Friday, 18 October 2013

காலும் கழிந்தால் முழுமையாக...

நாற்சந்தியில் சிலர் கூடி வாய்காட்டுவது வழக்கம். அப்படிச் சிலர் நடித்த நாடகம் இது.


ஒரு மாலைப் பொழுது... ஒன்று சேர்ந்த நண்பர்கள் நாற்சந்தியால போன அரைகுறை ஆடை அணிந்த குமரியைக் கண்டிட்டாங்க... உடனே நண்பர்கள் வாய்காட்ட வெளிக்கிட்டிட்டாங்க...

முதலாமாள்: ஆள் பாதி ஆடை பாதி என்றால் என்னங்க...

இரண்டாமாள்: விளம்பர நடிகைகள் கால் பங்கு
ஆடையோட முக்கால் பங்கு உடலைக் காட்டுறாங்களே...

மூன்றாமாள்: காலும் கழிந்தால் முழுமையாகத்
தெரியும். ஆனால், அதுகளைப் பார்க்காதீங்க...

முதலாமாள்:
அட முழு முட்டாளுகளே!
அறிவைப் பாவிப்பது அரைப் பங்கடா...
மிடுக்கான ஆடை அணிவது அரைப் பங்கடா...
அப்ப தானடா,
அரையும் அரையும் முழுமையடா!

இரண்டாமாள்: உது நேர் முகத் தேர்வுக்குத் தானடா...

மூன்றாமாள்: வாழ்க்கையிலும் பாவித்துப் பாரேன், உலகம் உன் காலடியில் வீழும்!

ஈற்றில் சரி! சரி! இருள் இறங்கிற நேரம் வந்தாச்சு... என எல்லோரும் வீட்டுக்குப் புறப்படலாமெனக் கலைந்து சென்றனர். 

பள்ளிக்கு வெட்டியதால் தொழிலுக்கு அலைகின்றேன்...


பள்ளிக்குப் போனால் படிப்பெல்லோ
பள்ளிக்கு ஒளித்தால்
செய்தி என்னவாயிருக்கும்?
பிள்ளைகளைக் கேட்டால்
பெற்றவர்களுக்கு
உண்மை சொல்லுங்களோ?
படிப்புக் கொஞ்சம் புளிக்கலாம்...
ஆசிரியர் அடிக்கலாமென அஞ்சலாம்...
கெட்ட நட்புடன் சுற்றலாம்...
காதல் நோயால் அலையலாம்...
உண்மையில்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்...
பதின்ம அகவை
அப்படி, இப்படி இழுக்கலாம்...
தேர்வெழுத அஞ்சி
நானும் சி்ன்ன அகவையில்
பள்ளிக்குப் போவதை வெட்டியதால்
இன்றைக்கு - நானும்
தொழில் தேடி அலைகின்றேன்...
பள்ளிக்கு ஒளித்து
தேர்வுப் புள்ளியில் முட்டை
வாங்க விரும்புவோரே
என் நிலைமை உங்களுக்கும் வர வேண்டாம்!
என்றாலும்
"கற்றோர்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு" என்பதை
உங்கள் காதுகளில் போட்டுடைக்கின்றேன்!

உண்மையை உணர்ந்து

சித்திரையாள் வருகின்றாள்...
இத்தரையில் நல்லன கிடைக்குமா?
வேற்றுமையை விரட்டியே
ஒற்றுமையை வழங்குவாளா?
சமனிலையைப் பேணி
அமைதியைப் பேண உதவுவாளா?
இதற்கெல்லாம்
சித்திரையாள் பணியமாட்டாள்
இவற்றையெல்லாம்
தரைவாழ் மக்களே
தாங்களாகவே செய்யட்டுமென
வானிலிருந்து கையைவிரிப்பாளா?
எதற்கும் நாமே
சித்திரைப் புத்தாண்டிலிருந்தே
உண்மையை உணர்ந்து
நல்லனவெல்லாம் செய்வோம்!

சாவுக்குப் போர் வேண்டாம்!

நல்ல தமிழைப் பேணி
தமிழர் வாழ வேண்டும்...
நல்லபடி தமிழர் வாழ்ந்தால்
உலகின் நாலா பக்கமும்
ஏன் எட்டுத் திக்குமே
நற்றமிழ் பேண இடமுண்டு...
இப்படி எத்தனையோ
எண்ணங்களைச் சுமந்து போராடும்
தோழர்களே! தோழிகளே!
தமிழர் சாவடைந்த பின்னர்
தமிழருக்கு நன்மை கிடைத்து
என்ன பயன்?
வழக்கற்றுப் போகும் உலக மொழிகளில்
தமிழும் உள்ளடங்கக் கூடாதென
தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழுமென
போராடிப் பெற்ற அறுவடையை
பயனீட்ட வாழ்ந்து கொண்டு
போராட முயற்சி எடுப்போமே!

உறவுகள்

அன்புத் தோழர்களே... தோழிகளே...
தேவைகளைத் தேடி
நாங்கள்
அங்காடியில் மட்டும் ஒன்றுகூடவில்லையே
மக்களாயத்தையும்
நாடிய வண்ணமே வாழ்கின்றோம்!
வழங்குவோரும் வாங்குவோரும்
ஒன்றுகூடினால் வணிகம் மட்டுமல்ல
நல்லுறவும் மலருமே!
ஒன்றையும் கொடுத்துப் பெறாமலே
நல்லுறவாய் இருக்குறோம் என்றால்
பொய் தானே!
நம்மை அறியாமலே
நாங்களே
அன்பை, அறிவை, மதிப்பை மட்டுமல்ல
கற்போடு பழகி, பண்பாட்டைப் பேணி, உதவிகள் செய்து
அடுத்தவர் உள்ளத்தை உரசுவதனாலேயே
உறவுகள் ஆகின்றோம் என்பது
மெய் தானே!

தேர்தல் காலங்களில்...

கரும்பு தின்னக் கூலியா வேணும்!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேணும்!
உண்மையை ஏற்றுக் கொள்ள வேணும்!
ஒன்றை மட்டும் அறிய வேணும்!
"வாக்குகளை விற்காது இருக்கணும்!"

சிலருக்குத் தான்


நித்திரை வந்தால் பாய் வேண்டாம்
பசி வந்தால் கறி வேண்டாம்
சிலருக்குத் தான்...
தலையிடியும் காய்ச்சலும்
தனக்கு வந்த பின்னர்
சொன்னவர்களின் உண்மை இது!

கடன் பற்றிய துளிப்பாக்கள்(ஹைக்கூக்கள்)

வாங்கேக்க இனிப்பது கொடுக்கேக்க புளிக்கிறது
மகிழ்வாய் வேண்டிக் கொடுக்கேலாட்டிச் சாகிறது
"கடன்காரன் கேட்கையில்..."

கடன் வேண்டிக் களியாட்டம் போடலாம்
கடன்காரன் நெருக்கினால் தான் திண்டாட்டம்
"உறவுக்குப் பகை கடன்!"


கை வளம்(கை விஷேடம்)

ஒருவர் : புத்தாண்டு காலத்தில் என்ன ஓய்வில்லாத வேலை?

மற்றவர்: இன்றைக்கு உழைத்தால் கோடி பணம் ஈட்டலாம்!

முதலாமாள்: ஏப்படி? எப்படி?

இரண்டாமாள்: கை வளம் நேரம் பார்த்து வீட்டுக்கு வீடு கையேந்தப் போவதாலே...

கை வளம்(கை விஷேடம்)


சிலரது கையால் சிறு தொகைப் பணம் வேண்டி காசுப் பெட்டிக்குள் வைத்த பின்னர், வணிகமோ கொடுக்கல் வாங்கலோ எல்லோரும் செய்வது வழக்கம். இதற்குப் புத்தாண்டு பிறந்த பின்னர் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இச் சிறப்பு நேரத்தில் பணமுதலைகள், ஏழை முகங்கள் பாராது தங்கள் விருப்புக்குரிய உள்ளங்களிடம் பலர் கையேந்தி நிற்பர். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம்(கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது.