Friday, 15 November 2013

பழகுவதும் பிரிவதும்

பழகு முன் பல ஐயங்கள்...
பழகிய பின் பல விருப்பங்கள்...
இறுக்கமான நெஞ்சையும்
நறுக்காக இழகவைத்தே
நெருங்கிப் பழகிய பின்
நெருக்கமின்றி விலகுதல் பிரிவா?
ஓ! உறவே!
ஒரு முறை எண்ணிப்பார்...
பழகுவதை விடப் பிரிவது சுகமா?
என் நிலையில்
பழகுவதும் பிரிவதும் முறையல்ல...
ஓ! உறவே!
பிரிவது சுகம் என்றால்
என்னோடு பழகாதே!
ஏனென்றால் - நான்
பிரிவைச் சுமக்க விரும்பவில்லை!

பீரங்கிப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரைப் பீரங்கிப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
                    ஆள் (அலறினால்) மேடையில் பேசத் தொடங்கினால் அரங்கிற்கு வந்தவர்கள் ஓட்டம் பிடிப்பினம்...
அது தான்...

பழம் தின்று கொட்டை போட்டவர்கள்

"நாம் கற்றது
கைப்பிடி மண்ணளவு
கற்க வேண்டியது
உலகளவு" ஆக இருக்கையில்
நாளுக்கு நாள்
நாம் எத்தனையோ
கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
"பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பென்று" என்ற
பாடல் வரிகளை நினைவுபடுத்தி
எதற்கும் முகம் கொடுத்துப் பழக
நாமே தான்
முயற்சி எடுக்கணுமே!
பழம் தின்று
கொட்டை போட்டவர்களைப் பார்த்தாவது
நேற்றைக்கு முந்திய நாள்
பெய்த மழையைக் கண்டு
நேற்று முளைத்த காளான்கள்
இன்று தங்களைச் சரிபார்க்கலாமே!
படித்தறிவு என்பது படவரைபு போல
பட்டறிவு என்பது
ஒருமுறை உண்மையை
நேரில் கண்ட தெளிவு!
படித்தவர்களை அணைப்பது போல
பட்டறிவாளர்களையும்
அணைத்துச் சென்றால் தானே
வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்!

குறிப்பு:- நேற்று முளைத்த காளான்கள் - பிஞ்சுகள் (படித்தறிவு, பட்டறிவில் சிறியோர்); பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - பழங்கள் (படித்தறிவு, பட்டறிவில் பெரியோர்) எனப் பொருட்படுத்துக.

வருவாய் (சீதனம்) கொடுத்தால் தானா காதல் வரும்...

ஓராள் நடிப்பது தனியாள் நாடகம். அப்ப, இரண்டாள் நடிப்பது ஈராள் நாடகமோ? என்னவோ, இரண்டாள் சேர்ந்து இப்படி நடிக்கிறாங்க...

கந்தன் : இஞ்சாருங்கோ... நீங்கள் திருமணம் (கலியாணம்) செய்யவில்லையா?

கணபதி : இல்லை. காதலித்த பத்தில ஒன்றேனும் வருவாய் (சீதனம்) தரவில்லை... அதனால முடியல...

கந்தன் : திருமணம் (கலியாணம்) செய்யாமல் எப்படித்தான் காலம் தள்ளப் போகிறியோ தெரியவில்லையே!

கணபதி : துயரப்படாதீங்க... இன்னும் இருபதைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேனே...

கந்தன் : அதில, ஒன்றாவது வருவாய் (சீதனம்) தருமென நம்புகிறாயா?

கணபதி : எவராச்சும் வருவாய் (சீதனம்) தரமுடியாவிடின் திருமணம் (கலியாணம்) செய்யமாட்டேனே!

ஈராள் நாடகம் எப்படி? இந்தக் காலத்துப் பொடியள் இப்படித்தான். பொடிச்சிகளே! கொஞ்சம் ஏமாறாமல் தப்பிக்கலாமே!

Monday, 11 November 2013

வீட்டுக்கு வீடு வாசற்படி

நம்ம வீட்டுக் கதைகளை மூடிக்கொண்டு
நாங்க அடுத்தவர் வீட்டுக் கதைகளைப் பேசுறம்
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

மாற்றான் வீட்டுப் பிள்ளையில பிழை என்கிறம்
எங்க வீட்டுப் பிள்ளை என்ன தங்கமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

நம்ம வீட்டு வரவைப் பார்க்கிறம்
அடுத்தவர் வீட்டுச் செலவை மதிக்கிறோமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:

"வீட்டுக்கு வீடு வாசற்படி தான் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கேட்டது
நம்ம பையன் குறும்பு பண்ணா அவன் சுட்டிப்பையன்
அடுத்த வீட்டு பையன் குறும்பு பண்ணா அவன் தறுதல
நம்ம பெண் அதிகம் பேசினால் அவள் கலகலப்பானவள்
அடுத்த வீட்டு பெண் அதிகம் பேசினால் அவள் வாயாடி
நாம் தப்பு பண்ணா மறைக்கப்பார்ப்போம்
அடுத்தவர் தப்பு பண்ணா குத்திக்காட்டுவோம்" என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

"நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வு வந்தால் வீட்டுக்கு வீடு இப்படி நிகழாது!" என்று நானும் பதிலளித்தேன்.

பணமீட்ட

ஒருவர் : பணமீட்ட என்ன வழி பண்ணலாம்?

மற்றவர் : மாற்றார் பணத்தைக் களவாடலாமே!

மூன்றாமாள் : பிடிபட்டால் என்ன செய்வாய்?

நான்காமாள் : 'களவும் கற்று மற' ந்தாச்சு என்போம்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மூன்றாமாள் ?
நான்காமாள் ?
இப்போதெல்லாம் இத்தொழிலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. என்பதை பத்திரிகையில் பல பெண்கள் களவு, மோசடியில் பிடிபடுவதை வைத்துத் தெரிந்துகொள்ள முடிகிறது." என்று நண்பர்
வினோத் (கன்னியாகுமரி) தெரிவித்திருந்தார்.

"ஆண், பெண் சமவலு இத்தொழிலிலும் தான்... பல நாட் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவானே!" என்று நானும் பதிலளித்தேன்

வெற்றி பற்றி

முடியாததற்கு முழுக்குப் போடு
முடிந்ததற்கு முயற்சி எடு
"வெற்றியுனை நாடும்"

போட்டியில் உன்னை முந்துவோரும்
போட்டியில் உன்னைத் துரத்துவோரும்
"உனது வெற்றியின் பின்னூட்டிகள்"

கள நிலையும் முயற்ச்சி எடுத்தலும்
ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்
"இரண்டும் வெற்றியின் தளம்"

வேலையில்லாமல் பிச்சை எடுக்கையில்...

ஒருவர் : என்னங்க... அந்தக் குண்டுமாமாவிட்ட ஒருவருமே பிச்சை கேட்க மாட்டேங்கிறாங்க...

மற்றவர் : நாள் முழுக்க வீட்டில வேலையைச் செய்ய வைச்சிட்டு, அதற்கீடாக நாட்கூலியை வழங்குவதாலே...

மூன்றாமவர் : குண்டுமாமா போல எல்லோரும் இருந்து விட்டால் பிச்சைக்காரரை ஒழித்துவிடலாம் போலிருக்கே...

நெருக்கடியும் நண்பர்களும்

வணக்கம் நண்பர்களே!

எனக்கும் 
கொஞ்ச நண்பர்கள் இருந்தாங்க...
கொஞ்ச நாளாய் 
என்னிடம் காசில்லை என்றதும்
என் நிழல் போல நின்றவர்கள்
எனக்குக் கிட்ட நில்லாமலே
எப்படியோ ஓடி மறைந்திட்டாங்களே!

நண்பர்களே!
நண்பன் பற்றி - உங்கள்
உள்ளம் திறந்து சொல்லுங்களேன்!
கள்ளம் இல்லா நண்பன் என்றால்
நெருக்கடி நிலை (ஆபத்து) வந்தால்
கைகுலுக்க நெருங்குவானே!
நெருக்கடி நிலையைக் (ஆபத்தைக்) கண்டால்
நம்மைக் காணாதவர் போல
ஓட்டம் பிடிப்பவர் எல்லோரும்
நண்பரென நான் கண்டறியேன்!


Thursday, 7 November 2013

கத்திக்கு வேலை

வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, பயணித்த ஊர்தி எப்பனும் நகரவேயில்லை. "வேலைக்கு நேரம் போகப் போகுதே" என்று ஆளுக்காள் ஒரே கூப்பாடு. ஓட்டுநரையும் நடத்துநரையும் பார்த்து "ஊர்தி ஏன் நகரவேயில்லை" என்று கேட்ட போது "கொஞ்சம் இறங்கிப் பாருங்களேன்" என்றனர். சொன்ன உடனேயே சிலர் "என்ன நடக்கிறது" என்று பார்க்கத் துள்ளிக் குதித்து இறங்கினர்.
தெருவின் இருமருங்கிலும் விடுப்புப் பார்ப்போர் ஏராளம். சீனவெடி கொழுத்திக் கொண்டு சிலர் முதல் நிரையில் நகர்ந்தனர். இடையிடையே சிலர் "தலைக்கு மேலே வெடிக்கும்" வாணவெடிகளையும் கொழுத்திச் சென்றனர். "நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சுத் துணிவிருந்தால்" என்ற பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க "டங்கு டக்கு" எனத் தவிலடிக்க இரண்டாவதாக நகருவது கண்ணன் மேளதாளக் குழுவினர் என்றனர். "தா தெய், தாம் தகிட தோம்" என்ற தாளக்கட்டுக்கு அமைவாய் கண்ணகி நாட்டியப் பெண்கள் குழு நிலமதிர ஆட்டம் போட்டவாறு மூன்றாவதாய் நகர்ந்தனர்.
கடைசியாகக் கதாநாயகர்களுக்கு உயர்ந்த நிலையில் மதிப்பளிக்கப்பட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அதுவும் உழவு இயந்திரப் பெட்டியில் கட்டிலைப் போட்டு அதற்கு மேலே அவர்களை நிற்க வைத்திருந்தனர். அவர்களது கழுத்துக்கு ஐம்பது பவுண் தங்கப் பதக்கம் சங்கிலி தேடாக் கயிறு மொத்தத்தில போட்டு இருந்தனர். போதாக்குறைக்கு நீண்ட மலர் மாலையும் அணிவித்து இருந்தனர். ஊர்ப் பெரியவர் வந்து போக்குவரவுக்கு இடையூறு விளைவிக்காமல் ஊர்வலத்தை ஓர் ஓரமாக ஒதுக்கினார்.
ஓட்டுநரும் நடத்துநரும் "ஆட்டுக் கடா ஊர்வலம் பார்த்தது போதும் ஊர்தியில் வந்தேறுங்கோ" என அழைத்தனர். ஊர்தி நகர, நகர ஆட்டைப் பார்த்த நம்மாளுகள் ஓடி, ஓடி வந்து தொற்றி ஏறினர். ஊர்திக்குள்ள நம்மாளுகள் ஏறினால் மிச்சம் சொல்லவும் வேண்டுமா?
"தளபதி போலத் தாடி வைத்த, செவி மடிந்து தொங்க, மான் கொம்பு போல நீண்ட கொம்பு வைத்த, எவ்வளவு பெரிய, உயரமான ஆட்டுக் கடாவை இவ்வளவு மதிப்பளித்துக் கொண்டு செல்கிறாங்களே" என்று ஆளுக்காள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தீர்க்கத் தொடங்கினர்.
ஊர்க் கோடியிலுள்ள ஒரு கோவிலில, ஆண்டுக் கணக்கில இப்படி வளர்த்த ஆட்டுக் கடாக்களை, இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு போய்ச் சேர்த்து, கோவில் வாசலில வைத்து ஆட்டைக் கிடத்திப் போட்டு, கத்திக்கு வேலை கொடுப்பாங்கள். இதற்காக மாதக் கணக்கில கத்தியைத் தீட்டீ வைத்திருப்பாங்கள். அதாவது ஒரே வெட்டில, தலை வேறு முண்டம் வேறாக வெட்டியதும் பாயும் குருதியை(இரத்தத்தை) கடவுளின்(சிலையின் முகத்துக்கு) பக்கமாகத் தெறிக்கக் கூடியதாக வடிவமைத்துச் செய்வாங்கள்.
தங்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, குறித்த கடவுளுக்கு குருதிச் சாவு(இரத்தப் பலி) கொடுக்க வேண்டுமென்பது சிலரது நம்பிக்கை. இதன்படிக்கு, இவ்வாறு ஆடு, கோழி வெட்டும் நிகழ்வை 'வேள்வி' என்று அழைப்பாங்கள். வேள்விக்குக் கழுத்தைக் கொடுக்க இருக்கின்ற ஆட்டுக் கடாவுக்கும் சேவற் கோழிக்கும் இவ்வளவு மதிப்பா? என்றெல்லாம் அறியாத, தெரியாத பலர் ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, ஊர்தியும் நிறுத்தப்பட, நானும் இறங்கி விட்டேன்.
ஊர்தியில் பக்கத்து இருக்கையில் இருந்த அகவை(வயது) எண்பது மதிக்கூடிய ஒருவர் "கோவிலில வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னேலாது. ஆனால், வீட்டுப் பக்கமாக வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னலாம்" என்று துயரப்பட்டது நினைவுக்கு வந்தது. இப்பேற்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தான் சரி.
அறிவியலில் முன்னேற்றமடைந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் தங்கள் புத்தியைத் தீட்டி வேள்விகளை நிறுத்தாவிடில் கடவுளுக்குக் குருதிப் படையலென ஆடு, கோழி வெட்டுறது தொடருமென எண்ணியவாறு எனது செயலகத்திற்கு நுழைந்து என் பணியைத் தொடரப் பிந்திப் போச்சு.
(எல்லாம் புனைவு/ யாவும் கற்பனை)