எழுத்துத்துறைக்கு வரும் வேளை பெரும்பாலும் எல்லோரும் புனைபெயர் வைப்பது வழக்கம். அவ்வேளை எல்லோரும் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, பிறரது பெயராக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், உங்கள் புனைபெயருக்குத் தனிமதிப்புப் பேணமுடியும்.
எடுத்துக்காட்டாக இயற்பெயர் முத்தையா என்ற படைப்பாளியே கண்ணதாசன் ஆவார். அதாவது, கண்ணனுக்குத் (கிருஸ்ணருக்குத்) தாசன் (பற்றாளர்) என்பதால் 'கண்ணதாசன்' எனக் கவிஞர் கண்ணதாசன் தனது புனைபெயரை வைத்திருக்கலாம். இவ்வாறே பாரதிதாசன், கம்பதாசன், மேத்தாதாசன் எனப் பலரது புனைபெயர் அமைந்திருந்தது.
எனது முதற்கவிதை இ.காசி.ஜீவலிங்கம் என்ற பெயரில் தான் வெளியாகியது. நான் பலரும் அறிந்த படைப்பாளியாக மின்ன வேண்டுமென எண்ணி எனது புனைபெயரைக் காசிஜீவன் என வைத்தேன். அதாவது, என் அப்பா பெயர் காசிராசலிங்கம்; என் பெயர் ஜீவலிங்கம்; இரண்டிலிருந்தும் முன்னொட்டைப் பொறுக்கி 'காசிஜீவன்' எனப் புனைபெயர் அமைத்தேன்.
ஆயினும், மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஐயா அதனை மாற்றுமாறு என்னைப் பணித்தார். உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் என்ற பெயரைப் போல அமைந்து விட்டால் அழகல்ல என்றே அவ்வாறு எனக்கு மதியுரை கூறினார். பின்னர், 'நவீனநாரதர்' என்ற புனைபெயரைப் பாவித்தேன்.
வேறு புனைபெயர்களில் எழுதினாலும் ஈற்றில் 'யாழ்பாவாணன்' என்ற பெயரே நிலைத்துவிட்டது. நெடுநாள் முன்னதாக 'யாழ்ப்பாணன்' என்றொரு மூத்த எழுத்தாளர் இருந்துள்ளார். எனது காலத்திற்குக் கிட்டவாக என்பெயரைப் போன்று பிறருக்கு இருக்கவில்லை. அதனால், எனது பெயர் பிறருடையதைப் போல அமையவில்லை என நம்புகிறேன்.
என்னூர் மாதகல் என்றாலும் மாதகலூரான் எனப் பெயர் அமைக்காது விட்டேன். அது பொதுப் பெயராகிவிடும் என்பதால்... மாதகலூரான் என்ற பெயரோடு எனது இயற்பெயரையும் இணைத்துப் பாவிக்கவில்லை. மாறாகத் தமிழ்ப் பெயராக அமையவே 'யாழ்பாவாணன்' என்ற வேறுபட்ட பெயரை விரும்பினேன்.
அதாவது, 'யாழ்பாவாணன்' என்ற பெயரை 'யாழ்' + 'பாவாணன்' எனின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞன் எனப் பொருள் கொள்ளலாம். மேலும், 'யாழ்பாவாணன்' என்ற பெயரை 'யாழ்பா' + 'வாணன்' எனின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்பவர்/வசிப்பவர் எனப் பொருள் கொள்ளலாம்.
அப்படியாயின், புனைபெயர் வைக்கும் போது நீங்களும் வேறுபட்டதாக (வித்தியாசமாக) வையுங்கள். அதற்காக யாழ்பாவாணதாசன் என வைத்துவிடாதீர்கள். உங்களை, உங்களூரை, உங்கள் மாவட்டத்தை என உங்களை அடையாளப்படுத்தக் கூடியதாகவும் மற்ற அறிஞர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தக் கூடியதாகவும் மற்ற அறிஞர்களின் பெயரை ஒத்ததாகவோ போலவோ அமையாதவாறும் உங்கள் புனைபெயரை வைக்கலாமே!
அருமையான யோசனைகள் ஐயா...
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Deleteயாழ் இசைக் கருவியில் பாடல் இசைப்பவன் என்றும் பொருள் கொள்ளலாமே !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Delete