Sunday 2 November 2014

உலகமே அறிந்து கொள்...

அலைவரிசை(சனல்)-4 வெளியிட்டது
பொய் என்று
இலங்கை அரசு சொன்னாலும்
வன்னிப் போருக்குள் சிக்கித் தப்பிய
நான் சொல்வதில் பொய் இல்லையென
உலகமே அறிந்து கொள்!
புலிகளையும் பிரபாகரனையும்
கடலுக்குள் மூழ்கடிப்பதாகக் கூறி
பாதுகாப்புப் பகுதியென
அறிவிக்கப்பட்ட இடமென ஓடோடி ஒதுங்கிய
முள்ளிவாய்க்காலில் சாவடைந்த
மூன்றரை இலட்சம் ஈழத் தமிழரை
நினைவூட்டச் சொல்கிறேன்...
உலகமே அறிந்து கொள்!
முதலாம், இரண்டாம்
உலகப் போரில் கூட
இப்படி நிகழ்ந்திருக்காது...
"பதுங்குழிக்குள் வாங்கப்பா" என
"செத்தால் இருவரும் சாவோமப்பா" என
என் துணைவி அழைக்க
"ஐயோ என்ர கடவுளே" என
சாவின் பிடியிலிருந்து தப்பிக்க
ஓடி ஒளியப் போய்
சாவடைந்த ஈழத் தமிழரை
உலகமே நினைத்துப் பார்த்தாயா?
வானிலிருந்து, கடலிருந்து, தரையிலிருந்து
குண்டு மழை பொழிந்த
இலங்கைப் படைகளை
ஐ.நா. சபை
போர்க் குற்றவாளிகளாக்க முடியாமைக்கு
அலைவரிசை(சனல்)-4 ஒளிஒலிப் படங்கள்
சான்றாகக் காட்ட வலுவற்றதா?
பொக்கணை தொடங்கி
இரட்டை வாய்க்கால், முள்ளி வாய்க்கால் உட்பட
வட்டுவாகல் வரை
இலங்கை அரசால்
தடை செய்யப்பட்டது ஏன்?
குண்டு மழைக்குள் தப்பிய
நான் கண்டேன்...
கொத்து(கிளஸ்ரர்)க் குண்டு வீழ்ந்ததும்
(கிளஸ்ரர் குண்டு-ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது)
வீழ்ந்த இடத்திலிருந்து
100 மீற்றர் சுற்றுவட்டத்து மக்களை
சாவடையச் செய்தும்
உடல்களைத் துண்டாடச் செய்தும்
தன் வேலையைக் காட்டியதே!
மக்களைச் சிதறி ஓடாமல் செய்ய
மூச்சுத் திணற வைக்கும்
புகைக்குண்டு வீ்ழ்ந்த பின்னே
எரி(பொஸ்பரஸ்) குண்டு வந்து வீழ
குண்டுகள் வீழ்ந்த இடத்து மக்கள்
சாவடையாமல்
தப்பிக்க இயலாமல் இருந்ததே!
இறந்தவர்களையா
நம்மாளுகள் விட்டுவிட்டு வந்தனர்...
தம்மைப் பெற்ற பெற்றோர்களை
தாம் பெத்த பிள்ளைகளை
(கைக்குழந்தைகள் உட்படத்தான்)
தம் துணைகளை, உறவுகளை
தமது சொத்துகளை எல்லாம்
இழந்து வட்டுவாகலில் ஏறியும்
(மெனிக் பாம்) அரச சிறைக் கூட்டில்
(கூரைத் தகடுகளால் அடைத்த அறை)
நினைத்து நினைத்து அழுதவர்கள்
இன்றும் அழுவதை
உலகமே சற்று எண்ணிப் பார்!
மே-18-2009 ஆம் நாள்
இத்தனையின் உச்சக்கட்டம்
அதனால், உலகத் தமிழினம்
இந்நாளில் - இவற்றை
ஒன்றிணைத்து மீட்டுப் பார்க்கையில்
உலகமே
உன் பதிலைச் சொல்வாயா...
இல்லையேல்
கண் மூடித் தூங்குவாயா...
எப்படியோ
நம்மாளுகள் நாள்தோறும்
இவற்றை நினைக்காமல் வாழ
முடியவில்லையே
உலகமே அறிந்து கொள்...!

10 comments:

  1. வணக்கம் ஐயா!

    உணர்வு கொதிக்குது உன்றன் கவிதை!
    கணமும் மனதிலுண்டு காண்!

    மனங்கனக்கும் கவிதை ஐயா!
    மாற்றுக் கருத்தில்லை...!

    உலகம் உணர வேண்டுவோம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அன்று நடந்ததை - இன்று நினைத்தாலும்
    மனம் கலங்குகின்றது. கனக்கின்றது..

    உலகம் பதில் சொல்லுமா?..
    சொல்லாமலேயே போய் விடுமா!?..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. கவிதையில் தங்களின் உணர்வு வெளிப்படுகிறது நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. உலகமே அறிந்து கொள்...! கொடுங்கோலர்களை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. உணர்வுக் கவிதை...
    படிக்கும் போதே வலிக்கிறது...
    உலகமே அறிந்து கொள் இராவண பூமியின் அந்த கொடுங்கோலனை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.