு. அங்கே இறங்கியதும் சோதிப் பெருவிழா காலை ஆறரை மணிக்கு முதாலாவது சோதிப் பேரொளி பார்க்க வேண்டும் குளித்து முழுகி வேட்டியைக் கட்டி வள்ளலார் கோவிலில் காலை வைத்தாச்சு. அங்கே இலட்சக் கணக்கான வள்ளலார் விரும்பிகள் (பக்தர்கள்) வந்திருந்தனர். 

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபைக்கு நுழையும் வழியைப் பாருங்கள்.

தொடரும் சோதி வழிபாட்டில் சோதிப் பேரொளி தெரிகிறது என்று எல்லோரும் வள்ளலார் கூறிய அருள் மொழியான (மந்திரமான) "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" எனச்சொல்லி சோதிப் பேரொளியைப் பார்க்கத் தலையை உயர்த்தினர். என்னை (நானோ கட்டையன்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) தூக்கிச் சோதிப் பேரொளியைக் காட்டினார். நானும் அவ்வாறே அவரைத் தூக்கிக் காட்டினேன்.

அதிகாலைச் சோதிப் பேரொளி பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு என்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வீதியை வலம் வரச் சென்றோம். ஞானசபை ஊடாக அன்னதான அறிவிப்பு; வீதி வழியே  "சாப்பிடுங்கோ... சாப்பிடுங்கோ..." என்று பொங்கல், சாதம் எனக் கொடுத்தார்கள். ஆங்காங்கே ஆட்டுக்கால் சூப்பு என்று தந்தார்கள். அதாவது ஆட்டுக்கால் போன்ற வேர், மற்றும் சித்த மருத்துவ மூலிகை கலந்த குடிநீர் தான், அது! அதனைப் பருகினால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்கும் என்று அங்கு குழுமிய அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு 2015 மாசி தமிழகம் வந்து வடலூர் வள்ளலார் நினைவும் தைப்பூசப் பெருநாள் பற்றியும் எனது எண்ணங்களைப் பகிர்ந்தாலும் எனக்கு நிறைவு இல்லை. ஆகையால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலதீகத் தகவலைப் பெறலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற இடமான வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில், திரு அறை தரிசனம் இடம்பெறுகிறது. அங்கும் சென்றிருந்தேன். திரு அறை தரிசனம் கடந்து ஓர் நீரோடை இருந்தது. வள்ளலார் அவர்கள் தனது பெருவிரலால் கீறியதால் உருவானதாகச் சொல்லப்படுகிறது. அங்கெடுத்த படங்களே கீழே தரப்படுகிறது.


பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)




Tuesday 2 June 2015

இலங்கையில் பௌத்தம் பரவுகிறது



பௌத்தத்தின் குறியீடு
அரச மர நிழலல்ல...
வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு
பட்டறிவால் வெளிப்படுத்திய
சித்தார்த்தனின்(புத்தரின்) வழிகாட்டலே!
புத்தரின் வழிகாட்டலை நம்பியே
உலகத்தார் பௌத்தத்தை விரும்பினர்!
'உயிர்களிடத்தே அன்பு காட்டு'
'உயிர்களைக் கொல்லாதே'
'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'
என்றெல்லாம்
எத்தனையோ புத்தர் சொன்னாலும்
'தமிழரிடம் அன்பு காட்டாதே'
'தமிழரைக் கொல்லு'
'தமிழருக்கு மன்னிப்பு வழங்காதே'
என்றெல்லாம்
இலங்கைப் பௌத்த கோவில்களில்
பிக்குமார் சிங்களவருக்கு வழிகாட்ட
புத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க
சிங்களவர் தமிழரை அழிக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
பிந்திக் கிடைத்த தகவலின் படி
கத்தோலிக்கக் கோவில்களை...
இஸ்லாமியக் கோவில்களை...
இந்துக் கோவில்களை...
இடித்துடைத்து
புத்தர் சிலைகளை விதைக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி
அரச மர நிழற் பார்த்து இருக்கும்
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு
அரச மரம் இருக்கும் இடமெங்கும் 
புத்தரை நட்டு
பௌத்தத்தின் குறியீடு
அரச மரமெனச் சுட்டிக் காட்டி
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!