Wednesday, 27 November 2013

அணுகுண்டுப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரை அணுகுண்டுப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
"எல்லோருக்கும் வணக்கம்!
என்னை விட அடுத்தவர் சிறப்பாகப் பேசுவார்.
நன்றி கூறி விடை பெறுகின்றேன்." என்று பேசி முடிப்பதாலே...

அடிக்காமையால் படித்தேன்

சின்ன அகவையிலே
அம்மா தந்த அன்பால
தவறுகள் பல செய்திருப்பேன்...
பெரிய பொடியன் - எப்பனும்
சொல்லுக் கேக்கிறானில்லை என்று
அப்பாவிடம் முறையிடுவார்...
ஆனால்,
அடித்திருக்க மாட்டார்!
சொல்லியும் திருந்தாதோர்
நெருப்புக் கொள்ளியால
சுட்டும் திருந்தாதோர்
ஒரு நேரம்
பட்டுக் கெட்டுத் திருந்துவினம் என்று
சொன்னாலும் கூட
அடித்திருக்க மாட்டார்!
பட்டப்படிப்புப் படிகாட்டிலும்
உயர்தரம் வரை படித்தாச்சென
உழைப்பைத் தேடினால்
தகுதி காணாதென
வேலை கொள்வோர் தட்டிக்கழித்தனர்!
அம்மா அன்பாகச் சொல்லியும்
அப்பா அறிவாகச் சொல்லியும்
நான் மட்டும்
காதில போடாததால
வேலையும் கிடைக்காமையால
என் வயிற்றில் அடி விழுந்தது!
வயிற்றுப் பாட்டுக்கு
உழைக்க வேண்டுமெனக் கருதியே
அம்மா, அப்பா
எனக்கு அடிக்காமையே
என் வயிற்றில் அடி விழ
நானே
கணினி நுட்பம் படித்தே
உழைத்துப் பிழைக்கின்றேன்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): "வாழ்க்கைப் பாடத்தை அனுபவமே கற்றுத்தருகிறது" என்ற தங்கள் அனுபவக் கருத்து அருமை.

என் பதில்: நன்றிகள்!
நண்பர் சரவணமுத்து: அருமை!

என் பதில்: நன்றி.
நண்பர் மாலதி: நல்ல கருத்து.
என் பதில்: நன்றி
நண்பர் புலவர் சா.இராமாநுசம்:
தானாகக் கனிந்தால் தான் பழம் இனிக்கும்
தாங்களும் அப்படித் தான்
தேனான கருத்தையே நன்கே முடிவில்
தெரிவித்து உள்ளீர் இங்கே
என் பதில்:
"தானாகக் கனிந்தால் தான்
பழம் இனிக்கும்" என்பதை
ஏற்றுக் கொள்கின்றேன்!
பழம் தரும் மரத்துக்கு
நீர் ஊற்றுமாப் போல
நம்ம பிஞ்சுகளுக்கும்
பெற்றவர்கள் வழிகாட்ட வேண்டுமே!
பிஞ்சுகளும் அஞ்சாமல்
முயற்சி எடுக்க வேண்டுமே!

ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...

மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!

ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


குறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்
"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்." என்ற செய்தியைப் படித்த பின் "ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது?" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.

ஊருக்கு மதியுரை உனக்கில்லையடி


ஓர் ஊரில சிறந்த சைவ சமயப் பேச்சாளர் இருந்தார். "அவருடைய
பேச்சை நேரில பார்த்துப் பேசும் போது கேட்க வேண்டும்" என்பது
அவரது மனைவிக்கு நெடுநாள் விருப்பம். அவளது வீட்டில் இருந்து
சற்றுத் தூரத்தில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அங்கு தான்,
இன்று தனது கணவன் பேசப் போகிறாரென அறிந்த அவள், களவாகப் போய் தனது விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தாள்.

கொடி மரத்துக்கான வழிபாடு(பூசை) முடியத்தான், பிள்ளையார் கோவிலில சமயப் பேச்சுத் தொடங்கும். ஒலிபெருக்கியில் சொல்லப்படுவதை கேட்டுக் கொண்டே சோறு சமைத்து முடித்தாள். வழிபாடு முடியப் போவதை உணர்ந்து, கறிகளைப் பிறகு வந்து வைக்கலாமென முடிவு எடுத்துக் கோயிலுக்குப் புறப்பட்டாள். சிறிது நேரத்தில் பேச்சாளரின் சமயப் பேச்சுத் தொடங்கியது.

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" யில தொடங்கி "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என முடித்து
கோவிலுக்கு வருவோர் நோன்பு(விரதம்) இருந்து பிள்ளையாரை
வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென்றார். முடியாதோர்
சைவ உணவை மட்டும் உண்ணுங்கள். முட்டை, மீன், இறைச்சி
உண்பவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டாம். பச்சை இலை,
காய் கறி சமைத்து உண்பதோடு, இறைவழிபாட்டையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்றார். சைவமாக இருந்து
கொண்டு பிள்ளையாரை வழிபாட்டால் நன்மைகள் உண்டெனப்
பேச்சைத் தொடர்ந்தார்.

பேச்சாளரின் மனைவி போதுமென வீடு திரும்பி மைசூர் பருப்பு,
உருளைக் கிழங்கு, கத்தரி, வெண்டி என நாலு கறிகளும் வாழைக்காய், பப்படம் பொரியலும் வைத்து முடியப் பேச்சாளரும்
வீடு வந்து சேர்ந்தார். சரி, சரி சாப்பாட்டைப் போடுமெனக் கணவன்
குந்தவும் பெரிய தலை வாழையிலையைப் போட்டு சோறு,
கறிகளை வைத்து முடித்தாள். பருப்புக்கு மேலே இதயம் நல்லெண்ணை விடும் போது தான் "ஏனடி கோழிக் கறி வைக்கேல்லை" என்றார் பேச்சாளர்.

உங்கட பேச்சைப் பார்க்கணும் கேட்கணும் என்று இன்றைக்குப்
பிள்ளையார் கோவிலில வந்து ஒளிந்திருந்து பார்த்துக் கேட்டேன்.
அங்கே தானே "நோன்பிருங்கள், இல்லாட்டிச் சைவமாயிருங்கள்
அப்ப தான் பிள்ளையார் அருள் தருவார்" என்று சொன்னியள்.
அதனால வந்த உடனேயே "பிடித்து வைத்திருந்த கோழியைத்
திறந்து விட்டிட்டு" பதினாறு நாள் பிள்ளையார் கோவில் திருவிழா
முடியக் காய்ச்சலாமென, சைவக் கறி, சோறு வைத்தேன். இதில்
"என்ன பிழையிருக்கு?" என்றாள் பேச்சாளரின் மனைவி.

"ஊருக்கு மதியுரை(உபதேசம், ஆலோசனை) உனக்கில்லையடி! வீட்டில சொன்னதைச் செய்ய வேண்டியது தானேடி" என்று முழங்கினார் பேச்சாளர். "உங்களைப் போல பேச்சாளர்கள் இப்படி நடந்தால், உங்கட பேச்சைக் கேட்டவர்கள் என்ன செய்வார்கள்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள், மக்களாயம்(சமூகம்) தானாகவே திருந்தும்" என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதையும் கூறி "வாய்ப் பேச்சை நிறுத்திப் போட்டுச் சாப்பிடடா, இல்லாட்டி வேற பெண்டாட்டியைப் பாரடா" என்று பேச்சாளரின் மனைவியும் உறைப்பாகத் திட்டித் தீர்க்கவும் அங்கு அமைதி நிலவியது.
(எல்லாம் புனைவு - யாவும் கற்பனை)

எங்கேயங்கோ ஓடுறியள்...?

ஒருவர் : துள்ளித் துள்ளி எங்கேயங்கோ ஓடுறியள்?

மற்றவர் : கால் கோதிக்க, தலை வெடிக்க வெயிலுக்கு அஞ்சி நிழலை நாடி போகேக்க எவனோ ஒருவன் பின்னால கத்துறான்டா...

மரம் : மரங்களைத் தறிக்காமல் இருந்திருந்தால், இப்படியொரு நிலைமை உங்களுக்கு வருமே?



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மரம் வெட்டிகளுக்கு இது
ஒரு மரண வெட்டு!" என்று புலவர் இராமாநுசம் அவர்கள் கருத்துக் கூறினார்.

"வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
போட்டு உடைத்து விட்டியளே..." என்று நான் பதில் கூறினேன்.

"வீதியை (ரோடை) அகலப்படுத்தும் போது இரு பக்கத்திலும் இருக்கும் நன்கு வளர்ந்த மரங்களை தகுந்த உபகரண‌ங்களுடன் பெயர்த்து எடுத்து வேறிடத்தில் நட்டுப் பத்து வருடங்கள் வரை பாதுகாக்க முடியும் என்று கேள்விபட்டிருக்கிறேன். நம் நாட்டில் ஏன் அது போலச் செய்வதில்லை?" என்று நண்பர் ஸுகிரி அவர்கள் கருத்துக் கூறினார்.

"நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானது. ஆயினும், இவற்றுடன் தொடர்புடையவர்கள் இதில் அக்கறை காட்ட வேண்டும்." என்று நான் பதில் கூறினேன்.

நகைச்சுவையான வழக்குகள்

இலங்கையில் ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் சட்டவாளர் பலராலும்
அறியப்பட்ட ஒருவராவார். இவரின் திறமையை அறிந்து பிரிட்டிஸ்
மகாராணி கூட தனது வழக்குக் பேச அழைத்திருந்தாராம் என்றால்
இவரது புலமையை எப்படி நான் மதிப்பிடுவேன். இவர்
வழக்காடுவதில் புலி வீரன். இவர் எடுத்தாளும் எந்த வழக்கும்
தோற்றதில்லையாம்.
இலங்கை அரசு ஒருமுறை தீப்பெட்டிகளின் விலையை "ஒரு
யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என உயர்த்தியிருந்தது. ஒரு நாள்
ஒரு வணிகர் ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதைக்
கண்ட காவற்றுறை, அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்
தாக்கல் செய்திருந்து. உடனடியாகக் குறித்த வணிகர்
ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது சிக்கலை
விளக்கினார்.
வழக்கை ஆய்வு செய்யும் நாளன்று, ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள்
"ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என்பது அரச சட்டம், அரச
சட்டத்தை மீறி ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதாகக்
காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததில் தவறு
இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தனது கருத்தை வெளியிட்டார். நீதிபதி
அவர்களே! குற்றம் சுமத்தப்பட்ட வணிகர் விற்ற தீப்பெட்டியில்
இரண்டு யானைகள் இருப்பதால், "ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது
சதம்" படி இரண்டு யானைகள் உள்ள ஒரு தீப்பெட்டியை ஒரு
உரூபாவுக்கு விற்றதில் தவறில்லை என வழக்காட, நீதிபதியும்
வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
ஒரு பெண்ணின் கற்பை அழித்ததாக ஒருவரைக் காவற்றுறை
பிடித்துச் சிறையிலடைத்த பின்னர், அவருக்கு எதிராக நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்திருந்து. சிறைப்பட்டவரின் உறவினர்
உடனடியாக ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது
சிக்கலை விளக்கினார். அவரும் "நீதிமன்றிற்கு வாரும் ஆளை
வெளியில எடுத்து விடுகிறேன்" என்று சொல்லி உறவினரை
அனுப்பி வைத்தார்.
வழக்கு நாளும் வந்தது. வழக்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. நீதிபதியும் குற்றவாளி தொடர்பான சட்டவாளரை விளக்கமளிக்குமாறு அழைத்தார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் எழுந்து, நீதிபதி அவர்களே! வழக்குத் தொடர்பான முதலாமாளிடம் கேள்விகளைக் கேட்க அனுமதி தருமாறு கேட்டார். நீதிபதியும் அனுமதி வழங்கினார்.
"உமது கற்பை அழிக்கக் குற்றவாளி முயன்ற போது; நீர் தடுத்தீரா?
எதிர்த்தீரா? உமது கற்பைக் காக்கப் போராடினீரா? அப்படியானால்,
போராடியதிற்குச் சான்றாகப் புண்கள் அல்லது அடையாளங்கள்
ஏதுமுண்டா?" என்று ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கேட்ட போது
முதலாமாள் நிறைவான பதில் தராமையால் "ஊசியை ஆட்டிக்
கொண்டு நூலைக் கோர்க்க முடியாதது" போல முதலாமாளும்
குற்றவாளியும் விரும்பியோ இணங்கியோ கூடியிருக்க வேண்டும்.
ஆகையால், என் பக்கத்தாள் குற்றவாளியல்ல எனச்
சான்றுப்படுத்த(நிரூபிக்க) நீதிபதியும் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதில் என்ன நகைச்சுவை என்றால், நான் பிறக்க முன்னரே
இவ்விரு வழக்குகளும் நடந்தனவாம். சிறந்த வழக்குக் கருத்து
மோதல்களுக்கு எடுத்துக் காட்டாக பெரியவர்கள் சிலர் சொன்னதை,
நான் காதில போட்ட அளவுக்குத் தொகுத்துத் தந்துள்ளேன்.

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நகைச்சுவையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டிய இந்த வழக்காளர் குற்றத்திற்கு ஆதரவாக வாதாடியிருக்கிறாரே!

என் பதில்: உங்கள் கருத்து மிகவும் சரி. குறித்த வழக்காளர்/சட்டவாளர் தனது திறமையால் பல குற்றவாளிகளைக் காப்பாற்றியது தவறு தான். இவரது வழக்காடும் திறனை நினைவூட்டலாம்.

சட்டம் படிக்கின்றவர்கள் இவரைப் போன்றவர்களின் வழக்காடும் திறனைப் பொறுக்கித் தமது புலமையைப் பெருக்கலாமென நினைக்கின்றேன்.

நகைச்சுவைக் கதை

உச்சந்தலை வெடிக்க
தலைக்கு மேலே கதிரவன் இருக்க
சிறுகுடல் பெருங்குடலை
பிடுங்கித் தின்னுமளவுக்கு
நம்மாளுகளுக்கு பசி!
செல்லும் வழியெல்லாம்
சாப்பாட்டுக்கடையைத் தேடியவர்களுக்கு
ஆங்கோர் கடை அகப்பட
நுழைந்து சாப்பிட அமர்ந்தாச்சு!
கட்டணத்தைக் கட்டிப்போட்டு
விரும்பிய சாப்பாட்டை
வேண்டிச் சாப்பிடலாமென
பணியாளர் சொல்லவும்
ஆளுக்காள் பணமில்லையென
கையை விரித்து
தலையைச் சொறிந்துகொண்டு
கடையை விட்டு
வெளியேறத்தான் முடிந்தது!
சாப்பிட்டு முடியப் பணம் கட்டுற
சாப்பாட்டுக்கடையைத் தேடி
கண்டுபிடித்துச் சாப்பிட்டுமாச்சு!
ஆளுக்காள்
பணம் செலுத்துவதற்குப் போட்ட
நாடகம் எப்படி இருந்திருக்கும்?
அந்த ஐயா
என்ர கணக்கைச் செலுத்துவாரென
பெரியவர் ஒருவரைக் காட்டிப்போட்டு
முன்பக்கமாக ஒருவர்
விவேக்கைப் போல தப்பினார்!
ஒண்டுக்கு
ஒருக்கால் போட்டு வாறனென
பின்பக்கமாக ஒருவர்
வடிவேலுவைப் போல தப்பினார்!
சந்தானம் போல ஒருவர்
"அண்ணே!
கண்ணிலே என்ன மீசை!" என
நுழைவு வழியால
வந்தவரிடம் கேட்டுத் தப்பியோட...
"என்ர பணத்தை
பிடுங்கிக் கொண்டு போறனுங்க" என
செந்திலைப் போல ஒருவர்
ஒப்பாரி வைத்துத் தப்பிக்க
முயன்ற வேளை
காவலாளி ஊதுகுழலை ஊத
படையினர் சுற்றிவளைத்து
எல்லோரையும் பிடித்த போதுதான்
படையினரின் கடையென்று அறிந்து
நம்மாளுகளும் முளிக்கின்றனர்!

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நண்பர்கள் இருந்தால் கவலையில்லை. எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்

என் பதில்: உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால், கை நிரம்பப் பணம் இருக்க வேண்டுமே!

நண்பர் ஸுகிரி: அப்புறம் அவர்களுக்கு என்ன மாதிரி தண்டனை கிடைத்தது? அரிசில கல்லை பொறுக்கினாங்களா, இல்லை ரவைல வண்ட எடுத்தாங்களா?

என் பதில்: அடுத்து அவர்களுக்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அதனைப் பார்க்க நான் அங்கு இல்லையே!

நண்பர் சரவணமுத்து: என்ன தண்டனை கிடைத்தால் என்ன? சாப்பாடு தான் சாப்பிட்டு முடிச்சாச்சுலப்பா!!!!!!!

என் பதில்: பணமிருந்தால் கடைப் பக்கம் போகலாமென இக்கதை சொல்லுகிறது.

நண்பர் விஷ்வம்: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

என் பதில்:
உண்மை! ஆனால், பணமில்லாமல் சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தால்.....

சேமிப்பில் ஏதுமில்லை என்றால்...


சிறுகச் சிறுக
உழைத்ததெல்லாம்
பணமாக வைப்பிலிடாமல்
நிலமாக வேண்டி விட்டதால்...
வைப்பகங்கள்(வங்கிகள்)
சோர்வுற்று மூடப்பட்டாலும்
திருடர்களால் திருட்டுப் போகாமலும்
எனது பணம் நிலமாக மின்னுகிறது!
வட்டி வரும் குட்டி போடுமென
வைப்பகங்களில்
பணத்தைப் போட்டவர்கள்
கரைத்துப் போட்டு
வெறும் கையோடு வாடுகின்றனர்!
சேமிப்பு என்பது
கரையும் முதலீடாக இருக்கவே கூடாது...
பணம் குட்டி போட்டாலும்
நிலம் குட்டி போடாது...
சேமிப்பின் அளவைப் பொறுத்தே
முதுமை நெருங்கிய வேளை
தோள் கொடுக்க வருவோரை
எண்ணிப் பார்க்கலாம்!
சேமிப்பில் ஏதுமில்லை என்றால்
உயிர் பிரிந்த உடலைக் கூட
சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல
எண்ணிப் பாரும் எவர் வருவார்?

சுழியோடினால் தான் கிடைக்கும்

வாழ்க்கை என்பது
வழுக்கி விழுத்தும் சேற்றில்
நடப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
கரடு முரடான வழியில்
புரண்டு உருண்டு
பயணிப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
உறவும் வரும் பிரிவும் வரும்
நிலையாக எவரும் வராத
உறவுகளோடு தான்...
வாழ்க்கை என்பது
கற்று முடிந்ததும் வாழ்வதல்ல
வாழ்ந்து கொண்டே
கற்றுக் கொள்வது தான்...
வாழ்க்கை என்பது
முடிவே இல்லாத
கரையைத் தொட முடியாத
துன்பக் கடல் தான் - அதில்
சுழியோடித்தான்
மகிழ்ச்சி எனும் தேனை
அள்ளிப் பருக முடியும்!

சாப்பாடு போடுறாங்கோ

ஒருவர் : அவங்கட வீட்டில நாய்களைப் போல ஆட்களும் அடிபடுறாங்களே...

மற்றவர் : அந்த வீட்டு ஆச்சி, தனது 170 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதாலே சாப்பாடு(அன்ன தானம்) போடுறாங்கோ... எங்கையும் நம்மாளுகள் உப்பிடித் தானுங்கோ...