Sunday, 19 October 2014

நம்மாளுகளும் நம்மையாளும் கடவுளும்


வாழ்வை வழங்கிய கடவுள் பார்க்கிறான்
நம்மாளுகள் மகிழ்வாக வாழ்கிறாரா என்றுதான்...
கிடைத்த வாழ்வில் துயரைக் கண்டதும்
நம்மாளுகள் வாழ்வதைவிட சாகலாம் என்கிறார்களே!

வாழ்வை வழங்கிய கடவுளுக்குத் தெரியும்
துயரெனும் விலையைக் கொடுத்தே வாழணுமென்று...
துயருக்குப் பின்னும் மகிழ்வு உண்டென்று
நம்மாளுகளுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே!

வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ!

Saturday, 18 October 2014

கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகள்

நம்ம பூனை நல்ல பூனை
சும்மா சொல்லக் கூடாது
உறியில கிடந்த பாலை
கண்ணை மூடிக் கொண்டு
களவாய்க் குடிக்குமே!
உறியால விழுந்த மூடி
ஒலி எழுப்பக் கேட்டு
எட்டிப் பார்த்த போது தான்
கண்டு பிடித்தேன் இந்த உண்மையை!
நல்ல நல்ல பிள்ளைகளைப் பார்
கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகளாய்
பெத்தவங்களுக்குப் புழுகி விடுறாங்க
ஆசிரியர்களுக்குக் கயிறு விடுறாங்க
இயமனுக்கே ஊறுகாய் போடுவாங்க
கடவுளுக்கே இருட்டடி போடுவாங்க
செய்வதெல்லாம் செய்துபோட்டு
மக்களாயம்(சமூகம்) காணவில்லையென
சுத்தமான ஆளுகளைப் போல
நடுவழியே நடை போடுறாங்களே!
பள்ளிக்கு ஒளிச்சவங்களை
தேர்வுப் பெறுபேற்றில் பார்க்கலாம்
உழைப்புக்கு ஒளிச்சவங்களை
தின்னக் குடிக்க வழியில்லாட்டிப் பார்க்கலாம்
கணவனுக்கோ மனைவிக்கோ ஒளிச்சவங்களை
மூன்றாமாள் முரண்டுபிடிக்கையில் பார்க்கலாம்
கடன்கொடுத்தோருக்கு ஒளிச்சவங்களை
சூழலுக்குள்ளே சுழலுகையில் பார்க்கலாம்
மாற்றான் கண்ணுக்குத் தெரியாதென
இத்தனை பூனைகளும்
இப்படித்தான் பால் குடிக்கின்றனவே!
காதல் என்னும் போர்வையில் கூடினாலும்
கலவி என்பதைச் சோதனை செய்தாலும்
மருத்துவருக்கு முன்னே மாட்டுப்படுவினமே...
புகைத்தலைச் செய்தாலும்
மக்கள் முன்றலில்
மணப்பதால் மாட்டுப்படுவினமே...
ஒளிச்சுத்தான் கள்ளுக் குடிச்சாலும்
ஊருக்கப்பால் கறுப்புவெள்ளை குடிச்சாலும்
ஆடையணிகள் அவிழ்ந்த நிலையில்
தெருவழியே விழுந்து கிடக்கையிலே
மக்கள் முன்னே மாட்டுப்படுவினமே...
எட்டி எட்டி எட்டடி பாய்ந்தாலும்
இப்படித்தான்
இத்தனை பூனைகளும் பால் குடிப்பதை
எப்படியோ
மக்களாய(சமூக)மும் கண்டுபிடிக்கிறதே!
நல்ல நல்ல பிள்ளைகளே
உங்க வீடும் நாடும்
உங்களைத் தான் நம்பியிருக்கே...
நீங்க மட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் தெரியாமல்
நடிப்பதை விட்டுப் போட்டு
படிச்சுப் படிச்சு ஒழுக்கம் பேணுங்களேன்!

Friday, 17 October 2014

படிப்பது பிள்ளைகளா பெற்றோரா?


மருத்துவராகவோ
சட்டவாளராகவோ
பொறியியலாளராகவோ வரும் வண்ணம்
பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுப்பது
பெற்றோரின் கோழைச் செயலே!
எவரது கல்வியிலும்
எவரும் தலையிடுவது அழகல்ல...
எந்தக் கல்வி இலகுவானதோ
அந்தக் கல்வியை
எவரும் தொடரலாமே!
ஆனாலும் பாருங்கோ
கல்வியை விரும்பியவருக்கே
கல்வியானது
இலகுவாயிருக்கும் கண்டியளோ!
பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
நாளைய வழித்தோன்றல்கள்
நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!

காட்டுகிறாள் என்றால் பாருங்களேன!



இவள் என்னடா
ஆங்கிலத்தில தொடங்கி
தமிழைக் கொன்று
ஆட்டம் போட்டுக் காட்டி
அடங்கி ஒதுங்கிப் போறாளே...
இல்லை இல்லை
இல்லாத இடுப்பைக் காட்டி
இளசுகளை இழுக்கப் பார்க்கிறாளோ...
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
தமிழைக் கொல்ல இடமளியேன்...
என் அருமைத் தமிழ் விரும்பிகளே
இவளது நடிப்புப் பரவாயில்லை
ஆனால்
படிப்புச் சரியில்லை...
யாழ்பாணக் கொத்துரொட்டி மட்டும்
இவள் காட்டவில்லை - தான்
யாழ்பாணப் பண்பாட்டையும்
கழட்டிப் போட்டாள் என்றும்
காட்டுகிறாள் என்றால் பாருங்களேன்!

Thursday, 16 October 2014

தெரு ஓரத்துச் செய்தி

வெட்டி வெட்டிப் போடுறாங்க பார்
அட்டி அட்டியாக ஏறுது பார்
நம்மவர் வீட்டு இலைகுழை!

பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!

சட்டி சட்டியாக ஊத்துறாங்க பார்
கட்டி கட்டியாக ஊருது பார்
நம்மவர் வீட்டுக் கழிவு!

(கழிவு: மீன், இறைச்சி கழுவிய நீர்)




மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_16.html

Tuesday, 14 October 2014

பணம் பற்றிய பேச்சு!


எவர் வாயாலும்
பணம் பற்றிய பேச்சுத் தான்
கேட்கத் தான் முடிகிறதே!
காதலிப்பாயா என
தோழியிடம் கேட்டாலென்ன
இனிய இரவாகட்டுமென
மனைவியோடு படுக்கையை விரித்தாலென்ன
முதலில பணத்தை வையப்பா என
எட்ட விலகிறாங்களே!
பணம் பத்தும் செய்யுமாம்
குணம் செத்தாலும் நிலைக்குமாம்
ஆனால்,
நம்ம ஊரில நடப்பது என்ன?
பணத்தைப் பொத்திப் பொத்தி
வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் இல்லையே...
பணத்தைக் கிள்ளிக் கிள்ளி
ஊருக்கெல்லாம்
கொடுத்து வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் நிறைந்து இருக்குமே...
எப்படி இருப்பினும்
எவரும்
தனக்குப் பின்னே ஈகம் (தானம்) என்பதை
மறக்கவில்லைத் தானே!
கறுப்புப் பணம்
சிறை செல்லத் துணைக்கு வரும்
நீலப் பணம்
உயிர்கொல்லி (எயிட்ஸ்) தரத் துணைக்கு வரும்
பொய்ப் (போலிப்) பணம்
உறவுகளற்ற நிலைக்குத் துணைக்கு வரும்
உண்மைப் (மெய்ப்) பணம்
உறவுகள் நிறைந்த நிலைக்குத் துணைக்கு வரும்
என்றெல்லோ நம்ம ஊரில
பணம் பற்றிப் பேசுறாங்களே!


Friday, 10 October 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


Monday, 6 October 2014

எதை எழுதலாமென்று தான்...


எனது மடிக்கணினிக்கு
அடிக்கடி மூச்சுப் போகிறதே...
அதுதான் பாருங்கோ - அது
மின்னைக் (Current) குடிக்காமையால்
இயங்க மாட்டேன் என்கிறதே!
கணினி மருத்துவரிடம் (PC Technician) காட்டினால்
இப்ப நெருக்கடி என்றார்
அப்ப தான்
எதை எழுதலாமென்று தான்
எண்ணிப் பார்த்தேன்!
அடிக்கடி பழுதாகும்
மடிக்கணினிக்குப் பதிலாக
மாற்றுக் கணினி தேவை என்று
விளம்பரம் எழுதலாமோ
மடிக்கணினிக்கு மூச்சுப் போனதால்
வலைப்பூக்களில் பதிவிட
முடியவில்லையென எழுதலாமோ
இப்படியே
எத்தனை சாட்டுச் சொல்லலாமென
எண்ணிய போது தான்
"சாட்டு இல்லாமல் சாவில்லை" என்ற
முதுமொழியை
எழுதலாமென எண்ணினேன் - அப்படி
எழுதினாலும் பாருங்கோ - அதற்கான
விளக்கமென்ன என்று கேட்டால்
என்ன பதிலைச் சொல்லலாம் என்று
பதிலையே தேடிக் கொண்டிருந்தேன்!
ஆங்கொரு முதன்மைச் சாலையில்
தம்பி ஒருவனோ  தங்கை ஒருவளோ
உந்துருளி (Motor Bike) ஒன்றை வேண்டினார்
ஓடத் தயாரானார்... ஓடினார்...
மூறுக்கோ முறுக்கென
வலக் கைப்பிடியை முறுக்கினார்,,,
இடக் கைப்பக்கமாக வந்த
கன (பார) ஊர்தி மோதியதால்
மோதிய இடத்திலேயே
தம்பியோ  தங்கையோ மூச்சைவிட்டாரென
செய்தி ஒன்றைப் படித்தேன்!
உந்துருளி (Motor Bike) ஓடியவரை
கன (பார) ஊர்தி மோதி
உயிரைக் குடித்தது என்றோ
உந்துருளி (Motor Bike) ஓடுவதாக
மூச்சாகப் பறந்தவர்
மூச்சைவிட்டார் என்றோ
எழுத எண்ணிய வேளை தான்
சாவிற்குச் சாட்டு இவையென
பதில் கூறலாமென எழுதினேன்!


Friday, 3 October 2014

காதலர் நாள் நினைவில்...


சாவு ஒறுப்புக் குற்றாவாளியாம்
வலன்ரைனை
சிறைக்குச் சென்று வந்து
சாப்பாடு கொடுத்தவளே
காதலித்தாலும்
வலன்ரைன் சாவடைந்த நாளே
காதலர் நாள் மாசி 14ஆம்!
மாசி 14ஆம் நாள்
உயரிய காதலையே நினைவூட்டும்
கீழ்த்தரக் காதலர்களை நினைவூட்டுமா?
'காதல்' என்பது
மூளையில் தூண்டப்பட்ட தூண்டி(ஓமோன்)யால்
உருவானதல்ல
உள்ளத்தில் விருப்புற்றதன் விளைவே!
அழகிற்காக, பாலியல் உணர்விற்காக, பணத்திற்காக போன்ற
எதற்காகவேனும் காதலித்தவர்
காலப்போக்கில் பிரிந்தாலும்
நல் எதிர்காலத்தை, நல வாழ்வை சிந்தித்தவர்
சாகும் வரை காதலிப்பதைப் பாரும்!
சாகும் வரை காதலித்து
வாழுவோம் என்ற முடிவோடு
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்!
சாகும் வரை
காதலிக்கும் இணையர்களைக் காண
முடியாத போதும்
காதலர் எண்ணிக்கை அதிகம் தான்
ஆனால்,
எல்லாமே
பள்ளிக் காதல் படலை வரையுமா என
எண்ணத் தோன்றுகிறதே!

Thursday, 2 October 2014

பட்டுத் தெளிந்த பின்...

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!
தம்பி, தங்கைகளே
எல்லோருக்கும்
என் அப்பா சொன்ன அறிவுரை
எப்பன் உங்கட தலைக்கு ஏறிடுச்சா?
தலையில பதிச்சு வைக்காட்டி
பட்டுத் தெளிந்த பின்
கணக்கிலெடுக்க மறக்கமாட்டியளே!