Tuesday 30 September 2014

அழைப்பு விடுக்கின்றேன்!


எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

Monday 29 September 2014

பொழுது போக்கிற்காக...


ஒரே ஒரு கேள்வி தான். ஆறாள் கூறும் பதில்கள் வேறுவேறு தான். இவங்கட பேச்சே நல்ல நாடகமாச்சு...

முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

முதலாம் ஆள் : உங்கட நிலைப்பாடு என்னவாச்சு?

ஐந்தாம் ஆள் : நானும் ஒருத்தியைக் கேட்டேன். "Love" பண்ண (சந்திக்க) வரும் ஒவ்வொரு முறைக்கும் ஆயிரம் உரூபா கேட்கிறாளே!

ஆறாம் ஆள் : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெட்டையளைச் சுத்துற பொடியளாலே தான்,  பெட்டையளும் எடுப்புக் (லெவல்) காட்டுகினம்.

முதலாம் ஆள் : அட பொடியங்களே! பொழுது போக்கிற்காகப் பெட்டையளைச் சுத்துற வேலையை நிற்பாட்டிப் போட்டு; ஒழுங்காய் படிச்சா, நல்ல வருவாய் எடுத்தா எந்தப் பெட்டையும் உங்கட காலில விழுவாள்களே!

Sunday 28 September 2014

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!


இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காளான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

Friday 26 September 2014

ஆண்களே பதில் சொல்லுங்களேன்!


அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

Sunday 21 September 2014

நாலுகாசு வைப்பிலிட்டு


கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே! அப்படியுமா...
இன்னும் இன்னும்
எத்தனையோ சொல்லி எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!

Saturday 20 September 2014

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

Tuesday 16 September 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


Sunday 14 September 2014

கிழிஞ்சு போச்சு

திரைப் படங்களிலே
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலேயே
திரைப்படக் கொட்டகைக்கு வெளியே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

பொழுதுபோக்கிற்காக...


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!

Friday 12 September 2014

வெளிநாட்டில் உள்ளவருக்கு...

அவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை
கண்டுபிடித்தவர்களை விட
உலகில் எந்தெந்த நாடுகள்
ஏதிலி(அகதி)யாக இருக்க
இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
யாரென்றால்
இனமோதல்களால் புலம் பெயர்ந்த
இலங்கைத் தமிழர்களே!
புலம் பெயர்ந்த படைப்பாளிகள்
இருக்கும் வரை தான்
உலகின் முலை முடுக்கெங்கிலும் இருந்தும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
வெளிவர வாய்ப்புண்டாம்!
போன உறவுகளும் போன நாட்டில்
போன நாட்டு வாழ்வோராக
மாறிப் போன பின்னர்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை
வெளிக்கொணர்வார்களென
எப்படி நம்பலாம்?
தமிழைப் பேண வேண்டுமாயின்
தமிழ் இலக்கிய வளர்ச்சியை
பேண வேண்டுமென்மதை உணர்ந்த
புலம் பெயர் படைப்பாளிகளே
உலகெங்கும்
தமிழ் இலக்கியம் பேணும்
படைப்பாளிகள் அணியை
இனிவரும் தலைமுறைக்குள்ளே
உருவாக்கிவிட முடியாதா?
ஈழவர் அடையாளம்
ஈழத் தமிழ் இலக்கியத்தில் தான்
வெளிப்பட வேண்டுமாயின்
நாளைய
புலம் பெயர் தலைமுறைகளே
இலக்கியம் படைப்போம்
இனித் தமிழ் அழிவதைக் காப்போம்
இப்படிக்கு
தமிழைக் காதலிக்கும் ஈழவர்!

இப்பதிவு ஈழத்தில் இருந்து ஏதிலி(அகதி)யாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடம் ஈழத் தமிழர் பட்ட துயரங்களை எழுதுமாறு விண்ணப்பித்தது போல உள்ளத்திலே நினைத்து எழுதினேன்.

முதலாம் பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_12.html

உள்நாட்டில் உள்ளவருக்கு...

இலங்கையை ஆண்ட பிரித்தானியா
பிரித்தாண்டு பழக்கியதால் தான்
இன மோதல்கள் மட்டுமல்ல
தமிழருக்குள்ளே ஒற்றுமையின்மையும்
தோன்றியிருக்கலாமென
நம்பத் தோன்றுகிறதே!
என்னவாக இருப்பினும்
உள்நாட்டில் உள்ளவருக்குத் தான்
எத்தனை எத்தனை துன்ப துயரங்கள்
எல்லாமே
நாளைய இருப்பைத் தேட
தூண்டியது மட்டுமல்ல
புதிய படைப்பாளிகளை
உருவாக்கவும் தவறவுமில்லை!
இடப்பெயர்வுகள்
படைப்பாளிகளுக்கு உணவு(தீனி) போட்டும்
படைப்புகள் வெளிவராமைக்கு
பொருண்மிய இழப்புகளா...
வெளியீட்டாளர்கள் இன்மையா...
வாசகரும் வாங்குவதில்லையா...
படைப்பாளிகள் முன்வராமையா...
படைப்புகள் ஆக்குவதை
படைப்பாளிகள் நிறுத்தினரா...
இப்படி எத்தனை சாட்டுகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
நலிவுறச் செய்கிறது என்பதை
எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!
இளைய நெஞ்சங்களே...
போரும் அமைதியும்
மாறி மாறித் தொடர்ந்தாலும்
இலக்கியம் அழிந்தால்
இலக்கணம் இருக்காது எனின்
தாய் மொழியாம் தமிழும் சாகாதோ...
அப்படியாயின்
தமிழ் அழிவதைப் பார்த்துக்கொண்டிருப்பது
படைப்பாளிகளின் வேலையா?
கையெழுத்துப் படிகளாகவோ
இலவச இணையத்தள வசதியோடு
இணையத் தளப் பதிவுகளாகவோ
வேறு
இயன்ற வழியில் முயன்று பார்த்தோ
தமிழ் மொழி அழியாது பேண
ஈழத்து உண்மைகளை உலகமறிய
தமிழரின் அடையாளத்த வெளிப்படுத்த
போர் நெருக்கடிகளிலும்
இலக்கியம் படைக்க அழைப்பது
தமிழைக் காதலிக்கும் உங்களில் ஒருவர்!

2004 கடற்கோளின் பின்னரான ஈழப் போர்ச் சூழலில் எழுதியது.

அடுத்த பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_71.html

Tuesday 9 September 2014

பொங்கின புக்கை

தைப்பொங்கலை ஒட்டிப் பல பொங்கல்கள் வருமே! அந்த வேளை இப்படி இருவர் நாடகமாடினர்.

முதலாமவர் : ஒருவரையும் நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : எப்படி அப்பா இப்படிப் போட்டுடைப்பா...

இரண்டாமவர் : பகலவனை நம்பித் தானே!

முதலாமவர் : அதெப்படியப்பா...?

இரண்டாமவர் : தைப்பொங்கலை வைச்சுத்தானப்பா...
...
முதலாமவர் : எடுத்துக்காட்டுக்கு ஏதாச்சும் சொல்லப்பா...

இரண்டாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... கொஞ்சம் மூளைக்கு வேலை கொடேன்...

Friday 5 September 2014

பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்


அப்பு, ஆச்சி சொன்னாங்க...
பேரன், பேத்தியைப் போல
நல்ல பெயர் எடுக்க வேணுமென்றே!
விடிய, விடிய
விழுந்து, விழுந்து படித்து
பட்டங்கள் பல பெற்றாங்க...
பகையைக் கிட்ட நெருங்காமல்
எட்ட நின்று பழகி
ஒழுக்கம் பேணினாங்க...
எல்லாவற்றையும்
சொல்லி என்ன பயன்?
நீங்களா உணர்ந்தெல்லோ
வாழப் பழகணும் என்றுரைப்பது
அப்பனும் ஆத்தாளும் பாருங்கோ!
விடிய, விடிய இராமாயணம்
விடிஞ்சாப் பிறகு கேளும்
இராமன் சீதைக்கு என்ன முறையாம்
காற்றோடு நேற்று முடிந்த கதையாம்
இன்றைய இளசுகளின் பேச்சிது!
இப்படித் தான் பாரும்
முன்னோரின் பெறுமதி அறியாமலே
இந்நாளில் நம்மாளுகள்
பட்டம் பறக்குமாப் போல
தங்கட பெயரும் பறக்குதாம் என்கிறாங்க...
பெண்ணின் கழுத்தில் கைவைத்து
சங்கிலி அறுத்தவர் சங்கிலிமுருகனாம்...
ஆணின் தோளில் கைபோட்டவள்
ஆண்களை வீழ்த்தும் அலமேலுவாம்...
பகல் திருட்டுப் பண்ணும் இணையர்
பொன்நிலவனும் வெண்ணிலாவுமாம்...
அட, கெட்ட கேட்டுக்கு
இப்படி இன்னும் அடுக்கினால்
எனக்கும் நொட்டை சொல்லுவியளே!
நல்ல பெயரெடுக்க
நெடுநாள் எடுக்கும் பாருங்கோ...
ஆனால்,
மணித்துளிகளில் கெட்ட பெயர்
வேண்டிச் சுமக்கிறதால தான்
வானில் பறக்கிறாங்கள் போலும்!
என்ன காணும்
பொடி, பெட்டைகளே...
எப்பன் பிடரியைத் தேய்த்து
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்...
தமிழ் இலக்கணம் என்றால்
தொல்காப்பியரைக் கூப்பிடுறாங்க...
உலகிலுள்ள அத்தனை அறிவையும்
தேடிப்படிக்கத் தேடுகிறாங்க
திருக்குறள் எழுதிய வள்ளுவரை...
பட்டம் போல பறக்கும்
கெட்ட பெயருக்கு ஏது பெறுமதி?
உற்றாரும் ஊராரும் நாடும் உலகும்
உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
தொல்காப்பியரைப் போல
வள்ளுவரைப் போல
ஏதாவது செய்தாயா?
அது தான் முடியாவிட்டாலும்
அழகு தமிழில்
கம்பனைப் போல காவியம் படைத்தாயா?
சரி! அதை விடுவம்...
ஆகக்குறைந்தது
என்ன தான் நல்லது பண்ணினாய்
உனக்கென்று நற்பெயர் வந்து சேர?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரையும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!


இப்பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. இதனைக் கருத்திற் கொண்டு தங்களைத் தாக்கியதாக எவரும் எண்ண வேண்டாம்.

Wednesday 3 September 2014

தமிழரில்லாத இலங்கை

தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இயக்கம்
ஆளுக்கொரு கொடி
எத்தனையோ பிறந்து இருந்தன...
'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்லோருமே கூறி நின்றன...
பின்னர்
'தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போட்டு
அழிந்து போயின என்றோ
அழிவதற்குத் தயார் என்றோ
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
1983 ஆடிக் கலகம்
சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
எந்தெந்த நாடுகளுக்கு
ஏதிலியாகப் போகலாம் என்பதை
அறிமுகம் செய்ததா?
தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறுவதைக் கண்டு உணரலாமே!
புலிகளை அழித்ததும்
வன்முறைப் போருக்கு
முற்றுப்புள்ளி வைத்தாச்சே...
சுடுகலன் ஏந்துவோர்
எவராயினும் இருப்பின் அழிக்கப்படுவார்களே...
இன்றைய ஈழத் தமிழர்
இப்படித்தான்
முணுமுணுப்பதைக் காணலாமே!
ஈழத் தமிழரின்
முணுமுணுப்புக்குள்ளே
மறைந்திருப்பது என்ன?
தனிப் பெரும்
சிங்களத் தலைமையை ஏற்பது
நன்று என்று தானே இருக்கும்!
எப்படியாயினும்
தமிழர் நலம் பேணுவதாயின்
கட்சிகளோ இயக்கங்களோ
ஒன்றிணைய மறுத்தால் நடப்பதென்ன?
கட்சிகளாயின்
தடைபோட்டுச் செயலிழக்கச் செய்யலாமே...
இயக்கங்களாயின்
புலிகளை இல்லாது ஒழித்தது போல
அழிந்து போகச் செய்யலாமே...
அப்படியாயின்
யார் நலனை யார் பார்ப்பது?
உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழினமே
உண்மையைக் கூறுவீர்களா?
ஈழத் தமிழர் நலன் பேணாத
எந்தச் சக்தியும் இருந்தும்
பயனில்லைக் கண்டியளோ!

Tuesday 2 September 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!