Saturday, 21 September 2013

சும்மா... சும்மா... சும்மா...

விடிகாலை எழுந்து எல்லா வீட்டுப் பணிகளையும் முடித்துக் கொண்டு வெள்ளை தன் செயலகத்துக்குச் சென்றான். செல்லும் வழியில் அவனுடன் பணியாற்றும் அழகியும் இணைய இருவருமாகச் சென்றனர். வழி நடுவே சந்தித்த சிவப்பியும் கறுவலும் மோதிக்கொள்ள அவர்களைச் சுற்றி மக்கள் குழுமினர்.

சிவப்பி : எத்தனை நாளாக உன் பதிலைக் கேட்கக் காத்திருப்பது. இன்றாவது சொல்லேன்... என்னை நீ விரும்புகிறாயா?

கறுவல் : எவர் மீதும் நான் வெறுப்புக் கொண்டதில்லையே!

சிவப்பி : வெளிப்படையாகத் தான் கேட்கிறேன்... என்னை நீ மணமுடிக்க மாட்டாயா?

கறுவல் : மணமுடித்து மனைவியை இழந்தவனிடம் கேட்கின்ற கேள்வியா? அதுவும் என் கரிமூஞ்சியைப் பார்த்துக் கேட்பதா? சும்மா எத்தனையோ அழகான சிவலைகள் இருக்கிறாங்கள்... அவங்களில நல்ல ஆளைப் பார்த்து மணமுடிக்கலாமே!

சிவப்பி : சும்மா கோடிக் கணக்கில ஆட்கள் இருக்கலாம்... சும்மா எவனையும் மணமுடிக்கலாமே! சும்மா நீங்களும் தனியாளாக எத்தனை நாளாக இருக்கப் போறியள்?

கறுவல் : சும்மா இருக்கிற ஆள் நானில்லைப் பாரும்!

சிவப்பி : அப்ப என்ன தான் பண்ணிக் கிழிக்கிறியள்?

கறுவல் : எண்பதில அம்மா, நூறில அப்பா இருவரையும் பார்த்துப் பேணுகிறேன். போதாக்குறைக்கு ஆறு மாதக் கைக்குழந்தை, அதையும் நான் தான் பார்த்துப் பேணுகிறேன்.

சிவப்பி : உதுக்கெல்லாம் உங்களிடம் இருக்கிற பொறுப்புணர்வைப் பார்த்துக் கேட்டுத் தெரிந்த பிறகு தான் கெஞ்சுகிறேன். உங்கட பணிகளை நானும் சேர்ந்து செய்வேன். அப்ப நாமிருவரும் மகிழ்வாய் இருக்கலாம். என்னை மணமுடிக்க விரும்புங்களேன்.

சிவப்பி அழுதழுது கெஞ்சியதைப் பார்த்த மணமாகாத மங்கை ஒருத்தி, கண் கலங்கியபடி ஆண்களைப் பெண்கள் இவ்வாறு கெஞ்சக் கூடாதென சிவப்பியின் முகத்தைத் தனது கைக்குட்டையால் துடைத்தவாறு அவளது உள்ளத்தைத் தேற்றினாள்.

"இஞ்ச வா தம்பி, உன்ர அடி, நுனி தெரிந்த பிள்ளையால தான் உங்கட குடும்பத்தை நல்லாய்ப் பேணமுடியும். நீ தேடினால் உவளைப் போல ஒருத்தி கூடக் கிட்ட வராள். கெஞ்சிற பெண்ணை விஞ்சி, கட்டையிலே போகும் வரை தனிக்கட்டையாய் தானிருப்பாய்." என்று எதிரே நின்ற கடுக்கன் போட்ட பழுத்த கிழவன் செய்த மூளைச் சலவையால கறுவலின் உள்ளம் சற்று இளகியது. தானும் தன் கைக்குட்டையால் சிவப்பியின் முகத்தைத் துடைத்த பின் கைப்பிடியாய் கூட்டிச் சென்றான்.

வாழ்க்கையிலே இப்படியான இணையர்கள் சேருவது அருமையென அவரவர் கலைந்து சென்றனர். செயலகத்திற்கு நடைபோடத் தொடங்கிய வெள்ளை, அழகியைத் தேடினான். மார்புச் சட்டை நனைய அழகி ஒரு கோடியில் அழுதவண்ணம் ஒதுங்கி நின்றாள். "வழி வழியே சும்மா சும்மா ஆளுக்காள் மோதுவாங்கள். உதுக்கெல்லாம் கண்ணீர் வடித்தால் நாங்கள் எப்படி முன்னேறுகிறது." என்று அருகிலிருந்த பத்மினி புடவை மாளிகையில் மேற்சட்டை ஒன்றை வெள்ளை வாங்கிக் கொடுத்தான். அதனை வேண்டிய அழகியும் எதிர் வீட்டில் சென்று மாற்றி உடுத்தி வந்தாள்.

வெள்ளையும் அழகியும் கதைத்துக் கொண்டு பணி செய்யுமிடத்தை நெருங்கிவிட்டனர். கதையோடு கதையாக " தன் கணவர் முதலிரவை முடித்துக் கொண்டு பணிக்குச் சென்ற முதல் நாளே கனவூர்திச் சில்லுக்குள் சிக்கிச் சாவடைந்ததையும் தான் நான்கு மாதம் நீண்ட வயிற்றைச் சுமப்பதையும்" கண் கலங்கியபடி அழகியும் சொல்லி முடித்தாள்.

"சும்மா சும்மா புழுகாதையும்" என வெள்ளை வயிற்றிலே கையை வைத்துப் பார்த்தான். முகத்தோடு முகம் பார்த்துக் கதைத்து வந்த வெள்ளைக்கு, அந்நேரம் தான் அழகியின் வயிற்று வீக்கம் தெரிந்தது. "சும்மா சும்மா அழுது புழுங்கி உள்ளத்தைப் புண்ணாக்காதையும் நீங்கள் விரும்பினால் வயிற்றிலே வளரும் குழந்தைக்கு நானே அப்பாவாகிறேன்" என்று வெள்ளை அழகியை அணைத்துக் கொண்டான்.

"என்னை ஆற்றுப்படுத்தச் சும்மா வெடிக்காதையும்" என்றாள் அழகி. "சும்மா இல்லை, உண்மையாகத் தான்" என்று வெள்ளை அவளைக் கொஞ்சினான். அப்ப தான் அழகியின் நெஞ்சு குளிர்ந்தது. "செயலகம் வந்து விட்டது" என அழகி அவனது கைகளை விலக்கினாள். செயலகப் படலையைத் திறந்து இருவரும் மகிழ்வோடு அன்றைய நாள் பணியைத் தொடங்கினர்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)

2 comments:

  1. வணக்கம்

    இது ஒரு புது விதம்மான கற்பனை அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்தும் புது முயற்சிகளைத் தருவேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.