Saturday, 21 September 2013

வள்ளுவரின் அறிவு

ஒன்றே முக்கால் அடி வெண்பாவில்
இன்றே படிக்க வேண்டிய எல்லாம்
சொல்லி வைச்ச வள்ளுவரின் அறிவை
சொல்லிச் சொல்லிப் படித்தால் பாரும்
"பேரறிஞராவது நம்மாளே!"

 நம்மாளுகளே நாளுக்கு நாள் நாடுவது
நம்மட வாழ்வுக்கு வேண்டிய அறிவையா
அம்மா, அப்பாவை மதிக்காம விளையாடிட்டு
சும்மா வேலை இல்லாமல் இருக்கையிலே
"படிப்பது வள்ளுவரின் குறளே!"

 குறளே அமைந்தது ஈரடிகளால் தான்
நாற்சீரும் முச்சீருமாய் நறுக்கெனத் தான்
நாம படிக்கப்பழக வாழவெனத் தான்
நமக்கெனப் பாடிய 1330 குறளில் தான்
"பல்துறை அறிவு மின்னுமே!"

 மின்னல் வேகத்தில் புரியாது போனாலும்
கற்றதும் முச்சுவையைக் கண்டு கொள்வாய்
 எழுதுவோர் எல்லோரும் எடுத்துக் காட்டுக்காய்
எடுத்துக் காட்டுவது வள்ளுவரின் குறளையே
"திருக்குறள் என்றும் வழிகாட்டுமே!"

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...

ஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு, கைகள் நிரம்ப அடுக்கி இருப்பினம்.

 அவ்வீட்டு அழகு மயில் தெருவழியே ஆடிவர, ஆங்கொருவன் "என்னைக் காதலிப்பாயா?" என விருப்பம் கேட்டான். அதையறிந்த எதிர் வீட்டான்,'விருப்பம் கேட்டவன்' கெட்டவன் என்றும் தன்னை விரும்பென்றும் அவள் வீட்டை நாடிக் கேட்டான். ஊரெங்கும் இந்தக் கதை பரவ, "எங்கட பிள்ளைக்கு உங்கட மகளைச் செய்து வையுங்கோ" எனச் சில பழசுகள் அவ்வீட்டாரைக் கேட்டனர்.

 அடுத்தடுத்து இரண்டு மூன்று நாள் தொடரந்து நள்ளிரவில் கள்ளர் அவ்வீட்டுப் பக்கம் படையெடுத்தனர். ஒரு நாள் கள்ளர் வீடுடைத்துத் திருடியும் அவ்வீட்டார் சோர்வின்றி இருந்தனர். ஒரு நாள் அவ்வீட்டு அழகு மயிலைக் கடத்தவும் சிலர் முயன்றனர். ஊர் ஒன்று கூடியதால் அம்முயற்சியும் தோல்வியுற்றது.

 உண்மையான வீட்டு உரிமையாளர் ஊருக்கு வந்து சேர்ந்ததும், புதிதாய் வந்திருந்த குடும்பத்தை வெளியேற்றினார். புதுக் குடும்பமோ ஊரின் ஒரு கோடியில் ஓலைக் குடில் ஒன்றில் ஒதுங்கினர்.

 இவர்களுக்கும் இந்நிலை வந்து சேருமோ என ஊரார் ஆய்வு செய்த வேளை அவர்களது உண்மை கசிந்தது. வேற்றூருகளுக்குச் சென்று பிச்சை எடுத்துக்கொண்டு வந்து குடும்பம் நடத்தியவர்கள் என்றும் போட்டிருந்தது எல்லாம் போலித் தங்கம் என்றும் ஊரறிந்தது.

 காதல், திருமண விருப்பம் கேட்டோருக்கும் பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருந்தோருக்கும் உண்மை தெரிய வரத் 'தலைக்குனிவு' தான் கைக்கெட்டியது.

சும்மா... சும்மா... சும்மா...

விடிகாலை எழுந்து எல்லா வீட்டுப் பணிகளையும் முடித்துக் கொண்டு வெள்ளை தன் செயலகத்துக்குச் சென்றான். செல்லும் வழியில் அவனுடன் பணியாற்றும் அழகியும் இணைய இருவருமாகச் சென்றனர். வழி நடுவே சந்தித்த சிவப்பியும் கறுவலும் மோதிக்கொள்ள அவர்களைச் சுற்றி மக்கள் குழுமினர்.

சிவப்பி : எத்தனை நாளாக உன் பதிலைக் கேட்கக் காத்திருப்பது. இன்றாவது சொல்லேன்... என்னை நீ விரும்புகிறாயா?

கறுவல் : எவர் மீதும் நான் வெறுப்புக் கொண்டதில்லையே!

சிவப்பி : வெளிப்படையாகத் தான் கேட்கிறேன்... என்னை நீ மணமுடிக்க மாட்டாயா?

கறுவல் : மணமுடித்து மனைவியை இழந்தவனிடம் கேட்கின்ற கேள்வியா? அதுவும் என் கரிமூஞ்சியைப் பார்த்துக் கேட்பதா? சும்மா எத்தனையோ அழகான சிவலைகள் இருக்கிறாங்கள்... அவங்களில நல்ல ஆளைப் பார்த்து மணமுடிக்கலாமே!

சிவப்பி : சும்மா கோடிக் கணக்கில ஆட்கள் இருக்கலாம்... சும்மா எவனையும் மணமுடிக்கலாமே! சும்மா நீங்களும் தனியாளாக எத்தனை நாளாக இருக்கப் போறியள்?

கறுவல் : சும்மா இருக்கிற ஆள் நானில்லைப் பாரும்!

சிவப்பி : அப்ப என்ன தான் பண்ணிக் கிழிக்கிறியள்?

கறுவல் : எண்பதில அம்மா, நூறில அப்பா இருவரையும் பார்த்துப் பேணுகிறேன். போதாக்குறைக்கு ஆறு மாதக் கைக்குழந்தை, அதையும் நான் தான் பார்த்துப் பேணுகிறேன்.

சிவப்பி : உதுக்கெல்லாம் உங்களிடம் இருக்கிற பொறுப்புணர்வைப் பார்த்துக் கேட்டுத் தெரிந்த பிறகு தான் கெஞ்சுகிறேன். உங்கட பணிகளை நானும் சேர்ந்து செய்வேன். அப்ப நாமிருவரும் மகிழ்வாய் இருக்கலாம். என்னை மணமுடிக்க விரும்புங்களேன்.

சிவப்பி அழுதழுது கெஞ்சியதைப் பார்த்த மணமாகாத மங்கை ஒருத்தி, கண் கலங்கியபடி ஆண்களைப் பெண்கள் இவ்வாறு கெஞ்சக் கூடாதென சிவப்பியின் முகத்தைத் தனது கைக்குட்டையால் துடைத்தவாறு அவளது உள்ளத்தைத் தேற்றினாள்.

"இஞ்ச வா தம்பி, உன்ர அடி, நுனி தெரிந்த பிள்ளையால தான் உங்கட குடும்பத்தை நல்லாய்ப் பேணமுடியும். நீ தேடினால் உவளைப் போல ஒருத்தி கூடக் கிட்ட வராள். கெஞ்சிற பெண்ணை விஞ்சி, கட்டையிலே போகும் வரை தனிக்கட்டையாய் தானிருப்பாய்." என்று எதிரே நின்ற கடுக்கன் போட்ட பழுத்த கிழவன் செய்த மூளைச் சலவையால கறுவலின் உள்ளம் சற்று இளகியது. தானும் தன் கைக்குட்டையால் சிவப்பியின் முகத்தைத் துடைத்த பின் கைப்பிடியாய் கூட்டிச் சென்றான்.

வாழ்க்கையிலே இப்படியான இணையர்கள் சேருவது அருமையென அவரவர் கலைந்து சென்றனர். செயலகத்திற்கு நடைபோடத் தொடங்கிய வெள்ளை, அழகியைத் தேடினான். மார்புச் சட்டை நனைய அழகி ஒரு கோடியில் அழுதவண்ணம் ஒதுங்கி நின்றாள். "வழி வழியே சும்மா சும்மா ஆளுக்காள் மோதுவாங்கள். உதுக்கெல்லாம் கண்ணீர் வடித்தால் நாங்கள் எப்படி முன்னேறுகிறது." என்று அருகிலிருந்த பத்மினி புடவை மாளிகையில் மேற்சட்டை ஒன்றை வெள்ளை வாங்கிக் கொடுத்தான். அதனை வேண்டிய அழகியும் எதிர் வீட்டில் சென்று மாற்றி உடுத்தி வந்தாள்.

வெள்ளையும் அழகியும் கதைத்துக் கொண்டு பணி செய்யுமிடத்தை நெருங்கிவிட்டனர். கதையோடு கதையாக " தன் கணவர் முதலிரவை முடித்துக் கொண்டு பணிக்குச் சென்ற முதல் நாளே கனவூர்திச் சில்லுக்குள் சிக்கிச் சாவடைந்ததையும் தான் நான்கு மாதம் நீண்ட வயிற்றைச் சுமப்பதையும்" கண் கலங்கியபடி அழகியும் சொல்லி முடித்தாள்.

"சும்மா சும்மா புழுகாதையும்" என வெள்ளை வயிற்றிலே கையை வைத்துப் பார்த்தான். முகத்தோடு முகம் பார்த்துக் கதைத்து வந்த வெள்ளைக்கு, அந்நேரம் தான் அழகியின் வயிற்று வீக்கம் தெரிந்தது. "சும்மா சும்மா அழுது புழுங்கி உள்ளத்தைப் புண்ணாக்காதையும் நீங்கள் விரும்பினால் வயிற்றிலே வளரும் குழந்தைக்கு நானே அப்பாவாகிறேன்" என்று வெள்ளை அழகியை அணைத்துக் கொண்டான்.

"என்னை ஆற்றுப்படுத்தச் சும்மா வெடிக்காதையும்" என்றாள் அழகி. "சும்மா இல்லை, உண்மையாகத் தான்" என்று வெள்ளை அவளைக் கொஞ்சினான். அப்ப தான் அழகியின் நெஞ்சு குளிர்ந்தது. "செயலகம் வந்து விட்டது" என அழகி அவனது கைகளை விலக்கினாள். செயலகப் படலையைத் திறந்து இருவரும் மகிழ்வோடு அன்றைய நாள் பணியைத் தொடங்கினர்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)

நல்லாப் படிச்சவர்!

ஓர் ஊரில
ஓராள்
"நான் எவ்வளவோ படிச்சனான்" என்று
அடிக்கடி சொல்வாராம்!
ஒரு நாள்
ஊரின் ஒதுக்குப் புறத்தே வாழ்ந்த
ஓராளுக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்பளிப்புக் கிடைச்சதாம்!
அங்குமிங்கும் எங்கும்
ஒரே கொந்தளிப்பு
பணம், படிப்பு என்று
மின்னியோர் இருக்க
மூலைக்குள்ளே முடங்கியவருக்கு
மதிப்பளிப்பா என்றாம்!
"எவ்வளவோ படிச்சனான்" என்றவருக்கு
மதிப்பளிக்காமல்
ஓர் ஓரமாய் இருந்தவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்று
மதிப்பளிப்பது பிழையென்று
ஊருக்குள்ளே ஓரு குழப்பமாம்!
எவ்வளவோ படிச்சதுக்கு
கட்டுக் கட்டாய்ச் சான்றிதழ்கள்
இருந்தும் கூட
நாலஞ்சைப் படிச்சவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற தகுதியாம்!
குழம்பிப் போன ஊருக்குள்ளே
எரியிற நெருப்பில
நெய் ஊற்றினால் போல
கல்வி என்பது
பணத்தாள்களின் எண்ணிக்கையில்
சான்றிதழ்களின் எண்ணிக்கையில்
இல்லையாம் என
ஆங்கொருவர் வாயைப் பிளந்தாரம்!
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்றால்
"பிழையின்றிக் கற்று,
பின்
கல்வி தந்த அறிவின் வழி
செல்லல் வேண்டும்." என்று
வள்ளுவரும் சொன்னாராம்!
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சொன்னாராம்!
அடி தடிக்கு ஏற்பாடாக முன்னே
மதிப்பளித்தோர் வந்தனராங்கே...
கல்வி என்பது கற்றவரிடமிருந்து
பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் என்ற
நோக்கில் என்றனராம்!
எல்லோரும்
தலையைச் சொறிந்து கொண்டு
ஊரோரமாய் அந்தப் பக்கம்
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்புப் பெற்றவர் செய்ததைக் கேட்க
பணக்காரர், படித்தவர் பலரை ஆக்கிய
வழிகாட்டியும் ஆசிரியரும் அவரே என
மதிப்பளித்தோர் பதிலளித்தனராம்!

Saturday, 7 September 2013

பாதணி (செருப்பு)


(மேலுள்ள படத்தைப் பார்த்ததும் எழுதியது)

”பாதணி” என்று
தலைப்பிட்ட போது தான்
சடையப்ப வள்ளல் வளர்த்த
வான்மீகியின் இராமாயணத்தை
கற்பனை அலை வீசும் கடலாக
இராமனின் பாதணியை வைத்து
பரதன் அண்ணன்
அயோத்தியை ஆண்ட கதையை
சுந்தரத் தமிழில்
காவியமாய்ப் பாடி முடித்த
கம்பரை மீட்டுப் பார்த்தே
கா(பனை)வோலைக் கால்களை
வெட்டிப் பாதணி போட்டவர்களும்
குளிர்பானக் குடுவையை (போத்தலை)
தட்டையாக்கிப் பாதணி போட்டவர்களும்
நினைவில் வர - அவை
நம்ம ஈழ மண்ணில் நிகழ்ந்த
போரினால் ஏற்பட்ட வடுவாக
மறக்க முடியவில்லைக் காணும்
எனது அருமை உறவுகளே!
புதுப் பாதணி கடிக்கும் என்பது
நாம் படித்த பழமொழி
கடிக்கும் பாதணி உடனே
கல்லும் முள்ளும் குத்தும்
கால்களுடன் நடைபோட்ட
ஈழத்து உறவுகளை
எம்மொழியில் படித்தேனும்
உலகம் கண்டும் உதவவில்லையே!

Saturday, 31 August 2013

சான்றுகள்

நம்மாளுகள்
வாழ்கையின் கண்ணாடி!
நம் கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
எமது காலம்
வரலாற்றுக் கண்ணாடி!
எந்த ஆண்டவனே வந்தாலும்
இந்த உண்மையை மாற்ற இயலாது!
பொய்கள்
காற்றிலே பறந்தாலும்
காற்றைக் கிழித்துக் கொண்டு
நாங்களே
உண்மைகளை நாடுகிறோம்!
ஆமாம், உண்மைகள்
அவ்வளவு கனமானவை!
வாழ்கையின் சான்றாக
"தாய்மையே வாய்மை" என்று
ஒரு வரிப்பாவில் கூறுவது பொய்யா?
ஓ! மனிதா!
ஒதுங்கித் தனித்து நின்று
ஒழிந்து - நீ
எதைச் செய்தாலும்
எப்போதும் ஊரறியச் சான்றுகள்
எண்ணிலடங்காமல் இருக்கே!

எதற்கு எதை மாற்றுவது?


தந்தையோ தன்னைப் போல
மருத்துவராக வாவென்று...
தாயோ தன்னைப் போல
பொறியியலாளராக வாவென்று...
பிள்ளையோ தனக்கு இலகுவானது
மருத்துவமும் பொறியியலும் கலந்த
உயிரித் தொழில்நுட்பம் தானென்று...
முக்கோண உச்சிகளாக
மூவரும் முரண்டு பிடிக்கையில்
எவரது உள்ளத்தில் எதை மாற்றுவது?
உலகெங்கும்
அறிவியல் வானைத் தொட
ஊரெங்கும்
மெய்யறிவு முகட்டைத் தொட
வீட்டில் பிள்ளைகள்
திரைப்பட நடிகர்கள் காட்டும் வழியில
தாங்களே பயணப்பட
எவர் போக்கில் எதை மாற்றுவது?
பெற்றவர்கள் தங்கட போக்கில
பிள்ளைகள் தங்கட போக்கில
ஊடகங்கள் தங்கட போக்கில
பள்ளிகளின் ஒழுக்கம் கிடப்பில
ஆசிரியர்கள் தங்கட நடப்பில
சிறார்கள் தாம் விரும்பிய வழியில
ஊரோ உருப்பட முடியல
நாடோ பின்னோக்கிய நடையில
நாட்டு வளம் குறுகும் நிலையில
மக்கள் வளம் தேயும் நேரத்தில
எல்லாம் அரசுப் பதவிகளில
உள்ளவர் கைகளில உருளுவதால
நாமும் ஊரும் நாடும் முன்னேற
எங்கே எதை மாற்றுவது?
நாட்டுக்கு நாடு போரோய
நாடுகளுக்கு உள்ளே போர் வெடிக்க
போராலே துண்டுகளாக நாடுகள் உடைய
நெடுநாள் ஆட்சிக்காரர் இறங்கியோட
உயிரிழப்பும் போர் முரசும் ஓயாத
எங்கட உலகில் அமைதியைப் பேண
எப்படி எதை மாற்றுவது?
வீட்டுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகிற்கு
எங்கும் எதிலும் எப்போதும்
ஒரே கோட்பாடு நடைமுறைக்கு வர
எல்லாம் மாறும் என்றாலும்
எதற்கு எதை மாற்றுவது?

தற்கொடைச் சாவுக்கு மாற்றுவழி தேடுவோம்


உலகையே அழவைத்த
நேற்றைய
முத்துக்குமாருவைப் போல
இன்றைய
பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தியும்
உலகின் முகத்தைத் திருப்ப
கண்ணீர் கதை எழுதிவிட்டார்!
"இளைஞர்களே போராடுங்கள்.
ஆனால், தயவு செய்து
உங்களின் உயிர்களை
ஈகம் (தியாகம்) செய்ய வேண்டமென
ஈழத்து யாழ் தினக்குரலில்
வைகோ கூறியிருப்பதாகப் படித்தேன்!
தன்னை ஒறுத்துச் சாவடைதலால்
உண்மையை உணர்த்தலாம்...
ஆனால்,
வெளிப்பட்ட உண்மையால் கிடைத்த
விளைச்சலைப் பயன்படுத்த
தமிழர் இல்லையெனில்
எவருக்கு நன்மை?
போராட வேண்டமென
உங்களைத் தடுக்க
எனக்கோ எள்ளளவும் உரிமையில்லை...
எப்படியிருப்பினும்
தற்கொடைச் சாவை நிறுத்தி
மாற்று வழிகளில் போராடுவதையே
பலரும் விரும்புகின்றனர்!
ஒரு தமிழன் அல்லது ஒரு தமிழிச்சி
இவ்வுலகில் வாழும் வரை
முத்துக்குமாரு, கிருஸ்ணமூர்த்தி போன்ற
தொப்புள் கொடி உறவுகள்
எல்லோரையும்
நினைவூட்டிய வண்ணமே வாழ்வர்!

எதிர்த்தான் வீழ்ந்தான்

நீண்ட நாள் எதிரி
என்னை
பிடித்துச் சிறையிலடைக்க வழியின்றி
தன்னைத் தானே அழித்த கதை
உங்களுக்குத் தெரியுமா?
மூளையைப் பாவிக்காத முட்டாள் எதிரி
எனக்கு வேண்டியதை
எவரும் வழங்காமல் செய்தும்
உறவுகளாக எவரையும்
இணைய விடாமல் தடுத்தும்
எதற்கும்
தன் காலில் விழவைத்தால்
பிடித்துச் சிறையிலடைக்கலாமென
எதிர்த்தான் வீழ்ந்தான்!
ஒர் உறவை முறிப்பதனால்
புதிதாய் எந்த உறவும்
முளைப்பதில்லை
புதிதாய் இணைந்த உறவால்
பழைய உறவுகள்
முறிவதைப் பார்க்கிறோம்
எதிரிக்கு எட்டுமா - இந்த
உண்மை!
"ஆயிரம் நண்பர்களை
வைத்துக்கொள்
ஒர் எதிரியை ஏனும்
உருவாக்கி விடாதே" என்றுரைத்த
பாவரசர் கண்ணதாசனின் வழிகாட்டலின் படி
இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!

சிவராத்திரிக்குப் பின்னாலே...

இந்துக்கள் கொண்டாடும் சிவராத்திரியின் பின்னாலே பெரிய உண்மையே மறைந்திருக்கிறது. படைத்தல் கடவுளான பிரம்மாவும் காத்தல் கடவுளான விஷ்ணுவும் தான் தான் பெரியவர் என்ற இறுமாப்பும் தலைக்கனமும் இருந்து வந்தது. இந்துக்களின் முழு முதற் கடவுளாகிய சிவன் இதனை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தார்.
சிவன் பூமிக்குக் குறுக்கே ஒளிப் பிளம்பாகத் தோன்றி இதன் அடியையோ முடியையோ முதலில் கண்டுபிடித்து வருபவரே பெரியவர் என அறிவித்தார். அவ்வழியே பிரம்மாவும் விஷ்ணுவும் போட்டியில் இறங்கினர்.
பிரம்மா பறவையாக முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் தேட முயன்றனர். இறுதியில் இருவரும் தோல்வி கண்டனர்.
விஷ்ணு தனது தோல்வியை சிவனிடம் வந்து சொன்னார். வானிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டு வந்து சாட்சியாகக் காண்பித்து முடியைக் கண்டுபிடித்தாக பிரம்மா பொய் கூறினார். எல்லாம் அறிந்த சிவனுக்கு உண்மை தெரிந்தமையால் பிரம்மாவின் விளையாட்டைக் கண்டித்தார். இருவரது இறுமாப்பும் தலைக்கனமும் சிவனின் செயலால் அடங்கியது. இச்செயலை நினைவூட்டிச் சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி ஆகும்.
சிவனுக்கு உண்மை கூறிய விஷ்ணுவுக்கு உலகெங்கும் கோவில்கள் உண்டு. சிவனுக்குப் பொய்ச் சாட்சி கூறிய தாழம்பூவை கோவிற் பூசைகளில் சேர்ப்பதுமில்லை... சிவனுக்குப் பொய் கூறிய பிரம்மாவுக்கு எங்கேனும் கோவில்களும் இல்லை. சிவராத்திரிக்குப் பின்னாலே இப்படியொரு வரலாறு மறைந்திருக்கிறது.