Friday, 31 October 2014

என் பார்வையில் பிழையுண்டோ?


கதிரவன் கதிர்வீச்சில்
கண்ணைப் பறிக்கும் பனித்துளிகளில்
வானவில்லையே பார்க்கிறேன்!

வரண்டு போன நிலத்தில்
வானம் கொட்டிய மழைத்துளிகளில்
பயிர்களின் நிமிர்வைப் பார்க்கிறேன்!

முந்தைய நாள் மழையில்
வேலிப் பக்கமாய் வெண்குடைகளாய்
காளான் பூத்திருப்பதைப் பார்க்கிறேன்!

கடற்கரைப் பகுதியில்
பல நிறக் குடைகள் தலையாட்டுமங்கே
இருவர் ஒருவராகி உருள்வதைப் பார்க்கிறேன்!

நிமிர்ந்து நடைபோடும் ஆண்களில்
ஆடைகளில் அழகில்லைப் பாரும்
ஆனாலும், நழுவும் ஆடைகளைப் பார்க்கிறேன்!

இடைநெழிய நடைபோடும் பெண்களில்
காணும் ஆடைக் குறைப்பில்
கெட்டதுகள் வால்பிடிக்கப் பார்க்கிறேன்!

தெருவோர மதுக்கடைப் பக்கத்திலே
கூத்தாடும் ஆண்களுக்கு எதிர்ப்பக்கத்திலே
தள்ளாடும் பெண்களையும் பார்க்கிறேன்!

கட்டையனின் தேனீர்க்கடை முன்னே
தொங்கும் அட்டையிலே புகைத்தலுக்குத் தடையாம்
கடையின்பின் பெண்களும் புகைப்பதைப் பார்க்கிறேன்!

வழிநடுவே விபத்து நடந்த இடத்திலே
விழிபிதுங்க ஓருயிர் துடித்துக் கொண்டிருக்க
ஒருவரும் உதவாமல் பயணிப்பதைப் பார்க்கிறேன்!

நாளும் நாற்சந்தியில் கூடும்
நாலா பக்கத்தினரில் கருத்தாடல் இருந்தாலும்
ஒற்றுமையின்மை உடனிருக்கப் பார்க்கிறேன்!

எத்தனை எத்தனை இடங்களிலே
எத்தனை எத்தனை உண்மைகளை
பார்த்தாலுமென் பார்வையில் பிழையுண்டோ?

Thursday, 30 October 2014

முடிவு

அன்பாகப் பழகுவது
என்னோட இயல்பு
அதற்காக
என்னைப் பற்றி
அடி, நுனி அறியாமல்
முடிவு எடுக்கலாமோ?
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?

Wednesday, 29 October 2014

குளவிக் கூடும் மக்கள் குழுவும்

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தால்
உள்ள குளவிகள் எல்லாம்
மெல்லச் சூழல் எங்கும்
பறந்து பறந்து கொட்டுமே!

மக்கள் குழுவிற்குள் சொல்லெறிந்தால்
கூடிய மக்கள் எல்லோரும்
தேடித் தேடியே எங்கும்
செய்தீயாப் பரப்புவதைக் காண்பீரே!

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிய முன்னும்
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிய முன்னும்
நம்மவர் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்
எப்பவும் பின்விளைவைக் கொஞ்சம் படிக்கலாமே!

Tuesday, 28 October 2014

கல்வி கற்போம் கற்றதைப் பகிர்வோம்!


“The Root of the Education is Sour
The fruit of the Education is Sweet”
இப்படி என்றால்
எப்படி என்று தெரியுமா?
கல்வியின் தொடக்கம்
கொஞ்சம் புளிக்கும் தான்
கொஞ்சிக் கொஞ்சிக் கற்றால் தான்
கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள
கல்வியும் இனிக்கும் என்பதேயாம்!
இதெல்லாம்
நவராத்திரி நாள்களிலே தான்
கல்வியா? செல்வமா? வீரமா?
எது பெரிதென்று
நாம் போட்டி போடும் போதே
நாம் அறிவோமே!
அப்ப தானே
அள்ள அள்ள வற்றாத செல்வம்
கல்விச் செல்வம் என்றறிவோமே!
இதை வைச்சுத் தானே
எங்கட முன்னோர்கள்
"கற்றது கைப்பிடி மண்ணளவு
கல்லாதது உலகளவு" என்று
எடுத்துக்காட்டுக்குச் சொல்வார்களே!
எப்படி எப்படி என்கிறீர்களா?
நாம் எப்படித் தான்
எவ்வளவோ கற்று முடித்தாலும்
அவை
கைப்பிடிக்குள் அள்ளிய
மண்ணளவு என்று ஒப்பிட்டாலும்
இன்னும்
கற்க வேண்டியிருப்பது
எவ்வளவு என்று சொன்னால்
உருளும் உலகம் அளவு என்கிறாங்க!
என்னங்க
உலகளவு கற்க முடியாதுங்க
என்றால் சரியாகுமா?
முடியும் என்கிறேன் - முதலில்
கைப்பிடியளவு படிப்போம்…..
கற்றதைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி
"யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெறட்டும்" என
கற்றதைப் பிறரோடு பகிர்வோம்,,,
அப்ப தான்
எஞ்சியதைப் படிக்க வாய்ப்பு வருமே!
எடுத்ததிற்கு எல்லாம்
எடுத்துக்காட்டாக
எடுத்துக்காட்டுவதும் திருக்குறளே - அந்த
திருக்குறளையே எழுதிய திருவள்ளுவர் தான்
130 அதிகாரங்களில்
1330 திருக்குறள் எழுதி - அவற்றில்
உலகளவு கல்வியைத் தந்தாரே!
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என
ஔவையார் சொன்னபடி - அதாவது
இளமையில் கற்றவை
என்றும் மறக்க இயலாதது போல
உலகளவு கல்வியைக் கூறும்
திருக்குறளையும் கற்போம்!
"கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக" என்று
வள்ளுவரும் சொன்னாருங்க…
கற்பவை நிறைவாகக் கற்று
அதன் வழி செயற்படுவோம் என்பதே
வள்ளுவரின் வேண்டுதலும் ஆகுமே!
வாருங்கள் உறவுகளே…
ஒன்றாய்ச் சேருங்களேன்
நன்றாய்க் கல்வி கற்போமே
கற்றவை யாவும் பிறரறியப் பகிர்வோமே!

Sunday, 26 October 2014

எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?

நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.


  1.  எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
  2.  மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
  3.  மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
  4.  நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

  1.  அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
  2.  குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
  3.  பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
  4.  முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
  5.  தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

Friday, 24 October 2014

தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!



வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து  
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே 
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற 
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!

எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த 
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!

ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!

கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள் 
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!

கடவுள் அழுகின்றான்...!


அழகான உலகில்
நானும் நீங்களும்
கடவளின் வடிவமைப்பே!
நமக்கிடையே நிகழ்வதெல்லாம்
நாமே
வடிவமைத்தது என்பேன்!
உலகம் அழிவதற்கும்
நாம்
நம்மை அழிப்பதற்கும்
கடவுளின் திருவிளையாடல் அல்ல...
நமது செயற்பாடுகளே!
அழிகின்ற உலகையும்
அடிபட்டுச் சாகும் உயிர்களையும்
வானிலிருந்து பார்த்தவாறே
உலகையும் உயிர்களையும் படைத்த
கடவுள் அழுகின்றான்...!
படைப்பது
என் தொழில் என்றால்
அழிப்பதும் அழிவதும்
நம்மவர் தொழில் என்றா
கடவுள் அழுகின்றான்...!
நான் பிறந்தேன்
நான் வாழ்ந்தேன்
என்றில்லாமல்
நம்மைப் படைத்த
கடவுளைக் கூட
எப்பன் எண்ணிப் பார்த்தாலென்ன!

Thursday, 23 October 2014

தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?


தொலைக்காட்சி
ஒரு தொல்லைக்காட்சி அல்ல...
தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்போரும்
பிழை விட்டதில்லை...
பனை ஏறுபவன்
பனையில ஏறாவிட்டால்
தெருவில குடிகாரரைப் பார்க்க முடியாதே...
அது போலத் தான்
வணிக நோக்கிலான தயாரிப்பாளர்கள்
பார்ப்போர் விருப்பறியாத அறிவிப்பாளர்கள்
விளம்பரங்களால்
நிகழ்ச்சிகளுக்குப் பின்னூட்டம் கொடுப்போர்கள்
தொலைக்காட்சியில் இருக்கின்ற வரை
தொல்லைக்காட்சி தோன்ற இடமிருக்கிறதே!
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?
ஆமாம்!
கெட்டதைக் கலக்கும் தயாரிப்பாளர்கள்
பிறமொழி கலக்கும் அறிவிப்பாளர்கள்
நிகழ்ச்சியைக் குழப்பும் விளம்பரதாரர்கள்
இவற்றையும் கடந்து தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சியைப் பார்த்தால்
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா? என்று
எண்ணத்தோன்றுகிறதே!

Wednesday, 22 October 2014

எந்தப் பெயர் சொந்தப் பெயர்?

நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"

நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"

பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"

கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"