Friday 5 September 2014

பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்


அப்பு, ஆச்சி சொன்னாங்க...
பேரன், பேத்தியைப் போல
நல்ல பெயர் எடுக்க வேணுமென்றே!
விடிய, விடிய
விழுந்து, விழுந்து படித்து
பட்டங்கள் பல பெற்றாங்க...
பகையைக் கிட்ட நெருங்காமல்
எட்ட நின்று பழகி
ஒழுக்கம் பேணினாங்க...
எல்லாவற்றையும்
சொல்லி என்ன பயன்?
நீங்களா உணர்ந்தெல்லோ
வாழப் பழகணும் என்றுரைப்பது
அப்பனும் ஆத்தாளும் பாருங்கோ!
விடிய, விடிய இராமாயணம்
விடிஞ்சாப் பிறகு கேளும்
இராமன் சீதைக்கு என்ன முறையாம்
காற்றோடு நேற்று முடிந்த கதையாம்
இன்றைய இளசுகளின் பேச்சிது!
இப்படித் தான் பாரும்
முன்னோரின் பெறுமதி அறியாமலே
இந்நாளில் நம்மாளுகள்
பட்டம் பறக்குமாப் போல
தங்கட பெயரும் பறக்குதாம் என்கிறாங்க...
பெண்ணின் கழுத்தில் கைவைத்து
சங்கிலி அறுத்தவர் சங்கிலிமுருகனாம்...
ஆணின் தோளில் கைபோட்டவள்
ஆண்களை வீழ்த்தும் அலமேலுவாம்...
பகல் திருட்டுப் பண்ணும் இணையர்
பொன்நிலவனும் வெண்ணிலாவுமாம்...
அட, கெட்ட கேட்டுக்கு
இப்படி இன்னும் அடுக்கினால்
எனக்கும் நொட்டை சொல்லுவியளே!
நல்ல பெயரெடுக்க
நெடுநாள் எடுக்கும் பாருங்கோ...
ஆனால்,
மணித்துளிகளில் கெட்ட பெயர்
வேண்டிச் சுமக்கிறதால தான்
வானில் பறக்கிறாங்கள் போலும்!
என்ன காணும்
பொடி, பெட்டைகளே...
எப்பன் பிடரியைத் தேய்த்து
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்...
தமிழ் இலக்கணம் என்றால்
தொல்காப்பியரைக் கூப்பிடுறாங்க...
உலகிலுள்ள அத்தனை அறிவையும்
தேடிப்படிக்கத் தேடுகிறாங்க
திருக்குறள் எழுதிய வள்ளுவரை...
பட்டம் போல பறக்கும்
கெட்ட பெயருக்கு ஏது பெறுமதி?
உற்றாரும் ஊராரும் நாடும் உலகும்
உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
தொல்காப்பியரைப் போல
வள்ளுவரைப் போல
ஏதாவது செய்தாயா?
அது தான் முடியாவிட்டாலும்
அழகு தமிழில்
கம்பனைப் போல காவியம் படைத்தாயா?
சரி! அதை விடுவம்...
ஆகக்குறைந்தது
என்ன தான் நல்லது பண்ணினாய்
உனக்கென்று நற்பெயர் வந்து சேர?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரையும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!


இப்பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. இதனைக் கருத்திற் கொண்டு தங்களைத் தாக்கியதாக எவரும் எண்ண வேண்டாம்.

8 comments:

  1. வணக்கம்

    அழகாக சொல்லியுள்ளீர்கள் எவ்வளவு படித்தாலும் தேடுவது நற்பெயர்தான் ... பகிர்வுக்கு நன்றி த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நல்லதொரு எண்ணச்சிதறல் அருமை நண்பரே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. படித்த முட்டாள்களை விட படிக்காத மேதைகளே மேல் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. ஆம் நண்பரே நாம் எந்த நலல்தும் செய்யவில்லையே நற்பெயர் எடுக்க.....ஆனால் பகவான் ஜி சொல்லியிருப்பது போல் படித்தவர்களை விட படிக்காத மேதைகளே சிறந்தவர்கள் போல....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ''...எட்டுத் திக்காரையும்
    உன்னை நாட வைப்பது
    நீ தேடும் நற்பெயரே!...''
    உண்மையே!
    முடிந்தளவு நல்லபடிவாழ நான் முனைகிறேன்.
    மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.