Saturday 21 September 2013

நல்லாப் படிச்சவர்!

ஓர் ஊரில
ஓராள்
"நான் எவ்வளவோ படிச்சனான்" என்று
அடிக்கடி சொல்வாராம்!
ஒரு நாள்
ஊரின் ஒதுக்குப் புறத்தே வாழ்ந்த
ஓராளுக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்பளிப்புக் கிடைச்சதாம்!
அங்குமிங்கும் எங்கும்
ஒரே கொந்தளிப்பு
பணம், படிப்பு என்று
மின்னியோர் இருக்க
மூலைக்குள்ளே முடங்கியவருக்கு
மதிப்பளிப்பா என்றாம்!
"எவ்வளவோ படிச்சனான்" என்றவருக்கு
மதிப்பளிக்காமல்
ஓர் ஓரமாய் இருந்தவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்று
மதிப்பளிப்பது பிழையென்று
ஊருக்குள்ளே ஓரு குழப்பமாம்!
எவ்வளவோ படிச்சதுக்கு
கட்டுக் கட்டாய்ச் சான்றிதழ்கள்
இருந்தும் கூட
நாலஞ்சைப் படிச்சவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற தகுதியாம்!
குழம்பிப் போன ஊருக்குள்ளே
எரியிற நெருப்பில
நெய் ஊற்றினால் போல
கல்வி என்பது
பணத்தாள்களின் எண்ணிக்கையில்
சான்றிதழ்களின் எண்ணிக்கையில்
இல்லையாம் என
ஆங்கொருவர் வாயைப் பிளந்தாரம்!
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்றால்
"பிழையின்றிக் கற்று,
பின்
கல்வி தந்த அறிவின் வழி
செல்லல் வேண்டும்." என்று
வள்ளுவரும் சொன்னாராம்!
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சொன்னாராம்!
அடி தடிக்கு ஏற்பாடாக முன்னே
மதிப்பளித்தோர் வந்தனராங்கே...
கல்வி என்பது கற்றவரிடமிருந்து
பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் என்ற
நோக்கில் என்றனராம்!
எல்லோரும்
தலையைச் சொறிந்து கொண்டு
ஊரோரமாய் அந்தப் பக்கம்
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்புப் பெற்றவர் செய்ததைக் கேட்க
பணக்காரர், படித்தவர் பலரை ஆக்கிய
வழிகாட்டியும் ஆசிரியரும் அவரே என
மதிப்பளித்தோர் பதிலளித்தனராம்!

2 comments:

  1. வணக்கம்

    அருமையாக சொன்னீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.