கால ஓட்டத்தைக் கண்காணித்தால்
கடவுள் கூடப் பணமென்றால்
நம்ம வீட்டுப் பக்கம்
வருவார் போல எண்ணத் தோன்றுகிறதே!
அங்காடியில் பாரும்
"உறவுக்குப் பகை கடன்" என்று
எழுதித் தொங்க விட்டிருப்பதை...
என் அறிவுக்கு எட்டிய வரை
"பணம் உறவை முறிக்கும் மருந்து" என்று
நாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே!
படிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்
பணம் தான் குறுக்கே வருகிறது என்றால்
காதல், மணவாழ்வு என
எதற்கெடுத்தாலும்
பணம் இருந்தால் சுகமென
விடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே!
நட்பு, உறவு என எதுவானாலும்
பணம் உள்ள வரை தான்
பின் தொடர்வோரைப் புரிந்தால்
பணம் இல்லை என்றால்
எல்லாமே இல்லை என்றாகிவிடுமென
தனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே!
ஊருக்கூர் வீட்டுக்கு வீடு
நம்மாளுகள் வாழ்வதைப் பார்த்தே
நானும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
தலையைப் போட்டு உடைத்தே
உளவியல் அறிஞரானது தான்
எனக்குக் கிடைத்த பரிசு என
இரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், வருவாய் - நீ
தருவாய், தருவாய் என
எத்தனையோ எண்ணித் தானே
காத்திருந்து காத்திருந்து பழகினால்
கடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே
கண் முன்னே காதுக்கு எட்டியதும்
பணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், தருவாய் - நீ
உளதாய், தருவதாய் - நீ
அன்பைத் தருவதாய்க் கொடுப்பதாய்
பழகும் உறவல்லவா - நீயென
நாளும் பழகும் உறவுகளில்
நாலு பணம் குறுக்கே வராது
வாழ்வில் 'பிரிவு' என்றும் வராது
அன்பைக் கொடுத்து வாழ்வோரை
காணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!