Thursday 29 May 2014

போக்கு வரவு ஒழுங்குகள்



கேகேநகரில் ராஜமன்னார் வீதியும் முனுசாமி வீதியும் சந்திக்கின்ற இடத்தில் குப்பை போடப்படும் மூலைப் பக்கமாக ஓட்டுநர் தேர்வு நடக்கின்ற இடமும் இருக்கிறது. அந்தச் சந்தியில ஓடுகிற ஊர்திகளின் வேகத்தைப் பார்த்தியளோ? அதைவிட நம்மாளுகளின் கவனமின்மையையும் காணமுடியுமே!

இன்னும் சொல்லப்போனால் இவற்றைக் கண்காணிக்க பொறுப்பு வாய்ந்த எவரும் அங்கு நிற்பதில்லை. இலகுவாகப் போக்கு வரவு ஒழுங்குகள் மீறப்பட இடமிருக்கிறது. இதற்கு மேலேயும் சொல்லப்போனால் அந்த இடத்தில நடைபோடும் நம்மாளுகள் அக்கம், பக்கம் பாராமல் குறுக்கும் நெடுக்குமாக வீதியைக் கடக்க முனைவது நல்லதல்ல.

இந்த நிலை விபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைத்தால், என்னாலே தாங்கமுடியேல்லையே... நம்மாளுகள் எப்ப தான் இதனைப் பற்றி, அது தான் விபத்துகளை பற்றி சிந்திப்பபார்கள். அரசு, எப்ப தான் பொது மக்கள் உயிரிழப்பையும் விபத்துகளைத் தடுப்பது பற்றியும் சிந்தித்து நல்ல முடிவு எடுக்குமோ தெரியேல்லையே...

பொதுமக்களாகிய நாம், நமது உயிர் பெறுமதியானது. அதனைப் பேணுவது நமது கடமை என்றுணர்ந்து போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும், பள்ளிக்கூடங்களில் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைக் கற்பிக்கப் பாடவேளை ஒதுக்க வேண்டும். மாணவர்கள், மாணவிகள் ஊடாக இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்வது இலகு.

பொதுப் பணி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாம் இணைந்து மக்களுக்குப் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுமாறு வழிகாட்டலாமே. போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாதோர் அல்லது மீறுவோர் மீது காவற்றுறை கடும் நடவடிக்கை எடுக்கலாமே.

எல்லாவற்றையும் விட போக்கு வரவுப் பிரிவினர் அல்லது அரசு ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறப்புத் தகுதி உடையோருக்கே அதனை வழங்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான என் உள்ளத்தில் தோன்றிய சில எண்ணங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.